BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. சுந்தர சோழரின் பிரமை   Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. சுந்தர சோழரின் பிரமை

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. சுந்தர சோழரின் பிரமை   Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. சுந்தர சோழரின் பிரமை    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. சுந்தர சோழரின் பிரமை   Icon_minitimeTue May 10, 2011 3:57 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

16. சுந்தர சோழரின் பிரமை




மறுநாள் காலையில் சுந்தர சோழ சக்கரவர்த்தி தம் அருமைக் குமாரியை அழைத்துவரச் செய்தார். ஏவலாளர் தாதிமார், வைத்தியர் அனைவரையும் தூரமாகப் போயிருக்கும் படி கட்டளையிட்டார். குந்தவையைத் தம் அருகில் உட்கார வைத்துக்கொண்டு அன்புடன் முதுகைத் தடவிக் கொடுத்தார். அவர் சொல்ல விரும்பியதைச் சொல்ல முடியாமல் தத்தளிக்கிறார் என்பதைக் குந்தவை தெரிந்து கொண்டாள்.

"அப்பா! என்பேரில் கோபமா?" என்று கேட்டாள்.

சுந்தர சோழரின் கண்களில் கண்ணீர் துளித்தது.

"உன் பேரில் எதற்கு அம்மா, கோபம்?" என்றார்.

"தங்கள் கட்டளையை மீறித் தஞ்சாவூருக்கு வந்ததற்காகத் தான்!"

"ஆமாம்; என் கட்டளையை மீறி நீ வந்திருக்கக்கூடாது; இந்தத் தஞ்சாவூர் அரண்மனை இளம் பெண்கள் வசிப்பதற்கு ஏற்றதல்ல. இது நேற்று இராத்திரி நடந்த சம்பவத்திலிருந்து உனக்கே தெரிந்திருக்கும்."

"எந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள், அப்பா?"

"அந்தக் கொடும்பாளூர்ப் பெண் மூர்ச்சையடைந்ததைப் பற்றித்தான் சொல்லுகிறேன் அந்தப் பெண்ணுக்கு இப்போது உடம்பு எப்படியிருக்கிறது?"

"அவளுக்கு இன்றைக்கு ஒன்றுமேயில்லை, அப்பா! பழையாறையிலும் அடிக்கடி இவள் இப்படிப் பிரக்ஞை இழப்பது உண்டு. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சரியாகப் போய்விடும்."

"அவளைக் கேட்டாயா, அம்மா? இராத்திரி இந்த அரண்மனையில் அவள் ஏதேனும் கண்டதாகவோ, கேட்டதாகவோ சொல்லவில்லையா?"

குந்தவை சற்று யோசித்துவிட்டு, "ஆம், அப்பா! நாங்கள் எல்லோரும் துர்க்கை ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அவள் தனியாக மேல்மாடத்துக்குப் போகப் பார்த்தாளாம். அப்போது யாரோ பரிதாபமாகப் புலம்புவது போலக் கேட்டதாம். அது அவளுக்குப் பயத்தை உண்டாக்கியதாகச் சொன்னாள்" என்றாள்.

"அப்படித்தான் நானும் நினைத்தேன். இப்போதேனும் அறிந்தாயா, குழந்தாய் ? இந்த அரண்மனையில் பேய் உலாவுகிறது. நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். போய் விடுங்கள்!" என்று சுந்தர சோழர் கூறியபோது அவர் உடல் நடுங்குவதையும், அவருடைய கண்கள் வெறித்தபடி எங்கேயோ பார்ப்பதையும் குந்தவை கவனித்தாள்.

"அப்பா! அப்படியானால் தாங்கள்மட்டும் இங்கே எதற்காக இருக்க வேண்டும்? அம்மா இங்கே எதற்காக இருக்க வேண்டும்? எல்லோரும் பழையாறைக்கே போய் விடலாமே! இங்கே வந்ததினால் உங்கள் உடம்பு குணமாயிருப்பதாகவும் தெரியவில்லையே?" என்றாள்.

சக்கரவர்த்தி துயரம் தோய்ந்த புன்னகை புரிந்து, "என் உடம்பு இனிமேல் குணமாவது ஏது? அந்த ஆசை எனக்குக் கொஞ்சமும் கிடையாது", என்றார்.

"அப்படி ஏன் நிராசை அடையவேண்டும்? அப்பா! பழையாறை வைத்தியர் தங்கள் உடம்பைக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்."

"அவர் சொல்வதை நம்பி நீயும் இலங்கையிலிருந்து மூலிகை கொண்டு வர ஆள் அனுப்பியிருக்கிறாயாம்! நான் கேள்விப்பட்டேன். மகளே! என் பேரில் உனக்குள்ள பாசத்தை அது காட்டுகிறது."

"தந்தையிடம் மகள் பாசம் கொண்டிருப்பது தவறா, அப்பா?"

"அதில் தவறு ஒன்றுமில்லை. இப்படிப்பட்ட வாஞ்சையுள்ள புதல்வியைப் பெற்றேனே, அது என் பாக்கியம். இலங்கையிலிருந்து மூலிகை கொண்டுவர நீ ஆள் அனுப்பியதிலும் தவறில்லை. ஆனால் இலங்கையிலிருந்து மூலிகை வந்தாலும் சரி, சாவகத் தீவிலிருந்து வந்தாலும் சரி, தேவலோகத்திலிருந்து அமுதமே வந்தாலும் சரி, எனக்கு உடம்பு இந்த ஜன்மத்தில் குணமாகப் போவதில்லை..."

"ஐயையோ! அப்படிச் சொல்லாதீர்கள்!" என்றாள் இளவரசி.

"என் கட்டளையையும் மீறி நீ இங்கு வந்தாயே, அம்மா! அதற்காக உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நாள் என் மனத்தைத் திறந்து உன்னிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. சொல்கிறேன், கேள்! உடம்பைப் பற்றிய வியாதியிருந்தால் மூலிகை மருந்துகளினால் தீரும். என்னுடைய நோய் உடம்பைப் பற்றியதல்ல; மனக் கவலைக்கு மருந்து ஏது?"

"தந்தையே, மூன்றுலகம் ஆளும் சக்கரவர்த்தியாகிய தங்களுக்கு அப்படி என்ன தீராத மனக்கவலை இருக்க முடியும்?"

"கவிகளுடைய அதிசயோக்தியான கற்பனையை நீயும் சொல்கிறாய், குழந்தாய்! நான் மூன்று உலகம் ஆளும் சக்கரவர்த்தியல்ல; ஒரு உலகம் முழுவதும் ஆளுகிறவனும் அல்ல. உலகத்தில் ஒரு மூலையில் சிறு பகுதி என் இராஜ்யம். இதன் பாரத்தையே என்னால் சுமக்க முடியவில்லை..."

"தாங்கள் ஏன் சுமக்க வேண்டும், அப்பா! இராஜ்ய பாரத்தைச் சுமப்பதற்குத் தகுந்தவர்கள் இல்லையா? மணி மணியாக இரண்டு புதல்வர்கள் தங்களுக்கு இருக்கிறார்கள். இருவரும் இரண்டு சிங்கக் குட்டிகள்; வீராதி வீரர்கள். எப்படிப்பட்ட பாரத்தையும் தாங்கக் கூடியவர்கள்..."

"மகளே! அதை நினைத்தால்தான் எனக்கு நெஞ்சு பகீர் என்கிறது. உன் சகோதரர்கள் இருவரும் இணையில்லா வீரர்கள்தான். உன்னைப் போலவே அவர்களையும் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தேன். அவர்களுக்கு இந்த இராஜ்யத்தைக் கொடுத்தால் நன்மை செய்கிறவனாவேனா என்று சந்தேகப்படுகிறேன். இராஜ்யத்துடன் பெரியதொரு சாபக்கேட்டையும் அவர்களிடம் ஒப்புவித்து விட்டுப் போவது நல்லதென்று சொல்வாயா?"

"அப்படி என்ன சாபக்கேடு இருக்க முடியும், இந்த ராஜ்யத்திற்கு? புறாவுக்காகச் சதையை அளித்த சிபியும், கன்றுக்குட்டிக்காக மகனை அளித்த மனுநீதிச் சோழரும் நம் குலத்து முன்னோர்கள். 'கரிகால் வளவரும், பெருநற்கிள்ளியும் இந்த ராஜ்யத்தை ஆண்டவர்கள். திருமேனியில் தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த வீர விஜயாலய சோழர் இந்தச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். காவேரி நதி தீரத்தில் நூற்றெட்டு ஆலயங்கள் எடுப்பித்த ஆதித்த சோழரும், சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்து, பொன்னம்பலமாக்கிய பராந்தகரும் இந்த ராஜ்யத்தை விஸ்தரித்தார்கள். அன்பே சிவம் எனக்கண்டு, அன்பும் சிவமும் தாமாகவே வீற்றிருந்த கண்டராதித்தர் அரசு புரிந்த தர்ம மகாராஜ்யம் இது. இப்படிப்பட்ட ராஜ்யத்திற்குச் சாபக்கேடு என்ன இருக்க முடியும்? அப்பா! தாங்கள் ஏதோ மனப் பிரமையில் இருக்கிறீர்கள்! இந்தத் தஞ்சாவூர்க் கோட்டையை விட்டுத் தாங்கள் புறப்பட்டு வந்தால்..."

"நான் இவ்விடம் விட்டுப் புறப்பட்டால் அடுத்த கணம் என்ன ஆகும் என்று உனக்குத் தெரியாது! அழகிய பழையாறையை விட்டு இந்தத் தஞ்சைக் கோட்டையாகிய சிறையில் நான் சந்தோஷத்துக்காக இருக்கிறேன் என்று கருதுகிறாயா? குந்தவை, நான் இங்கே இருப்பதனால் இந்தப் பழம்பெரும் சோழ ராஜ்யம் சின்னாபின்னமாகாமல் காப்பாற்றி வருகிறேன். நேற்றிரவு நாடகம் ஆடிக்கொண்டிருந்தபோது என்ன நடந்தது என்பதை யோசித்துப் பார்! நிலா மாடத்தின் முகப்பிலிருந்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன். நாடகத்தை நடுவில் நிறுத்தி விடலாமா என்று கூடத் தோன்றியது..."

"தந்தையே! இது என்ன? நாடகம் மிக நன்றாக இருந்ததே! சோழ குலப் பெருமையை எண்ணி என் உள்ளம் பூரித்ததே! எதற்காக நிறுத்த விரும்பினீர்கள்? நாடகத்தில் எந்தப் பகுதி தங்களுக்குப் பிடிக்காமலிருந்தது?"

"நாடகம் நன்றாகத்தானிருந்தது, மகளே! அதில் ஒரு குற்றமும் நான் காணவில்லை. நாடகம் பார்த்தவர்களின் நடத்தையைப் பற்றியே சொல்கிறேன். கொடும்பாளூர்க் கட்சியும், பழுவேட்டரையர் கட்சியும் எழுப்பிய போட்டி கோஷங்களை நீ கவனிக்கவில்லையா?"

"கவனித்தேன், அப்பா!"

"நான் ஒருவன் இங்கு இருக்கும்போதே இவர்கள் இப்படி நடந்து கொள்ளுகிறார்களே! நான் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்! நான் தஞ்சாவூரை விட்டுக் கிளம்பிய தட்சணமே இரு கட்சியாருக்குள்ளும் சண்டை மூளும். கிருஷ்ண பரமாத்மாவின் சந்ததிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அழிந்ததுபோல், இவர்களும் அழியும்போது இந்த மகாசாம்ராஜ்யமும் அழிந்து விடும்..."

"அப்பா! தாங்கள் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தில் சர்வாதிகாரச் சக்கரவர்த்தி. பழுவேட்டரையர்களும் சரி, கொடும்பாளூர் வேளிரும் சரி, தங்கள் காலால் இட்டதைத் தலையால் செய்யக் கடமைப்பட்டவர்கள். அவர்கள் அத்துமீறி நடந்தால் அவர்களுடைய அழிவை அவர்களே தேடிக்கொள்கிறார்கள். தாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?"

"மகளே! சென்ற நூறு வருஷமாக இந்த இரு குலத்தோரும் சோழ சாம்ராஜ்யத்துக்கு இணையில்லா ஊழியம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய உதவியின்றிச் சோழ ராஜ்யம் இப்படிப் பல்கிப் பெருகியிருக்க முடியுமா? அவர்கள் அழிந்தால் இராஜ்யத்துக்கும் அது பலவீனந்தானே?"

"அப்பா! அந்த இரு கட்சியில் ஒரு கட்சிக்காரர்கள் தங்களுக்கு விரோதமாகச் சதி செய்யும் துரோகிகள் என்று தெரிந்தால்.."

சுந்தர சோழர் குந்தவையை வியப்போடு உற்றுப்பார்த்து, "என்ன மகளே, சொல்கிறாய்? எனக்கு விரோதமான சதியா? யார் செய்கிறார்கள்?" என்று கேட்டார்.

"அப்பா! தங்களுடைய உண்மையான ஊழியர்களாக நடித்து வருகிறவர்கள் சிலர், தங்களுக்கு எதிராக இரகசியச் சதி செய்கிறார்கள். தங்களுடைய புதல்வர்களுக்குப் பட்டமில்லாமல் செய்துவிட்டு வேறொருவருக்குப் பட்டம் கட்டச் சதி செய்து வருகிறார்கள்..."

"யாருக்கு? யாருக்கு மகளே? உன் சகோதரர்களுக்குப் பட்டம் இல்லையென்று செய்துவிட்டு வேறு யாருக்குப் பட்டம் கட்டப் பார்க்கிறார்கள்?" என்று சுந்தர சோழ சக்கரவர்த்தி பரபரப்புடன் கேட்டார்.

குந்தவை மெல்லிய குரலில், "சித்தப்பா மதுராந்தகனுக்கு, அப்பா! நீங்கள் நோய்ப்படுக்கையில் படுத்திருக்கையில் இவர்கள் இப்படிப் பயங்கரமான துரோகத்தைச் செய்கிறார்கள்..." என்றாள்.

உடனே சுந்தர சோழர் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து, "ஆகா அவர்களுடைய முயற்சி மட்டும் பலித்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்றார்.

குந்தவைக்குத் தூக்கி வாரிப்போட்டது.

"தந்தையே! இது என்ன, தாங்கள் பெற்ற புதல்வர்களுக்குத் தாங்களே சத்துரு ஆவீர்களா?" என்றாள்.

"இல்லை; என் புதல்வர்களுக்கு நான் சத்துரு இல்லை. அவர்களுக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். இந்தச் சாபக்கேடு உள்ள ராஜ்யம் அவர்களுக்கு வேண்டியதில்லை. மதுராந்தகன் மட்டும் சம்மதித்தால்.."

"சித்தப்பா சம்மதிப்பதற்கு என்ன? திவ்யமாகச் சம்மதிக்கிறார். நாளைக்கே பட்டங் கட்டிக்கொள்ளச் சித்தமாயிருக்கிறார். அம்மாதிரி தாங்கள் செய்யப் போகிறீர்களா? என் தமையனின் சம்மதம் கேட்க வேண்டாமா?..."

"ஆம்; ஆதித்த கரிகாலனைக் கேட்க வேண்டியதுதான். அவனைக் கேட்டால் மட்டும் போதாது. உன் பெரிய பாட்டி சம்மதிக்க வேண்டும்.."

"பிள்ளைக்குப் பட்டம் கட்டினால் தாயார் வேண்டாம் என்று சொல்வாளா?"

"ஏன் சொல்ல மாட்டாள்? உன் பெரிய பாட்டியுடன் இத்தனை நாள் பழகியும் அவரை நீ அறிந்து கொள்ளவில்லையா? செம்பியன் மாதேவியின் வற்புறுத்தலினாலேயே நான் அன்று சிம்மாசனம் ஏறினேன். ஆதித்தனுக்கும் இளவரசுப் பட்டம் கட்டினேன். குந்தவை! உன் பெரியபாட்டிக்கு உன்பேரில் மிக்க அன்பு உண்டு. நீ அவரிடம் நயமாகச் சொல்லி மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதற்குச் சம்மதம் வாங்கி விடு!..."

குந்தவை திகைத்துப் போய்ப் பேசாமலிருந்தாள்.

"பிறகு காஞ்சிக்குப் போ! அங்கே உன் அண்ணன் ஆதித்த கரிகாலனிடம் சொல்லி, 'இந்தச் சாபக்கேடு வாய்ந்த இராஜ்யம் எனக்கு வேண்டாம்' என்று சொல்லும்படி செய்துவிடு. மதுராந்தகனுக்கே பட்டம் கட்டிவிடுவோம். பிறகு நாம் எல்லாரும் சாபம் நீங்கி நிம்மதியாக இருக்கலாம்" என்றார் சக்கரவர்த்தி.

"அப்பா! அடிக்கடி சாபம் என்கிறீர்களே? எந்தச் சாபத்தைச் சொல்கிறீர்கள்?" என்று குந்தவை கேட்டாள்.

"மகளே! பூர்வ ஜன்மம் என்று சொல்லுகிறார்களே அதை நீ நம்புகிறாயா? பூர்வஜன்மத்தின் நினைவுகள் இந்த ஜன்மத்தில் சில சமயம் வரும் என்கிறார்களே, அதில் உனக்கு நம்பிக்கை உண்டா?"

"தந்தையே! அவையெல்லாம் பெரிய விஷயங்கள். எனக்கென்ன தெரியும், அந்த விஷயங்களைப் பற்றி?"

"மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பற்றிச் சொல்கிறார்களே! புத்தபகவான் கடைசி அவதாரத்திற்கு முன்னால் பல அவதாரங்கள் எடுத்ததாகச் சொல்கிறார்களே? அந்த அவதாரங்களைப் பற்றிய பல அழகான கதைகள் சொல்கிறார்களே?"

"கேட்டிருக்கிறேன், அப்பா!"

"கடவுளுக்கும் அவதார புருஷர்களுக்கும் அப்படியென்றால் சாதாரண மனிதர்களுக்கு மட்டும் முற்பிறவிகள் இல்லாமலிருக்குமா?"

"இருக்கலாம் அப்பா!"

"சில சமயம் எனக்குப் பூர்வஜன்ம நினைவுகள் வருகின்றன மகளே! அவற்றைக் குறித்து இதுவரையில் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்கள்; புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். எனக்கு உடல் நோயுடன் சித்தப் பிரமையும் பிடித்திருப்பதாகச் சொல்வார்கள். வைத்தியர்களை அழைத்து வந்து தொந்தரவு கொடுப்பது போதாது என்று மாந்திரீகர்களையும் அழைத்துவரத் தொடங்குவார்கள்..."

"ஆம்; தந்தையே! இப்போதே சிலர் அப்படிச் சொல்கிறார்கள். தங்கள் நோய், மருத்துவத்தினால் தீராது; மாந்திரீகர்களை அழைக்க வேண்டும் என்கிறார்கள்..."

"பார்த்தாயா? நீ அப்படியெல்லாம் நினைக்க மாட்டாயே? நான் சொல்வதைக் கேட்டுவிட்டுச் சிரிக்க மாட்டாயே?" என்றார் சக்கரவர்த்தி.

"கேட்கவேண்டுமா, அப்பா! உங்களுடைய மனம் எவ்வளவு நொந்திருக்கிறது என்று எனக்குத் தெரியாதா? தங்களைப் பார்த்து நான் சிரிப்பேனா?" என்று குந்தவை கூறினாள். அவளுடைய கண்ணில் நீர் மல்கிற்று.

"எனக்குத் தெரியும், மகளே! அதனாலேதான் மற்ற யாரிடமும் சொல்லாததை உன்னிடம் சொல்கிறேன். என்னுடைய பூர்வ ஜன்ம நினைவுகளில் சிலவற்றை சொல்லுகிறேன் கேள்!" என்றார் சுந்தர சோழர்.

நாலுபுறமும் கடல் சூழ்ந்த ஓர் அழகிய தீவு. அத்தீவில் எங்கெங்கும் பச்சை மரங்கள் மண்டி வளர்ந்திருந்தன. மரங்கள் இல்லாத இடங்களில் நெருங்கிய புதர்களாயிருந்தன. கடற்கரையோரத்தில் ஒரு புதரில் வாலிபன் ஒருவன் ஒளிந்து கொண்டிருந்தான். சற்றுத் தூரத்தில் கடலில் பாய்மரம் விரித்துச் சென்ற கப்பல் ஒன்றை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அது மறையும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு "அப்பா! பிழைத்தோம்!" என்று பெருமூச்சு விட்டான்.

அந்த வாலிபன் இராஜ குலத்தில் பிறந்தவன். ஆனால் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவன் அல்ல; இராஜ்யம் ஆளும் ஆசையும் அவனுக்குக் கிடையாது. அவனுடைய தகப்பனாருக்கு முன்னால் பிறந்த மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். ஆகையால் இராஜ்யம் ஆளுவதைப் பற்றி அவன் கனவிலும் நினைக்கவில்லை; ஆசை கொள்ளவும் இல்லை. கடல் கடந்த நாட்டுக்குப் போருக்குச் சென்ற சைன்யத்தோடு அவனும் போனான். ஒரு சிறிய படையின் தலைமை அவனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. போரில் அவனுடைய சைன்யம் தோல்வியுற்றது. கணக்கற்றவர்கள் மாண்டார்கள். வாலிபன் தலைமை வகித்த படையிலும் எல்லாரும் மாண்டார்கள். அந்த வாலிபனும் போரில் உயிரைவிடத் துணிந்து எவ்வளவோ சாஹஸச் செயல்கள் புரிந்தான். ஆனாலும் அவனுக்குச் சாவு நேரவில்லை. தோற்று ஓடிய சைன்யத்தில் உயிரோடு தப்பிப் பிழைத்தவர்கள் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். திரும்பித் தாய்நாடு செல்லுவதற்கு அவர்கள் ஆயத்தமானார்கள். திரும்பிப் போவதற்கு அந்த வாலிபன் மட்டும் விரும்பவில்லை. தன் கீழிருந்த படை வீரர்கள் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு அவன் தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் மகாவீரர்கள் எனப் புகழ் பெற்றவர்கள். அந்தப் புகழுக்குத் தன்னால் அபகீர்த்தி நேருவதை அவன் விரும்பவில்லை. ஆகையால், கப்பல் போய்க்கொண்டிருந்தபோது, சற்றுத் தூரத்தில் அழகிய தீவு ஒன்று தெரிந்தபோது, வாலிபன் மற்ற யாரும் அறியாமல் கடலில் மெள்ளக் குதித்தான். நீந்திக் கொண்டே போய்த் தீவில் கரை ஏறினான். கப்பல் கண்ணுக்கு மறையும் வரையில் காத்திருந்தான். பிறகு ஒரு மரத்தின்மேல் ஏறி அதன் அடிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தத் தீவின் அழகு அவன் மனத்தைக் கவர்ந்தது. ஆனால் அத்தீவில் மனித சஞ்சாரமே இல்லை என்று தோன்றியது. அச்சமயம் அது ஒரு குறையென்று அவனுக்குத் தோன்றவில்லை. அவனுடைய உற்சாகம் மிகுந்தது. மரக்கிளையில் சாய்ந்து உட்கார்ந்தபடி வருங்காலத்தைப் பற்றிப் பகற்கனவுகள் கண்டு கொண்டிருந்தான்.

திடீரென்று மனிதக் குரலில், அதுவும் பெண் குரலில், ஒரு கூச்சல் கேட்டது திரும்பிப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி கூச்சலிட்ட வண்ணம் ஓடிக் கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்து பயங்கரமான கரடி ஒன்று ஓடியது. அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கரடி மேலும் மேலும் அந்தப் பெண்ணை நெருங்கிக் கொண்டிருந்தது. இருவருக்கும் இடையேயிருந்த தூரம் குறுகிக் கொண்டிருந்திருந்தன. வேறு யோசனை ஒன்றும் செய்வதற்கு அப்போது நேரம் இருக்கவில்லை. வாலிபன் மரக்கிளையிலிருந்து பொத்தென்று கீழே குதித்தான். மரத்தில்தான் சாத்தியிருந்த வேலை எடுத்துக் கொண்டு ஓடினான். கரடி அந்தப் பெண்ணை நெருங்கி அதன் பயங்கரமான கால் நகங்களை அவள் கழுத்தில் வைப்பதற்கு இருந்தது. அச்சமயத்தில் குறி பார்த்து வேலை எறிந்தான். வேல் கரடியைத் தாக்கியது. கரடி வீல் என்று ஏழுலகமும் கேட்கும்படியான ஒரு சத்தம் போட்டு விட்டுத் திரும்பியது. பெண் பிழைத்தாள், ஆனால் வாலிபன் அபாயத்துக்குள்ளானான். காயம்பட்ட கரடி அவனை நோக்கிப் பாய்ந்தது. வாலிபனுக்கும் கரடிக்கும் துவந்த யுத்தம் நடந்தது. கடைசியில் அந்த வாலிபனே வெற்றி பெற்றான்.

வெற்றியடைந்த வாலிபனுடைய கண்கள் உடனே நாலாபுறமும் தேடின. எதைத் தேடின என்பது அவனுக்கே முதலில் தெரியவில்லை. அப்புறம் சட்டென்று தெரிந்தது. அவன் கண்கள் தேடிய பெண், சாய்ந்து வளைந்து குறுக்கே வளர்ந்திருந்த ஒரு தென்னை மரத்தின் பின்னால் அதன் பேரில் சாய்ந்து கொண்டு நின்றாள். அவள் கண்களில் வியப்பும் முகத்தில் மகிழ்ச்சியும் குடிகொண்டிருந்தன. அவள் காட்டில் வாழும் பெண். உலகத்து நாகரிக வாழ்க்கையை அறியாதவள் என்று அவளுடைய தோற்றமும் உடையும் தெரிவித்தன. ஆனால் அவளுடைய அழகுக்கு உவமை சொல்ல இந்த உலகத்தில் யாரும் இல்லையென்று சொல்லும்படியிருந்தாள். அந்தப் பெண் அங்கு நின்றிருந்த காட்சி ஒப்பற்ற ஆற்றல் படைத்த ஓவியக் கலைஞன் ஒருவன் தீட்டிய சித்திரக் காட்சியாகத் தோன்றியது. அவள் உண்மையில் ஒரு பெண்ணாயிருந்தாலும் இந்த உலகத்துப் பெண்ணாயிருக்க முடியாது என்று அந்த வாலிபன் கருதினான். அருகில் நெருங்கினான். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் அவள் மாயமாய் மறைந்துவிடவில்லை. எதிர்பாராத விதமாக அவள் ஓட்டம் பிடித்து ஓடினாள். சற்று அவளைப் பின் தொடர்ந்து ஓடிப் பார்த்தான். பிறகு நின்று விட்டான். அவன் மிகக் களைப்புற்றிருந்த படியால் மானின் வேகத்துடன் ஓடிய அந்தப் பெண்ணைத் தொடர்ந்து அவனால் ஓடவும் முடியவில்லை. மேலும், ஒரு பெண்ணை தொடர்ந்து ஓடுவது அநாகரிகம் என்றும் அவன் எண்ணினான்.

"இந்தச் சிறிய தீவிலேதானே இவள் இருக்க வேண்டும்? மறுபடியும் பார்க்காமலா போகிறோம்!" என்று கருதி நின்றுவிட்டான். கடற்கரையோரமாகச் சென்று தெள்ளிய மணலில் படுத்துக் கொண்டு களைப்பாறினான். அவன் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பெண் திரும்பி வந்தாள். தன்னுடன் ஒரு வயோதிகனான மனிதனையும் அழைத்து வந்தாள். வந்தவன் இலங்கைத் தீவில் கடற்கரையோரத்தில் வாழ்ந்து மீன் பிடித்துப் பிழைக்கும் 'கரையர்' என்னும் வகுப்பைச் சேர்ந்தவன் என்று தெரிந்தது. அவன் மூலமாக அவ்வாலிபன் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொண்டான். அதாவது அந்தப் பெண் தக்க சமயத்தில் அவனுடைய உயிரைக் காப்பாற்றினாள் என்று அறிந்தான். அவன் மரக்கிளையின் மேல் உட்கார்ந்து கடலையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோது கரடி ஒன்று அவன் பின் பக்கமாக வந்து அவனை உற்றுப் பார்த்தது. பிறகு மரத்தின் மேல் ஏறத் தொடங்கியது. இதையெல்லாம் அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். கரடியை வேறு திசையில் இழுப்பதற்கும் அந்த வாலிபனை எச்சரிக்கை செய்வதற்கும் அவள் அவ்விதம் கூச்சலிட்டாள். கரடி மரத்தின் மேலே ஏறுவதை விட்டு அவளைத் தொடர்ந்து ஓடத் தொடங்கியது.

இதைக் கேட்டதும் அந்த வாலிபனுக்கு எப்படியிருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா? தன்னைக் காப்பாற்றிய பெண்ணுக்கு அவன் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். ஆனால் அவளோ ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லவில்லை. அவளிடம் வாலிபன் கூறியதற்கெல்லாம் அவளுடன் வந்த மனிதனே மறுமொழி கூறினான். இது வாலிபனுக்கு முதலில் வியப்பாயிருந்தது. உண்மை இன்னதென்று அறிந்ததும், வியப்பு மறைந்தது. அந்தப் பெண் பேசத் தெரியாத ஊமை. அவளுக்குக் காதும் கேளாது என்று அறிந்து கொண்டதும், அவ்வாலிபனுடைய பாசம் பன்மடங்காகியது. பாசம் வளர்ந்து தழைப்பதற்குச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் துணை செய்தன. காது கேளாததும், பேசத் தெரியாததும் ஒரு குறையாகவே அவ்வாலிபனுக்குத் தோன்றவில்லை. வாயினால் சொல்ல முடியாத அற்புதமான உண்மைகளையும், அந்தரங்க இரகசியங்களையும் அவளுடைய கண்களே தெரியப்படுத்தின. அந்த நயனபாஷைக்கு ஈடான பாஷை இந்த உலகத்தில் வேறு என்ன உண்டு? அது போலவே காதுகேளாததற்கு ஈடாக அவளுடைய நாசியின் உணர்ச்சி அதிசயமான சக்தி வாய்ந்ததாயிருந்தது. அடர்ந்த காட்டின் மத்தியில் வெகு தூரத்தில் மறைந்திருக்கும் காட்டு மிருகம் இன்னதென்பதை அவளுடைய முகர்தல் சக்தியைக் கொண்டே கண்டுபிடிக்க அவளால் முடிந்தது. ஆனால் இதெல்லாம் என்னத்திற்கு? இருதயங்கள் இரண்டு ஒன்று சேர்ந்து விட்டால், மற்றப் புலன்களைப் பற்றி என்ன கவலை? அந்த வாலிபனுக்கு அத்தீவு சொர்க்க பூமியாகவே தோன்றியது. நாட்கள், மாதங்கள், வருஷங்கள், இவ்விதம் சென்றன. எத்தனை நாள் அல்லது வருஷம் ஆயிற்று என்பதைக் கணக்குப் பார்க்கவே அவன் மறந்துவிட்டான்.

வாலிபனுடைய இந்த சொர்க்க வாழ்வுக்குத் திடீரென்று ஒருநாள் முடிவு நேர்ந்தது. கப்பல் ஒன்று அந்தத் தீவின் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து படகிலும் கட்டு மரங்களிலும் பலர் இறங்கி வந்தார்கள். அவர்கள் யார் என்று பார்க்க வாலிபன் அருகில் சென்றான். தன்னைத் தேடிக் கொண்டுதான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று அறிந்தான். அவனுடைய நாட்டில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்து விட்டன. அவனுடைய தந்தைக்கு மூத்த சகோதரர்கள் இருவர் இறந்து போய்விட்டார்கள். இன்னொருவருக்குப் புத்திர சந்தானம் இல்லை. ஆகையால் ஒரு பெரிய சாம்ராஜ்யம் அவனுக்காகக் காத்திருக்கிறது என்று தெரிந்து கொண்டான். அவனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய பூசல் ஏற்பட்டது. அந்த அழகிய தீவையும் அதைச் சொர்க்க பூமியாக்கிய ஊமைப் பெண்ணையும் விட்டுப்போக அவனுக்கு மனமில்லை. அதே சமயத்தில் ஊரையும் உற்றார் உறவினரையும் பார்க்கும் ஆசை ஒரு பக்கத்தில் அவனைக் கவர்ந்து இழுத்தது. அவன் பிறந்த நாட்டை நாலாபுறமும் அபாயம் சூழ்ந்திருக்கிறதென்றும் அறிந்தான். யுத்த பேரிகையின் முழக்கம் மிக மிகத் தொலைவிலிருந்து அவன் காதில் வந்து கேட்டது. இது அவன் முடிவு செய்வதற்குத் துணை செய்தது.

"திரும்பி வருகிறேன்; என் கடமையை நிறைவேற்றிவிட்டு வருகிறேன்" என்று அப்பெண்ணிடம் ஆயிரம் முறை உறுதி மொழி கூறிவிட்டுப் புறப்பட்டான். காட்டில் பிறந்து வளர்ந்த அந்த ஊமைப் பெண் நாட்டிலிருந்து வந்திருந்த மனிதர்களுக்கு மத்தியில் வருவதற்கே விரும்பவில்லை. வாலிபன் படகில் ஏறியபோது அவள் சற்றுத் தூரத்தில் அந்தப் பழைய வளைந்த தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இரு கண்களும் அப்போது இரண்டு கண்ணீர்க் கடல்களாக வாலிபனுக்குத் தோன்றின. ஆயினும் அவன் தன் மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டு படகில் ஏறிச் சென்று கப்பலை அடைந்தான்...

"குந்தவை! அந்த வலைஞர் குலப் பெண் அப்படி நின்று பார்த்துக் கொண்டிருந்தாளே, அந்தக் காட்சியின் நினைவு அடிக்கடி என் மனக் கண் முன் தோன்றிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு முயன்றாலும் மறக்கமுடியவில்லை. அதைக் காட்டிலும் சோகமான இன்னும் ஒரு காட்சி, நினைத்தாலும் குலை நடுங்கும் காட்சி அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. இரவிலும் பகலிலும் உறங்கும்போது விழித்திருக்கையிலும் என்னை வருத்தி வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதையும் சொல்லட்டுமா?" என்று சுந்தர சோழர் தம் அருமை மகளைப் பார்த்துக் கேட்டார்.

உருக்கத்தினால் தொண்டை அடைத்துக் தழதழத்தக் குரலில், சுந்தர சோழரின் அருமைக் குமாரி "சொல்லுங்கள், அப்பா" என்றாள்.







Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. சுந்தர சோழரின் பிரமை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. இரு சிறைகள்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 3. சித்தப் பிரமை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. நந்தினி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: