BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 37. காவேரி அம்மன் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 37. காவேரி அம்மன்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 37. காவேரி அம்மன் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 37. காவேரி அம்மன்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 37. காவேரி அம்மன் Icon_minitimeWed May 11, 2011 5:31 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

இரண்டாம் பாகம் : சுழற்காற்று

37. காவேரி அம்மன்



வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் ஆர்வத்துடன் எழுந்துபோய் இளவரசரின் கட்டிலுக்குப் பக்கத்தில் கீழே உட்கார்ந்தார்கள். இளவரசர் பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்:-

"நான் சிறு பையனாயிருந்தபோது ஒரு சமயம் காவேரி நதியில் என் பெற்றோர்களுடன் படகில் போய்க்கொண்டிருந்தேன். என் தமையனும் என் தமக்கையும் கூட அச்சமயம் படகில் இருந்தார்கள். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நான் மட்டும் காவேரி நதியின் நீர் சுழித்து ஓடுவதையும், அந்த சுழிகளில் சில சமயம் கடம்ப மலர்கள் அகப்பட்டுக்கொண்டு சுழல்வதையும் கவனித்துகொண்டிருந்தேன். அந்தச் சின்னஞ் சிறிய பூக்கள் அப்படிச் சுழலில் அகப்பட்டுத் தவிப்பதைப் பார்த்து எனக்கு வேதனை உண்டாகும். சில சமயம் படகின் ஓரமாகக் குனிந்து தவிக்கும் கடம்ப மலர்களை நீர்ச் சுழல்களிலிருந்து எடுத்து விடுவேன். அப்படி எடுத்துவிட்ட ஒரு சமயத்தில் தவறித் தண்ணீரில் விழுந்துவிட்டேன். தலை குப்புற விழுந்தபடியால் திணறித் திண்டாடிப் போனேன்!

"காவேரியின் அடி மணலில் என் தலை இடித்த உணர்ச்சி இப்போதும் என் நினைவில் இருக்கிறது. பிறகு வேகமாக ஓடிய தண்ணீர் என்னை அடித்துத் தள்ளிக்கொண்டு போனதும் நினைவிருக்கிறது. எங்கேயோ வெகுதூரத்தில் பலருடைய கூக்குரல்களின் சத்தம் கேட்பது போலிருந்தது. மூச்சுத்திணறத் தொடங்கியது. சரி, காவேரி நதி நம்மைக் கடலில் கொண்டு போய்த் தள்ளிவிடப் போகிறது என்று நினைத்துக்கொண்டேன். பெற்றோர்களும், தமக்கையும், தமையனும் நம்மைக் காணாமல் எவ்வளவு துன்பப்படுவார்கள் என்ற நினைவு உண்டாயிற்று. அந்தச் சமயத்தில் யாரோ என்னை இரு கைகளாலும் வாரி அணைத்து எடுத்தது போலிருந்தது. அடுத்த கணத்தில் தண்ணீருக்கு மேலே வந்துவிட்டேன். தலை, கண், மூக்கு, வாய் எல்லாவற்றிலிருந்தும் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆயினும் என்னை வாரி எடுத்துக் காப்பாற்றிய கைகள் என் கண்ணுக்குத் தெரிந்தன. பிறகு அந்தக் கரங்களுக்குரியவரின் முகத்தையும் பார்த்தேன். சில கணநேரந்தான் என்றாலும் அந்த முகம் என் மனத்தில் பதிந்துவிட்டது. இதற்கு முன் எப்போதோ பார்த்த முகமாகவும் தோன்றியது. ஆனால் இன்னார் என்பதாகத் தெரியவில்லை.

"பின்னர் அந்தக் கைகள் வேறு யாரிடமோ என்னைக் கொடுத்தன. மறுகணம் நான் படகில் இருந்தேன். தாய், தந்தை, தமக்கை, தமையன் எல்லோரும் என்னைச் சுற்றிக் கொண்டார்கள். அவர்களுடைய துயரமும், பரிவும், அன்பும், ஆதரவும் என் கவனத்தை முழுவதும் கவர்ந்துவிட்டன. சிறிது நேரத்திற்குப் பிறகு என்னைத் தண்ணீரிலிருந்து எடுத்துக் காப்பாற்றியது யார் என்பதைப் பற்றிக் கேள்வி எழுந்தது. ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டார்கள்; என்னையும் கேட்டார்கள். நானும் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்தத் தெய்வீகமான முகத்தை எங்கும் காணவில்லை. ஆகையால் கேள்விக்கு மறுமொழி சொல்ல முடியாமல் விழித்தேன். கடைசியில் எல்லாருமாகச் சேர்ந்து காவேரி அம்மன்தான் என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். நான் நதியில் விழுந்து பிழைத்த தினத்தில் ஆண்டுதோறும் காவேரி அம்மனுக்குப் பூஜை போடவும் ஏற்பாடு செய்தார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் திருப்தி ஏற்படவில்லை. என்னைக் காப்பாற்றியது காவேரி அம்மனாயிருந்தாலும் சரி, வேறு மானிட ஸ்திரீயாயிருந்தாலும் சரி என் மனத்தில் பதிந்திருந்த அவளுடைய திருமுகத்தை இன்னொரு தடவை தரிசிக்க வேண்டும் என்ற தாபம் என் மனத்தில் குடிகொண்டு விட்டது. காவேரி நதிப் பக்கம் போகும் போதெல்லாம் 'திடீரென்று அத்தேவி நீரிலிருந்து எழுந்து எனக்குத் தரிசனம் தரமாட்டாளா?' என்ற ஆசையுடன் அங்குமிங்கும் பார்ப்பேன். நாளாக ஆக, அவள் ஒரு மானிட ஸ்திரீயாகவே இருக்கலாம் என்ற எண்ணம் வலுப்பட்டது. ஆகையால் எந்தத் திருவிழாவுக்குப் போனாலும் அங்கே கூடியுள்ள மூதாட்டிகளின் முகங்களையெல்லாம் நான் ஆர்வத்தோடு உற்றுப் பார்ப்பது வழக்கம். சில காலத்துக்குப் பிறகு அப்படிப் பார்ப்பது அவ்வளவு நல்ல வழக்கமன்று என்பதை உணர்ந்தேன் வருஷம் ஆக ஆக மறுபடியும் அந்தத் தெய்வ முகத்தைத் தரிசிக்கலாம் என்ற ஆசையை இழந்து விட்டேன்.

"சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னால் நமது தென்திசைப் படைகளின் மாதண்ட நாயகனாகி நான் இங்கு வந்து சேர்ந்தேன். அதற்கு முன்பே சேநாபதி பூதி விக்கிரம கேசரி இலங்கையில் பல பகுதிகளைப் பிடித்திருந்தார். இந்த அநுராதபுரம் பல தடவை கைமாறி, அப்போது மறுபடியும் மகிந்தன் படைகளின் வசத்தில் இருந்தது. இந்நகரை நம் வீரர்கள் முற்றுகையிட்டிருந்தார்கள். முற்றுகை நடந்துகொண்டிருந்த சமயத்தில் நான் இலங்கையின் பல பகுதிகளையும் பார்த்துத் தெரிந்து கொள்ள விரும்பினேன். பொறுக்கி எடுத்த ஆயிரம் வீரர்களை என்னுடன் சேநாபதி அனுப்பி வைத்தார். நம் சைன்யத்தின் வசப்பட்டிருந்த எல்லாப் பகுதிகளுக்கும், காடு மேடு, மலை நதி ஒன்றும் விடாமல் போய், அந்தந்தப் பிரதேசங்களின் இயல்பை நன்கு தெரிந்துகொண்டு வந்தேன். இந்த இலங்கைத் தீவையொட்டிக் கடலில் பல சிறிய தீவுகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தத் தீவுகளுக்கும் போய்ப் பார்த்து வந்தேன். இப்படிச் சுற்றி வருகையில் ஒரு சமயம் இந்த நகரத்துக்கு வடக்கே சில காத தூரத்தில் காட்டின் மத்தியில் தாவடி போட்டுக் கொண்டு தங்கியிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்தின் பக்கத்தில் 'யானை இறவு'த் துறை இருந்தது. அங்கே இலங்கைக்குக் கிழக்கேயுள்ள கடலும் மேற்கேயுள்ள கடலும் மிக நெருங்கி வந்து ஒரு குறுகிய கால்வாயின் மூலம் ஒன்று சேருகின்றன. அந்தத் துறையின் வழியாகச் சில சமயம் யானைக் கூட்டங்கள் இலங்கையின் வடபகுதிக்குச் செல்லுவது வழக்கமாம். ஆகையால் அந்த இடத்துக்கு 'யானை இறவு' என்று பெயர் வந்ததாகச் சொல்லுகிறார்கள். நாங்கள் அங்கே தங்கியிருந்த சமயத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது. இரவு நேரங்களில் தாவடிக்குச் சமீபத்தில் ஒரு புலம்பல் குரல் கேட்டது. அது மனிதக் குரலா, பட்சியின் குரலா, விலங்கின் குரலா என்று முதலில் தெரியவில்லை, கேட்பவர்கள் ரோமம் சிலிர்க்கும் படியான சோகம் அதில் தொனித்தது. முதலில், தாவடியின் ஓரத்தில் இருந்த வீரர்கள் காதில் விழுந்தது. அதை அவர்கள் பொருட்படுத்தாமல் இருந்தார்கள். பிறகு, பாசறையைச் சுற்றிலும் பல இடங்களிலும் கேட்டது. என்னிடத்திலும் சிலர் வந்து சொன்னார்கள். நான் அதை இலட்சியம் செய்யவில்லை. 'பேய் பிசாசு என்று பயப்படுகிறீர்களா? அப்படியானால் ஊருக்குத் திரும்பிப் போய் அம்மா மடியில் பயமின்றிப் படுத்துத் தூங்குங்கள்!' என்றேன். இதனால் அவர்களுக்கு ரோஷம் வந்துவிட்டது. அப்படி ஓலமிடுகிற குரல் மனிதக் குரலா, விலங்கின் குரலா அல்லது பிசாசின் குரலா என்று தெரிந்து கொள்ளத் தீர்மானித்தார்கள். ஓலம் வந்த இடத்தை நோக்கி ஓடிப் போய் பார்த்தார்கள். அவர்கள் அருகில் நெருங்கியதும், அந்தக் குரலுக்குரிய உருவம் ஓடத் தொடங்கியது. அது ஒரு பெண்ணின் உருவம் போலத் தோன்றியது. ஆனால் அந்த உருவத்தை இவர்களால் பிடிக்க முடியவில்லை. அதற்குப் பிறகும் அந்த ஓலம் நிற்காமல் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது.

"முதலில் அதை நான் லட்சியம் செய்யாமல்தானிருந்தேன். ஆனால் என்னுடைய வீரர்களுக்கு இதைத் தவிர வேறு பேச்சே இல்லாமற் போய்விட்டது. உண்மையிலேயே சிலர் பயப் பிராந்தி கொண்டு விட்டார்கள். அதன் பேரில் மர்மம் இன்னதென்பதைக் கண்டறியத் தீர்மானித்தேன். ஒரு நாள் இரவு அந்த ஓலம் வந்த திசையை நோக்கி, நானும் சில வீரர்களும் சென்றோம். புதர் மறைவிலிருந்து ஒரு ஸ்திரீ உருவம் வெளிப்பட்டது. ஒரு கணநேரம் எங்களைப் பார்த்துவிட்டுத் திகைத்து நின்றது. மறுபடி ஓடத்தொடங்கியது. எல்லாருமாக துரத்திச் சென்றால் அந்த உருவத்தைப் பிடிக்க முடியாது என்று என் மனத்திற்குள் ஒரு குரல் கூறியது. எனவே, மற்றவர்களை 'நில்லுங்கள்' என்று சொல்லி நிறுத்திவிட்டு, நான் மட்டும் தொடர்ந்து ஓடினேன். ஒரு தடவை அந்த உருவம் திரும்பிப் பார்த்தது. தனி ஆளாக நான் வருவதைப் பார்த்து என்னை வரவேற்கும் பாவனையில் காத்துக்கொண்டிருந்தது. இப்போது எனக்கும் திகிலாகத்தான் போய்விட்டது. ஒரு வினாடி நேரம் தயங்கி நின்றேன். மறுபடி நெஞ்சை உறுப்படுத்திக்கொண்டு முன்னால் சென்று அந்தப் பெண் உருவத்தை நெருங்கினேன். நிலா வெளிச்சம் அவள் முகத்தில் நன்றாக விழுந்தது. தெய்வீகமான அம்முகத்தில் புன்னகை அரும்பியிருந்தது. அந்தக் கணத்தில் எனக்கு நினைவு வந்துவிட்டது. காவேரி அம்மன் இவள் தான்! என்னை வெள்ளம் அடித்துப் போகாமல் எடுத்துக் காப்பாற்றிய தெய்வ மங்கை இவள் தான்!... சற்று நேரம் பிரமை பிடித்தவன் போல் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு, "தாயே! நீ யார்! இங்கே எப்போது வந்தாய்? எதற்காக வந்தாய்? உன்னை எத்தனையோ காலமாக நான் தேடிக்கொண்டிருந்தேனே? என்னைப் பார்க்க விரும்பினால் நேரே என்னிடம் வருவதற்கென்ன? இந்தத் தாவடியைச் சுற்றி ஏன் வட்டமிடுகிறாய்? ஏன் புலம்புகிறாய்?" என்று அலறினேன். அந்த மாதரசி மறுமொழி சொல்லவில்லை. மீண்டும் மீண்டும் நான் கேட்டும் பயனில்லை. சிறிது நேரத்துக்கெல்லாம் அவளுடைய கண்களில் கண்ணீர் பெருகத் தொடங்கியது. அந்தக் கண்ணீர் என் நெஞ்சைப் பிளந்தது. அவள் ஏதோ சொல்ல முயன்றாள் என்று தோன்றியது. ஆனால் வார்த்தை ஒன்றும் வெளிவரவில்லை. உருத்தெரியாத சப்தம் ஏதோ அவள் தொண்டையிலிருந்து வந்தது. அப்போது சட்டென்று எனக்குத் தெரிந்துவிட்டது. அவள் பேசும் சக்தியில்லாத ஊமை என்று. அப்போது நான் அடைந்த வேதனையைப் போல் என்றும் அடைந்ததில்லை. இன்னது செய்வதென்று தெரியாமல் நான் செயலற்று நின்றேன். அந்த ஸ்திரீ சட்டென்று என்னைக் கட்டித் தழுவி உச்சி மோந்தாள். அவள் கண்ணீர்த் துளிகள் என் தலையில் விழுந்தன. உடனே, அடுத்த கணத்திலேயே, என்னை விட்டுவிட்டு ஓடினாள். திரும்பிப் பார்க்கவும் இல்லை. நானும் அவளைத் தொடர்ந்து செல்ல முயலவில்லை. பாசறைக்குச் சென்றதும் என்னை ஆவலோடு சூழ்ந்து கொண்டு கேட்ட வீரர்களிடம், 'அவள் பேயும் அல்ல; பிசாசும் அல்ல; சாதாரண ஸ்திரீதான்! வாழ்க்கையில் ஏதோ பெருந்துயரத்தினால் சித்த பிரமை கொண்டிருக்கிறாள். மறுபடியும் அவள் வந்தால் அவளைத் தொடர்ந்து போய்த் தொந்தரவு செய்யாதீர்கள்?' என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டேன்.

"மறுநாள் முழுதும் அங்கிருந்து தாவடியைக் கிளப்பிக் கொண்டு போய்விடலாமா என்ற யோசனை அடிக்கடி எனக்குத் தோன்றி வந்தது. ஆனாலும் முடிவு செய்யக்கூடவில்லை. ஒரு வேளை மறுபடியும் அந்த ஸ்திரீ வரக்கூடும் என்ற ஆசை மனத்திற்குள் இருந்தது. இத்தகைய யோசனையிலேயே பொழுதும் போய்விட்டது; இரவு வந்தது. நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. தாவடிக்கு அருகில் அந்த ஓலக் குரல் கேட்டது. நான் மற்ற வீரர்களிடம் என்னைப் பின்தொடர்ந்து வரவேண்டாம் என்று சொல்லிவிட்டுக் குரல் கேட்ட இடத்தை நோக்கிப் போனேன். அந்தப் பெண்ணரசி என்னை முதல் நாள் மாதிரியே புன்னகையுடன் வரவேற்றாள். சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ சொல்ல முயன்றாள் எனக்கு விளங்கவில்லை.

"பிறகு என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள். அவளுடன் போவதற்கு எனக்குக் கொஞ்சம்கூடத் தயக்கம் உண்டாகவில்லை. காட்டு வழியில் போகும்போது முள் செடிகளின் கிளைகள் என் மீது படாதவண்ணம் அவள் விலக்கி விட்டுக்கொண்டு போனது என் நெஞ்சை உருக்கியது. கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு குடிசை தென்பட்டது. அந்தக் குடிசைக்குள் ஓர் அகல் விளக்கு மினுக்கு மினுக்கு என்று எரிந்தது. அந்த வெளிச்சத்தில் அங்கே படுத்திருந்த கிழவன் ஒருவனைக் கண்டேன். அவன் நோயாகப் படுத்திருந்தான் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவன் உடம்பெல்லாம் பொறுக்க முடியாத குளிரினால் நடுங்குவதுபோல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் உடம்பையே சில சமயம் தூக்கித் தூக்கிப் போட்டது. பற்கள் கிட்டிப் போயிருந்தன. கண்கள் சிவந்து தணல்களைப் போல் அனல் வீசின. ஏதேதோ உருத் தெரியாத வார்த்தைகளை அவன் பிதற்றிக் கொண்டிருந்தான்...

"உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? இன்று பாதாளக் குகையில் நாம் பார்த்த மஹா போதி விஹாரத்தில் ஒரு பிக்ஷு நடுங்கிக் கொண்டிருந்தாரல்லவா? அவர் பேரில் தேவர்கள் ஆவிர்ப்பவித்திருந்ததாகச் சொன்னார்கள் அல்லவா? அப்போது எனக்குக் காட்டின் மத்தியில் குடிசையில் பார்த்த கிழவன் ஞாபகம் வந்தது. அந்தப் பிக்ஷுவின் பேரில் தேவர்கள் ஆவிர்ப்பவித்திருக்கிறார்களா அல்லது நடுக்கு ஜுரம் என்ற கொடிய நோய் ஆவிர்ப்பவித்திருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதைப்பற்றி நான் பிரஸ்தாபிக்கவில்லை. ஏன் பிரஸ்தாபிக்க வேண்டும்? ஏன் அந்தப் பக்திமான்களின் நம்பிக்கையைக் கெடுக்கவேண்டும்? இந்த வருஷத்தில் இந்தப் பெரஹாரத் திருவிழா நடப்பதற்கு அனுமதி கொடுத்தேனே, ஒரு விதத்தில் பெரிய தவறு செய்துவிட்டேன் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே பாதிக்கு மேல் அழிந்து போயிருக்கும் இந்தப் புராதன நகரத்திற்குக் குளிர்காய்ச்சலும் வந்து விட்டால் என்ன கதி ஆவது? மிச்சமிருக்கும் ஜனங்களும் இங்கிருந்து ஓட வேண்டியதுதான்..."

இவ்வாறு சொல்லி அருள்மொழிவர்மர் ஏதோ யோசனையில் ஆழ்ந்தார். சற்றுப் பொறுத்துப் பார்த்துவிட்டு வந்தியத்தேவன் "ஐயா! இந்த நகரம் எப்படியாவது போகட்டும். குடிசையில் பிறகு என்ன நடந்தது? சொல்லுங்கள்!" என்றான்.

"குடிசையில் ஒன்றும் நடக்கவில்லை; அந்த மாதரசி நான் அதிக நேரம் அங்கு நிற்கக் கூடாது என்று கருதினாள் போலிருக்கிறது. உடனே என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வந்து விட்டாள். பிறகு சில சமிக்ஞைகள் மூலம், தான் சொல்ல விரும்பியதைச் சொன்னாள். அவள் சொல்ல விரும்பியது என்னவென்பதை என் மனம் தெரிந்து கொண்டுவிட்டது. 'இந்தப் பிரதேசத்தில் இருக்கவேண்டாம். இங்கே இருந்தால் இந்தக் குளிர் காய்ச்சல் நோய் வந்துவிடும். உடனே இங்கிருந்து தாவடியைப் பெயர்த்துக்கொண்டு போய் விடு!' என்று அவள் சமிக்ஞைகளின் மூலமாகச் சொல்லி என்னையும் தெரிந்துகொள்ளச் செய்துவிட்டாள். என் பேரில் அவளுக்குள்ள அளவில்லாத அன்பின் காரணமாகவே இந்த எச்சரிக்கை செய்ததாகவும் அறிந்து கொண்டேன். தெய்வத்தின் எச்சரிக்கையாகவே அதை எடுத்துக் கொண்டு அன்றிரவே தாவடியை அங்கிருந்து கிளப்பும்படி கட்டளையிட்டேன். என்னுடனிருந்த வீரர்களுக்கும் அது மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. அந்தப் பயங்கரமான ஓலக் குரலை இனிக் கேட்க வேண்டாம் என்று எண்ணி அவர்கள் உற்சாகமடைந்தார்கள்..."








Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 37. காவேரி அம்மன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. நந்தினி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. இரு சிறைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: