BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. யானைப்பாகன்  Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. யானைப்பாகன்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. யானைப்பாகன்  Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. யானைப்பாகன்    ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. யானைப்பாகன்  Icon_minitimeWed May 11, 2011 3:50 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

29. யானைப்பாகன்



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் - இந்தக் கதை நடந்த காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், - வலஹம்பாஹு என்னும் சிங்கள அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய காலத்திலும் தமிழர் படை இலங்கையின் மீது படையெடுத்துச் சென்றது. அப்போது வலஹம்பாஹு என்பான் தலைநகரிலிருந்து தப்பி ஓடித் தம்பள்ளை என்னுமிடத்திலிருந்த மலைக்குகையில் ஒளிந்து கொண்டிருந்தான். பிறகு அவன் மீண்டும் படை திரட்டிக்கொண்டு சென்று அநுராதபுரத்தைக் கைப்பற்றினான். அவனுக்கு அபயமளித்திருந்த மலைக் குகையை மேலும் குடைந்தெடுத்துக் கோயிலாக்கினான். புத்தர் பெருமானிடம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்காக அந்தக் குகைக்குள்ளே பெரிதும் சிறிதுமாய்ப் பல புத்தர் சிலைகளை நிர்மாணிக்கச் செய்தான். நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளை நிர்மாணித்த சிற்பிகளுக்குத் தங்கள் சிற்பத்திறனை முழுதும் காட்டிவிட்டோம் என்று திருப்தி ஏற்படவில்லை. எனவே ஹிந்து தெய்வங்களின் படிமங்கள் சிலவற்றையும் புத்தர் சிலைகளுக்கு இடையில் நிர்மாணித்து வைத்தார்கள். அந்த அற்புதமான சிற்பக்கலை அதிசயங்களை இன்றைக்கும் தம்பளை என்னும் ஊரில் உள்ள குகைக்கோயிலில் காணலாம்.

வந்தியத்தேவன் அந்தப் புண்ணிய ஸ்தலத்துக்குள் பிரவேசித்தபோது ஒரு புது உலகத்துக்குள் வந்துவிட்டதாகவே அவனுக்குத் தோன்றியது. புதுமலர்களின் நறுமணம் அவனுக்கு மயக்கத்தை அளித்தது. வீதி முனைகளில் தாமரை மொட்டுக்களும் செண்பக மலர்களும் குப்பல் குப்பலாகக் குவிக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் அம்மலர்களை வாங்கி அழகிய ஓலைக் கூடைகளில் எடுத்துக்கொண்டு கோயிலை நோக்கிச் சென்றார்கள். ஸ்திரீகளும், புருஷர்களும் அடங்கிய அந்தப் பக்தர் கூட்டங்கள் தெருக்களை அடைத்துக்கொண்டு சென்றன. காவித்துணி அணிந்த புத்த சந்நியாசிகளும் அங்கங்கே காணப்பட்டார்கள். "சாது, சாது" என்ற பெருங் கோஷம் பக்தர் கூட்டத்திலிருந்து எழுந்தது.

இவையெல்லாம் வந்தியத்தேவனுக்கு மிக்க வியப்பை அளித்தன. ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, "நாம் யுத்த கேந்திரத்துக்கு வருவதாக எண்ணினோம். இது புத்த க்ஷேத்திரமாக அல்லவா இருக்கிறது?" என்றான்.

"ஆம், அப்பா! ஆயிரம் வருஷமாக இது பிரசித்தி பெற்ற புத்த க்ஷேத்திரமாயிற்றே?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"ஆனால் இது சோழ சைன்யத்தின் வசத்திலுள்ளது என்று சொன்னீரே?"

"ஆமாம்; இப்போதும் அப்படித்தான் சொல்கிறேன்."

"சோழ வீரர்கள் யாரையும் இங்கே காணோமே?"

"ஊருக்கு வெளியில் படைவீடுகளில் இருக்கிறார்கள். அப்படி இளவரசருடைய கட்டளை."

"எந்த இளவரசர்?"

"ஏன்? நாம் யாரைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறோமோ, அந்த இளவரசர்தான்!"

"அதைப்பற்றி உம்மைக் கேட்கவேண்டுமென்று இருந்தேன். இளவரசரை இங்கே தேடிவிட்டு 'இல்லை' என்று கண்டு, பார்த்திபேந்திரன் திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறானே? அவரை நாம் இங்கே மறுபடியும் தேடுவதில் என்ன பயன்?"

"அந்தப் பல்லவன் 'இல்லை' என்று சொன்னதனால் நான் நம்பி விடுவேனோ? நானே தேடிப் பார்த்துத்தான் தெரிந்து கொள்வேன். இரணியன் 'ஹரி' என்கிற தெய்வம் இல்லை என்று சொன்னான். அதைப் பிரஹலாதன் நம்பிவிட்டானா?"

"ஓ! வீர வைஷ்ணவரே! நம்முடைய நாட்டில் சைவர்களுடன் ஓயாமல் சண்டை பிடித்துக் கொண்டு வந்தீரே? இங்கே இத்தனை புத்த சந்நியாசிகள் போகிறார்கள். நீர் பாட்டுக்குச் சும்மா வருகிறீரே? என்ன காரணம்? எதிரிகள் கூட்டம் அதிகமாயிருப்பதைக் கண்டு பயந்து போய் விட்டீரா?"

"தம்பி! பயம் என்பது என்ன? அது எப்படியிருக்கும்?"

"கறுப்பாய், பூதாகரமாய் யானையவ்வளவு பெரிதாக இருக்கும். நீ பார்த்ததேயில்லையா?"

"இல்லை" என்று ஆழ்வார்க்கடியான் சொல்லிவிட்டு வீதி ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு மனிதர்களை அணுகினான். அவர்கள் தமிழர்கள்போல் தோன்றினார்கள். அவர்களிடம் சிறிது நேரம் ஏதோ பேசிவிட்டு ஆழ்வார்க்கடியான் திரும்பி வந்தான்.

"வைஷ்ணவரே! அவர்களிடம் என்ன கேட்டீர்? விஷ்ணு பெரியவரா, புத்தர் பெரியவரா என்று கேட்டீரா? இந்த ஊரில் யாரைக் கேட்டாலும், 'புத்தர் பெரியவர்' என்றுதான் சொல்வார்கள். ஒவ்வொரு புத்தர் சிலையும் எவ்வளவு பிரம்மாண்டமாய் இருக்கிறது பார்க்கவில்லையா?"

"தம்பி என்னுடைய வீர வைஷ்ணவத்தையெல்லாம் இராமேசுவரத்தில் மூட்டை கட்டி வைத்துவிட்டு இங்கே ராஜ காரியமாக வந்திருக்கிறேன், தெரிகிறதா?"

"பின்னே அந்த மனிதர்களிடம் என்ன கேட்டீர்? இளவரசரைப் பற்றி விசாரித்தீரா?"

"இல்லை; இந்த ஊரில் இன்றைக்கு என்ன விசேஷம் என்று கேட்டேன்."

"அவர்கள் என்ன சொன்னார்கள்?"

"இன்றைக்கு இங்கே சீன யாத்திரிகர்கள் இரண்டு பேர் வரப்போகிறார்களாம்; அதை முன்னிட்டுப் புத்த விஹாரத்தில் உற்சவம் நடக்கிறதாம்; அதனாலேதான் ஊரில் இந்தக் கோலாகலம் என்று தெரிவித்தார்கள்."

"சீன யாத்திரீகர்கள் எங்கிருந்து வருகிறார்களாம்?"

"நேற்று இங்கு வந்துவிட்டுச் சிம்மகிரிக்குப் போனார்களாம். சிம்மகிரியிலிருந்து இப்போது வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் இன்னும் சற்று நேரத்தில் இங்கே வந்துவிடுவார்கள் என்றும் தெரிவித்தார்கள்."

"சிம்மகிரி எங்கே இருக்கிறது?"

"இங்கிருந்து காத தூரத்தில் இருக்கிறது. இன்னும் சிங்களவர் வசத்தில் இருக்கிறது. பகல் வேளையாயிருந்தால் இங்கிருந்தே பார்க்கலாம். சிம்மகிரி குன்றின் உச்சியில் ஒரு பலமான கோட்டை இருக்கிறது. அங்கேயுள்ள ஒரு குகையில் அற்புதமான அழியா வர்ணச் சித்திரங்கள் இருக்கின்றன. அந்தச் சித்திரங்களைப் பார்க்கத்தான் சீன யாத்திரிகர்கள் அங்கே போயிருக்க வேண்டும். குன்றில் ஏறி இறங்குவதற்குப் பெரிதும் கஷ்டப்பட்டிருப்பார்கள்... அதோ பார்!"

ஆழ்வார்க்கடியான் சுட்டிக்காட்டிய இடத்தில் அலங்கரித்த பெரிய யானை ஒன்று வந்துகொண்டிருந்தது. அதன் அம்பாரியில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய தோற்றமும், உடையும் அவர்கள்தான் சீன யாத்திரிகர்கள் என்று புலப்படுத்தின. யானைப்பாகன் ஒருவன் கையில் அங்குசத்துடன் யானையின் கழுத்தின் மீது வீற்றிருந்தான். யானையைச் சுற்றிச் சூழ்ந்து வந்த ஜனங்கள் பலவித ஆரவார கோஷங்களைக் கிளப்பினார்கள்.

"பார்த்தாயா?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"பார்த்தேன்; பார்த்தேன்! அம்மா! எவ்வளவு பெரிய யானை? பக்கத்திலே எங்கேயாவது பள்ளமிருக்கிறதா என்று பார்க்கலாமா?"

"வேண்டாம், வேண்டாம், வீதியில் சற்று ஒதுங்கி நின்றால் போதும்".

அவ்விதமே அவர்கள் யானை நெருங்கி வந்ததும் வீதி ஓரமாக ஒதுங்கி நின்றார்கள். யானை அவர்களைக் கடந்து சென்றது; ஜனக்கூட்டமும் யானையைத் தொடர்ந்து சென்றது.

வந்தியத்தேவன் அம்பாரியில் வீற்றிருந்த யாத்திரீகர் மீதே கண்ணாயிருந்தான். புத்தர்களின் புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசிப்பதற்காக எவ்வளவோ தூரம் பிரயாணம் செய்து எத்தனையோ கடல்களைக் கடந்து வந்த அந்தச் சீனர்களின் பக்தியை நினைத்து வியந்தான். அவர்களுக்கு இங்கே இவ்வளவு உபசாரங்கள் நடப்பது நியாயமான காரியந்தான். ஆனால் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் காலத்திலும் இவர்கள் யாத்திரைக்குப் பங்கமில்லாமல் நடப்பது எவ்வளவு அதிசயமானது? இளவரசர் அருள்மொழிவர்மரின் ஏற்பாடாகத்தானிருக்க வேண்டும். இவ்வளவு பெருந்தன்மையான காரியங்களைச் செய்யக் கூடியவர் அவர்தான். ஆனால் இப்போது அவர் எங்கே இருப்பார்? அவரைத் தேடிப் பிடிப்பது சாத்தியமா? இந்த வைஷ்ணவனோடு இவ்வளவு கஷ்டத்துடன் பிரயாணம் செய்து வந்தது வீணாகி விடுமோ?"

"தம்பி! பார்த்தாயா?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"பார்த்தேன்."

"என்ன தெரிந்தது?"

"சீன யாத்திரீகர்களின் முகம் சப்பையாகத் தெரிந்தது அவர்களுடைய உடை விசித்திரமாயிருந்தது..."

"யாத்திரீகர்களைப் பற்றி நான் கேட்கவில்லை."

"பின்னே?"

"யானைப் பாகனைக் கவனித்துப் பார்த்தாயா?', என்று கேட்டேன்."

"யானைப் பாகனையா? நான் கவனிக்கவேயில்லையே?"

"அழகாயிருக்கிறது. அந்த யானைப் பாகனுடைய பார்வை தற்செயலாக நம் பேரில் விழுந்ததும், அவனுடைய கண்களில் ஜொலித்த ஒளியைக் கவனிக்கவில்லையா?"

"அது என்ன? யானைப் பாகனுடைய கண்களில் தீவர்த்தி போட்டிருக்கிறதா ஜொலிப்பதற்கு?"

"நல்ல ஆள் நீ! உன் அஜாக்கிரதையை நினைத்து ஆச்சரியப்படுவதா அல்லது இவ்வளவு முக்கியமான காரியத்தை உன்னை நம்பி ஒப்புவித்து அனுப்பினாளே, அந்த இளைய பிராட்டியின் காரியத்தைக் குறித்து ஆச்சரியப்படுவதா என்று தெரியவில்லை போனாற் போகட்டும். என்னோடு வா!"

யானைக்கும், யானையைச் சூழ்ந்து நின்ற கூட்டத்துக்கும் பின்னால் சற்றுத் தூரத்தில் இவர்களும் தொடர்ந்து போனார்கள்.

புத்த விஹாரத்தின் வாசலில் வந்ததும் யானை நின்றது. பிறகு யானைப் பாகன் ஏதோ சொல்லவும் யானை மண்டியிட்டுப்படுத்தது. யாத்திரீகர்கள் இறங்கினார்கள். புத்த விஹாரத்தின் வாசலில் கும்பலாக நின்ற புத்த பிக்ஷுக்கள் சீன யாத்திரீகர்களை வரவேற்றார்கள். சங்கங்கள் முழங்கின; ஆலாட்ச மணிகள் ஒலித்தன. விஹாரத்தின் மேன் மாடத்திலிருந்து மலர் மாரி பொழிந்தது. "புத்தம் சரணம் கச்சாமி" என்ற கோஷம் வானளாவியது. சீன யாத்திரீகர்கள் இருவரும் விஹாரத்துக்குள் சென்றார்கள். கூட வந்தவர்களிலும் பெரும்பாலோர் அவர்களைத் தொடர்ந்து விஹாரத்துக்குள்ளே சென்றார்கள்.

யாத்திரீகர்கள் இறங்குவதற்கு முன்பே யானையின் கழுத்திலிருந்து இறங்கிவிட்ட யானைப் பாகன் யானையை எழுப்பி நடத்திக்கொண்டு சென்றான். சற்றுத் தூரத்தில் நின்றிருந்த நாலுபேரைப் பார்த்தான். அவர்களில் ஒருவனிடம் யானையை ஒப்புவித்தான். இன்னும் ஒருவனிடம் ஆழ்வார்க்கடியானைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னான். மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு சிறிது நேரத்தில் வீதியின் ஒரு திருப்பத்தில் திரும்பி மறைந்தான்.

யானைப் பாகன் எந்த ஆளுக்கு ஆழ்வார்க்கடியானைச் சுட்டிக் காட்டினானோ அவன் இவர்கள் நின்ற இடத்தை நோக்கி வந்தான். ஆழ்வார்க்கடியானிடம் மெல்லிய குரலில், "ஐயா! என்னுடன் வருவதற்குச் சம்மதமா?" என்று கேட்டான்.

"அதற்காகவே காத்திருக்கிறோம்" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"அடையாளம் ஏதாவது உண்டா?"

சேநாதிபதி கொடுத்திருந்த கொடும்பாளூர் முத்திரை மோதிரத்தை ஆழ்வார்க்கடியான் காட்டினான்.

"சரி, என் பின்னால் வாருங்கள்" என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் செல்ல, இவர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள். ஊரைத்தாண்டி அப்பால் சென்றதும் குறுகிய காட்டுப் பாதை ஒன்று தென்பட்டது. அதன் வழியே சிறிது தூரம் சென்றதும் பாதையிலிருந்து சற்று விலகியிருந்த ஒரு பாழும் மண்டபத்தை அடைந்தார்கள். அதில் சிறிது நேரம் காத்திருக்கவேண்டும் என்று அவர்களை அழைத்து வந்தவன் தெரிவித்தான். பிறகு அவன் ஒரு மரத்தின் மேலேறி அவர்கள் வந்த வழியைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.

"இதெல்லாம் என்ன மர்மம்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"எல்லாம் சீக்கிரத்தில் புரிந்துவிடும். கொஞ்சம் பொறுத்திரு!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

அந்தப் பாழும் மண்டபத்தில் பின்னால் இரண்டு குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. குதிரைகள் இரண்டுதான் என்பது வந்தியத்தேவனுக்குக் கொஞ்சம் கவலையை உண்டாக்கியது.

யானைப் பாகனைப் பற்றிய மர்மம் என்னவாயிருக்கும்? அவனுடைய முகத்தை ஒரே கணம் வந்தியத்தேவன் கண்கள் ஏறிட்டுப் பார்த்திருந்தன. அப்புறம் சீன யாத்திரீகர்களிடம் அவன் கவனம் சென்று விட்டது. யானைப் பாகனுடைய முகத்தை நினைத்துப் பார்க்க ஆனமட்டும் முயன்றான். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.

"வைஷ்ணவரே! அந்த யானைப் பாகன் யார்? எனக்குச் சொல்லக் கூடாதா?"

"யாராயிருக்கும்? நீயே ஊகித்துப் பார், தம்பி!"

"யானைப் பாகன்தான் பொன்னியின் செல்வரா?"

"அவருடைய கண்களில் ஒரு கணம் ஜொலித்த பிரகாசத்திலிருந்து அப்படித்தான் தோன்றியது."

"உம்மைப்போல் மற்றவர்களும் அவரைத் தெரிந்து கொண்டிருக்க மாட்டார்களா?"

"மாட்டார்கள், சீனத்திலிருந்து வந்த யாத்திரீகர்களுக்கு இளவரசர் யானைப் பாகராயிருப்பார் என்று யார் எதிர்பார்ப்பார்கள்? மேலும் இந்த ஊரிலுள்ள ஜனங்கள் இளவரசரைப் பார்த்ததும் இல்லை."

"சீன யாத்திரீகர்கள் சிம்மகிரியிலிருந்து வந்தார்கள் என்று சொன்னீர் அல்லவா?"

"ஆமாம்."

"சிம்மகிரி இன்னும் சிங்களவர் வசத்தில் இருக்கிறதென்று நீர் சொல்லவில்லையா?"

"சொன்னேன்."

"பின்னே, எதிரிகளுக்கு மத்தியில் போய்விட்டா இளவரசர் திரும்பி வருகிறார்?"

"சிம்மகிரி மட்டும் என்ன? பகைவருக்குட்பட்ட பிரதேசத்தின் மத்தியில் உள்ள மாஹியங்கானா, சமந்தகூடம் முதலிய ஷேத்திரங்களுக்கும் இளவரசர் சீன யாத்திரீகர்களுடன் போய்த் திரும்பியிருக்கிறார்."

"எதற்காக அவ்வளவு பெரிய அபாயத்துக்கு உட்பட்டார்?"

"அந்த க்ஷேத்திரங்களையும் அங்கேயுள்ள சிற்ப சித்திர அதிசயங்களையும் பார்ப்பதில் உள்ள அளவு கடந்த ஆசையினால்தான்!"

"நல்ல ஆசை! நல்ல இளவரசர்! இத்தகைய விளையாட்டுப் புத்தியுள்ளவரையா முடி மன்னர் வணங்கும் ஏகசக்ராதிபதியாவார் என்று அந்தக் குடந்தை சோதிடர் சொன்னார்?"

"அவ்வாறு குடந்தை சோதிடர் சொன்னாரா, தம்பி?"

"நீரும் அதை நம்புகிறீரா?"

"நான் ஜோசியத்தை நம்பவில்லை. ஜோசியம் பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை."

"பின்னே என்ன?"

"ஜோசியம் பார்க்காமலேயே எனக்கு நிச்சயமாய்த் தெரியும்..."

திடீரென்று குதிரைகளின் குளம்புச் சத்தம் கேட்டது. அவர்கள் இருந்த இடத்தை நோக்கிச் சப்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. மரத்தின் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவன் அவசரமாகக் கீழே இறங்கினான். இரண்டு குதிரைகளையும் பிடித்துக்கொண்டு வந்தான். ஒன்றில் தான் ஏறிக் கொண்டான். ஆழ்வார்க்கடியானை இன்னொன்றின் மேல் ஏறிக் கொள்ளச் சொன்னான். "சற்று நேரத்தில் இந்தப் பாதையுடன் சில குதிரைகள் போகும். அவற்றின் பின்னோடு நாமும், தொடர்ந்து போகவேண்டும்" என்றான்.

வந்தியத்தேவன் "எனக்குக் குதிரை?" என்று கேட்டான்.

"இவரை மட்டுந்தான் அழைத்து வரும்படி எனக்குக் கட்டளை!"

"யாருடைய கட்டளை!"

"அதைச் சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை."

"இளவரசரை நான் உடனே பார்த்தாக வேண்டும். மிக முக்கியமான செய்தி கொண்டுவந்திருக்கிறேன்."

"அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, ஐயா!"

ஆழ்வார்க்கடியான், "தம்பி! கொஞ்சம் பொறுமையாயிரு! நான் போய் இளவரசரிடம் சொல்லி உன்னையும் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்றான்.

"வைஷ்ணவரே! நான் கொண்டு வந்திருக்கும் செய்தி மிக முக்கியமானது, மிக அவசரமானது என்று உமக்குத் தெரியாதா?"

"அந்த ஓலையை என்னிடம் கொடு; நான் கொடுத்து விடுகிறேன்."

"அது முடியாது."

"அப்படியானால் கொஞ்சம் பொறுத்திரு, வேறு வழி இல்லை!"

"வேறு வழி இல்லையா?"

"இல்லவே இல்லை!"

வந்தியத்தேவனுடைய உள்ளம் குமுறியது. ஆழ்வார்க்கடியானை இளவரசரிடந்தான் அழைத்துப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. 'ஆழ்வார்க்கடியான் அவரிடம் என்ன சொல்கிறான்' என்பதைச் சேநாதிபதி கவனிக்கச் சொல்லியிருக்கிறார். அது முடியாமற் போய்விடுமே? குதிரைகள் நெருங்கி வந்தன; அவர்கள் இருக்கும் இடத்தைக் கடந்து சென்றன; மின்னல் மின்னும் வேகத்தில் பறந்து சென்றன.

மண்டபத்தில் குதிரைகள் மீது ஆயத்தமாயிருந்த இருவரும் குதிரையின் முகக் கயிற்றை இழுத்துக் குலுக்கிப் புறப்படத் தூண்டினார்கள். அச்சமயத்தில் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. குதிரை மேலிருந்த மனிதனுடைய ஒரு காலை வந்தியத்தேவன் பிடித்து ஒரு எத்து எத்தித் தள்ளினான். அந்த மனிதன் தடால் என்று விழுந்தான். வந்தியத்தேவன் குதிரை மீது தாவி ஏறினான்; குதிரை பறந்தது. தொடர்ந்து ஆழ்வார்க்கடியானுடைய குதிரையும் பறந்தது. கீழே விழுந்த வீரன் கூச்சலிட்டு விட்டு உறையிலிருந்த கத்தியை எடுத்து எறிந்தான். வந்தியத்தேவன் தலை குனிந்து குதிரையின் முதுகோடு ஒட்டிப் படுத்துக் கொண்டான். வீரன் எறிந்த கத்தி வேகமாகச் சென்று ஒரு மரத்தில் ஆழமாய்ப் பாய்ந்தது. குதிரைகள் இரண்டும் காற்றாய்ப் பறந்து சென்றன.

முன்னால் சென்ற மூன்று குதிரைகளையும் பின்தொடர்ந்து ரொம்பவும் நெருங்காமலும், ரொம்பவும் பின் தங்காமலும் இந்த இரண்டு குதிரைகளும் சென்றன. "நல்ல வேலை செய்தாய், தம்பி!" என்று ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனை உற்சாகப்படுத்தினான். ஆனால் வந்தியத்தேவன் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. இதன் முடிவு என்ன ஆகப் போகிறதோ என்று அவன் உள்ளம் கவலையில் ஆழ்ந்திருந்தது. ஒரு பெண்ணின் வார்த்தையின் பொருட்டு எதற்காக கடல் கடந்து இந்தத் தூர தேசத்தில் வந்து, இத்தகைய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டோ ம் என்ற சிந்தனையும் உதித்தது. குதிரைகள் வாயு வேக, மனோ வேகமாய்க் குறுகிய காட்டுப் பாதையில் போய்க்கொண்டிருந்தன










Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. யானைப்பாகன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. ஆழ்வார்க்கடியான் நம்பி
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. மந்திரவாதி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 51. மாமல்லபுரம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: