arun. Administrator
Posts : 2039 Points : 6412 Join date : 2010-06-22
| Subject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 48. 'கலபதி'யின் மரணம் Wed May 11, 2011 12:14 pm | |
| கல்கியின் பொன்னியின் செல்வன்
இரண்டாம் பாகம் : சுழற்காற்று
48. 'கலபதி'யின் மரணம் குதிரை மீது வந்த பெண்மணி யார் என்பது இளவரசருக்கு உடனே தெரிந்து போயிற்று. குதிரை நின்ற இடத்தை நோக்கி அவர் விரைந்து சென்றார். அவருடன் பூங்குழலியும் போனாள். மற்றவர்களும் சற்று தூரத்தில் தயங்கித் தயங்கிப் போனார்கள்.
ஊமை ராணி அதற்குள் குதிரையிலிருந்து இறங்கிவிட்டாள். பின்னால் கூட்டமாக வந்தவர்களைச் சற்றுக் கவலையுடன் பார்த்து விட்டுப் பூங்குழலியிடம் சமிக்ஞை பாஷையில் ஏதோ சொன்னாள்.
"பெரியம்மா காட்டில் ஏதோ அதிசயத்தைப் பார்த்திருக்கிறாள். அந்த இடத்துக்கு நம்மை வரும்படி அழைக்கிறாள்!" என்றாள்.
இளவரசர் அக்கணமே போவதென்று தீர்மானித்துவிட்டார். மற்றவர்களும் தம்முடன் வரலாமா என்று கேட்கச் சொன்னார். ஊமை ராணி சிறிது யோசித்து விட்டு, சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள்.
போகும்போது எல்லோரும் அவள் ஏறி வந்த குதிரையைப் பற்றியே பேசிக்கொண்டு போனார்கள். அது அரபு நாட்டிலிருந்து வந்த அற்புதமான உயர் ஜாதிக் குதிரை இந்த மூதாட்டிக்கு எப்படிக் கிடைத்தது? சமீப காலத்தில் இந்தப் பிரதேசத்தில் சைன்யம் எதுவும் வந்து இறங்கவில்லை; போர் ஒன்றும் நடக்கவில்லை. அப்படியிருக்கும்போது இக்குதிரை இந்தப் பெண்மணிக்கு எப்படிக் கிடைத்திருக்க முடியும்?
தொண்டைமானாற்றின் முகத்துவாரத்தின் அருகில் சோழ நாட்டுக் கப்பல் ஒன்று கரைதட்டிப் புதைந்திருந்ததைப் பார்த்தோம். அங்கிருந்து சிறிது தூரம் வரையில் இலங்கைத் தீவின் கரை தென்கிழக்குத் திசையாக வளைந்து நெளிந்து சென்றது. அடிக்கடி கடல் நீர் பூமிக்குள் சிறிய நீர் நிலைகளையும் பெரிய நீர்நிலைகளையும் உண்டாக்கியிருந்தது. இத்தகைய வளைகுடா ஒன்றுக் குள்ளிருந்து தான் வந்தியத்தேவன் முதலியவர்கள் அன்று காலையில் பார்த்த கப்பல் வெளியே வந்து கடலில் சென்றது.
இப்போது ஊமை ராணி தென்கிழக்குத் திசையிலே அவர்களை அழைத்துக் கொண்டு சென்றாள். அடர்ந்த காட்டுக்குள்ளே புகுந்து சென்றாள். போகப் போக இளவரசரின் ஆர்வம் அதிகமாயிற்று ஏதோ ஒரு முக்கியமான சம்பவம் நடந்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் நம்மை இம்மூதாட்டி அழைத்துப் போகமாட்டாள் என்று எண்ணினார். திடீரென்று அச்சம்பவம் அவர்களுடைய கண் முன்னால் வந்து நின்றது!
காட்டில் சிறிது இடைவெளி ஏற்பட்டது. நீர் நிலை ஒன்று தெரிந்தது. அதன் கரையில் மனிதர்கள் சிலர் இறந்து கிடந்தார்கள். பிணங்களின் நாற்றத்தோடு காய்ந்துபோன மனித இரத்தத்தின் நாற்றமும் கலந்து வந்தது. எத்தனையோ போர்க்களங்களின் அநுபவம் பெற்ற அந்த மனிதர்களுக்கு உயிரில்லா மனித உடல்களும் காய்ந்த இரத்தமும் புதிய அநுபவங்கள் அல்ல. எனினும், ஏதோ அதிசயமான, மர்ம பயங்கரமான காரியம் இங்கே நடந்திருக்கிறது என்ற எண்ணம் எல்லாருடைய மனத்திலும் ஆர்வத்தோடு அருவருப்பையும் உண்டாக்கியது.
அருகிலே சென்று பார்த்தால் உயிரற்றுக் கிடந்த உடல்கள் எல்லாம் தமிழ்நாட்டு மாலுமிகள் உடல்கள் என்று தெரிய வந்தது.
"சீக்கிரம்! சீக்கிரம்; யாருக்காவது இன்னும் உயிர் இருக்கிறதா என்று பாருங்கள்!" என்று இளவரசர் கூவினார்.
அவருடன் வந்தவர்கள் ஒவ்வொரு உடலுக்கு அருகிலும் சென்று பரிசோதிக்கத் தொடங்கினார்கள்.
இளவரசரை ஊமை ராணி மறுபடியும் கையினால் சமிக்ஞை செய்து அழைத்துப் போனாள். உடல்கள் கிடந்த இடத்துக்குச் சிறிது தூரத்துக்கப்பால் இருந்த மரத்தடிக்கு அழைத்துப் போனாள். அந்த மரத்தடியில் ஒரு கோர ஸ்வரூபம் சாய்ந்து படுத்திருந்தது. படுத்திருந்தவன் மனிதன் தான். ஆனால் அதை நம்புவது கஷ்டமாயிருந்தது. உடம்பெல்லாம் காயங்கள். மண்டையில் பட்டிருந்த காயங்களிலிருந்து, இரத்தம் முகத்தில் வழிந்து மிகப் பயங்கரமாகச் செய்திருந்தது. ஒவ்வொரு கணமும் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அம்மனிதனுடைய முகத்தில் இளவரசரைக் கண்டதும் மலர்ச்சியின் சிறிய அறிகுறி தோன்றியது. அவன் வாய் திறந்து ஏதோ பேச முயன்றான். ஆனால் அவன் வாயிலும் இரத்தமாயிருந்தபடியால் அவனுடைய முகத்தின் கோரம் அதிகம் ஆயிற்று.
இளவரசர் பரபரப்புடன் அவன் அருகில் போய் உட்கார்ந்தார். "சீக்கிரம் தண்ணீர் கொண்டு வாருங்கள்" என்று கத்தினார்.
அம்மனிதன், "வேண்டாம், இளவரசே! சற்று முன்னால் தான் இந்தப் பெண்மணி தண்ணீர் கொடுத்தாள். அவள் அச்சமயம் வராதிருந்தால் இதற்குள் என் உயிர் பிரிந்திருக்கும். ஐயா! தங்களுக்குத் துரோகம் செய்ய வந்ததின் பலனை இங்கேயே அநுபவித்து விட்டேன். மறு உலகில் இதற்காக மறுபடியும் கடவுள் என்னைத் தண்டிக்கமாட்டார்" என்றான்.
இளவரசர் அவன் குரலைக் கேட்டதும் முகத்தை உற்றுப் பார்த்தார். "ஆ! கலபதி!(அந்நாளில் சேனைத் தலைவனைத் 'தளபதி' என்று அழைத்ததுபோல் மரக்கலத் தலைவனைக் 'கலபதி' என்று அழைத்தார்கள்.) இது என்ன பேச்சு! இதெல்லாம் எப்படி நடந்தது? எனக்கு நீர் என்ன துரோகம் செய்வதற்காக வந்தீர்? அதை நான் நம்பவே முடியாது!" என்றார்.
"ஐயா! தங்கள் உத்தம குணத்தினால் அப்படிச் சொல்கிறீர்கள். பழுவேட்டரையர்களின் சொற்படி தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு போக வந்தேன். இதோ கட்டளை!" என்று சொல்லி, மடியிலிருந்து ஓலை ஒன்றை எடுத்துக் கொடுத்தான், சாகுந்தறுவாயில் இருந்த கலபதி.
ஓலையைக் கண்ணோட்டமாக இளவரசர் ஒரு வினாடியில் பார்வையிட்டார்.
"இதில் உமது துரோகம் என்ன? சக்கரவர்த்தியின் கட்டளையைத்தானே நிறைவேற்ற வந்தீர்? அதையறிந்து நானே விரைந்து ஓடி வந்தேன். அதற்குள் இந்த விபரீதங்கள் எப்படி நேர்ந்தன? சீக்கிரம் சொல்லுங்கள்" என்றார்.
"சீக்கிரம் சொல்லத்தான் வேண்டும் இல்லாவிட்டால் அப்புறம் சொல்லவே முடியாது!" என்றான் கலபதி. பிறகு அவன் அடிக்கடி தட்டுத்தடுமாறிப் பின்வரும் வரலாற்றைக் கூறினான்.
சக்கரவர்த்தியின் கட்டளையைப் பெற்றுக்கொண்டு கலபதி இரண்டு கப்பல்களுடன் நாகப்பட்டினத்திலிருந்து கிளம்பினான். அந்த வேலை அவனுக்குப் பிடிக்கவில்லைதான். ஆயினும் சக்கரவர்த்தியின் கட்டளையை மீற முடியாமல் புறப்பட்டான். புறப்படும்போது பழுவேட்டரையர்கள் அவனிடம் கண்டிப்பாகச் சில கட்டளைகளை இட்டிருந்தார்கள். அதாவது இலங்கையை அடைந்ததும் தனியான இடத்தில் கப்பல்களை நிறுத்திக்கொண்டு, இளவரசர் எங்கே இருக்கிறார் என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவரை நேரில் சந்தித்து, சக்கரவர்த்தியின் ஓலையைக் கொடுக்க வேண்டும். அதற்கு முன்னால் சேநாதிபதி கொடும்பாளூர் வேளாருக்கு இந்தச் செய்தி தெரியக் கூடாது. இளவரசரிடம் கட்டளையைக் கொடுத்த பிறகு அவராக வந்தால் சரி, இல்லாவிட்டால் பலவந்தமாகச் சிறைப்படுத்தியாவது கொண்டு வரவேண்டும்... இவ்விதம் சொல்லித் தங்கள் அந்தரங்க ஆட்கள் சிலரையும் பழுவேட்டரையர்கள் கலபதியுடன் சேர்த்து அனுப்பினார்கள்.
கலபதி மனத்தில் பெரிய பாரத்துடனேயே புறப்பட்டு வந்தான். அவன் கீழிருந்த கப்பல் மாலுமிகளில் பலருக்கு எதற்காக இலங்கை போகிறோம் என்பது தெரிந்திருக்கவில்லை. இதனால் அவனுடைய மனவேதனை அதிகமாயிருந்தது. அவர்களிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கினான். கப்பல்களைத் தொண்டைமானாற்றின் முகத்துவாரத்தில் கொண்டு போய் நிறுத்திய பிறகு கலபதி இன்னும் சில மாலுமிகளோடு காங்கேசன் துறைக்குப் போனான். இளவரசர் அப்போது எங்கே இருக்கிறார் என்று விசாரித்து வருவதற்காகத்தான். தென்னிலங்கையின் உட்பகுதியில் இளவரசர் பிரயாணம் செய்து கொண்டிருப்பதாகக் காங்கேசன் துறையில் தெரிந்து கொண்டு திரும்பி வந்தான்.
கலபதி திரும்பி வருவதற்குள்ளே மாலுமிகளுக்கு விஷயம் தெரிந்து விட்டது. பழுவேட்டரையர்களின் அந்தரங்க ஆட்கள் சிலர் இருந்தார்கள் அல்லவா? அவர்கள் மூலம் பிரஸ்தாபம் ஆகிவிட்டது. கலபதி திரும்பி வந்ததும் மாலுமிகள் கூட்டமாகச் சேர்ந்துகொண்டு கலபதியிடம் கேட்டார்கள். 'பொன்னியின் செல்வரைச் சிறைப்படுத்திக் கொண்டு போகவா நாம் வந்திருக்கிறோம்?' என்று வினவினார்கள். கலபதி உண்மையைக் கூறினான். "நாம் இராஜாங்க சேவையில் இருப்பவர்கள். சக்கரவர்த்தியின் கட்டளையை நிறைவேற்ற வேண்டியவர்கள்" என்றான்.
"எங்களால் அது முடியாது இது சக்கரவர்த்தியின் கட்டளையும் அல்ல! பழுவேட்டரையர்களின் கட்டளை" என்றார்கள்.
"பின்னே நீங்கள் என்னதான் செய்யப் போகிறீர்கள்?" என்று கலபதி கேட்டான்.
"மாதோட்டம் சென்று இளவரசருடன் சேர்ந்து கொள்ளப்போகிறோம்."
"மாதோட்டத்தில் இளவரசர் இல்லையே!"
"இல்லாவிடில் சேநாதிபதி கொடும்பாளூர் வேளாரிடம் சரண் அடைவோம்."
கலபதி அவர்களுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் பயனில்லை. கலபதியுடன் நிற்பதற்குப் பழுவேட்டரையர்களின் அந்தரங்க ஆட்கள் உள்படச் சுமார் பத்துப் பேர்தான் சம்மதித்தார்கள். பத்துப்பேரை வைத்துக்கொண்டு இருநூறு பேரை என்ன செய்ய முடியும்?
"சரி; அப்படியானால் இப்போதே போய்த் தொலையுங்கள்! பின்னால் வருகிறதையும் அநுபவித்துக் கொள்ளுங்கள்! என்னால் இயன்றவரையில் என் கடமையை நான் செய்வேன்!" என்றான் கலபதி.
மாலுமிகளில் பலர் இரண்டு கப்பல்களில் ஒன்றைச் செலுத்திக்கொண்டு மாதோட்டம் போகலாம் என்று உத்தேசித்தார்கள். மற்றும் சிலர் அதை ஆட்சேபித்தார்கள். ஆகவே கப்பலிருந்து இறங்கித் தரைமார்க்கமாகவே புறப்பட்டார்கள். புறப்படும் அவசரத்தில் அவர்கள் ஏறியிருந்த கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சவில்லை. கப்பல் நகர்ந்து நகர்ந்து சென்று கரைதட்டி உடைந்து மண்ணில் புதைந்துவிட்டது.
இதற்குப் பிறகு கலபதி மற்றொரு கப்பலுடன் அங்கேயிருக்க விரும்பவில்லை. காங்கேசன் துறையில் அவன் ஒரு செய்தி கேள்விப்பட்டிருந்தான். சில நாளைக்கு முன்பு முல்லைத் தீவுக்குப் பக்கத்தில் அரபு நாட்டுக் கப்பல் ஒன்று உடைந்து முழுகிவிட்டதென்றும், அதிலிருந்து தப்பிப் பிழைத்த மூர்க்க அராபியர்கள் சிலர் அந்தப் பக்கத்தில் திரிந்து கொண்டிருந்ததாகவும் சொன்னார்கள். எனவே, கரைதட்டிப் புதைந்த கப்பலுக்குப் பக்கத்தில் இன்னொரு கப்பலையும் நிறுத்தி வைக்க அவன் விரும்பவில்லை. நன்றாயிருந்த கப்பலை அங்கிருந்து அப்புறப்படுத்திக் கொண்டு போனான். கடல் அடுத்தபடியாகப் பூமிக்குள் சென்றிருந்த குடாவில் கொண்டு போய் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினான்.
பின்னர் கலபதி தன்னுடன் இருந்த மாலுமிகளுடன் கரையில் இறங்கி மேலே செய்ய வேண்டியதைப் பற்றி அவர்களிடம் கலந்து ஆலோசித்தான். அவன் மட்டும் தனியாகச் சென்று இளவரசரிடம் கட்டளையைச் சேர்ப்பிப்பதாகவும் அதுவரையில் மற்றவர்கள் கப்பலைப் பத்திரமாகப் பாதுகாத்து வரவேண்டும் என்றும் சொன்னான். மாலுமிகள் தங்கள் கவலைகளைக் கலபதியிடம் தெரிவித்துக் கொண்டார்கள். அவர்களுக்குக் கலபதி தைரியம் கூறிக் கொண்டிருக்கும்போதே மயிர்க்கூச்சு எடுக்கும்படியான பயங்கரக் கூச்சல்களைப் போட்டுக் கொண்டு சில மனிதர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். அவர்கள் அரபு நாட்டார் என்பது தெரிந்தது. தமிழ் மாலுமிகள் அச்சமயம் இந்தத் தாக்குதலை எதிர்ப்பார்க்கவில்லை. சண்டைக்கு ஆயத்தமாகவும் இருக்கவில்லை. கையில் கத்திகளும் வைத்திருக்கவில்லை. எனினும் தீரத்துடன் போராடினார்கள். போராடி எல்லாரும் உயிரை விட்டார்கள்.
"இளவரசே! நான் ஒருவன் மட்டும் மரண காயங்களுடன் ஓடி ஒளிந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன் - நடந்தது என்னவென்பதை யாருக்காவது சொல்லவேண்டும் என்பதற்காகவே இதுவரையில் உயிரை வைத்துக் கொண்டிருந்தேன். இளவரசே! தங்களையே நேரில் பார்த்துச் சொல்லும் படியான பாக்கியம் எனக்குக் கிட்டி விட்டது. தங்களுக்கு நான் துரோகம் செய்ய எண்ணியதற்குப் பலனையும் அநுபவித்து விட்டேன். பொன்னியின் செல்வரே! என்னை மன்னித்து விடுங்கள்!" என்றான் கலபதி.
"கடமையை ஆற்றிய கலபதியே! உம்மை எதற்காக நான் மன்னிக்க வேண்டும்? போர்க்களத்தில் உயிரை விடும் வீரர்கள் அடையும் வீர சொர்க்கம் ஒன்று இருந்தால் அதற்கு நீரும் அவசியம் போய்ச் சேருவீர்! சந்தேகம் இல்லை!" என்று சொல்லி இளவரசர் அக்கலபதியின் தீயெனக் கொதித்த நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.
கலபதியின் கண்களிலிருந்து அப்போது பெருகிய கண்ணீர் அவன் முகத்தில் வழிந்திருந்த இரத்தத்தோடு கலந்தது. மிக்க சிரமத்துடன் அவன் தன் கைகளைத் தூக்கி இளவரசரின் கரத்தைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான். இளவரசரின் கரம் கலபதியின் கண்ணீரால் நனைந்தது. அவருடைய கண்களிலும் கண்ணீர் துளித்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் கலபதியின் உயிர் அவன் உடலை விட்டுப் பிரிந்தது | |
|