BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. கரிகாலன் கொலை வெறி Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. கரிகாலன் கொலை வெறி

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. கரிகாலன் கொலை வெறி Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. கரிகாலன் கொலை வெறி   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. கரிகாலன் கொலை வெறி Icon_minitimeSun May 29, 2011 3:59 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

நான்காம் பாகம் : மணிமகுடம்

41. கரிகாலன் கொலை வெறி




ஆதித்த கரிகாலன் தான் வேட்டையாடச் சென்று வெகு காலமாயிற்று என்றும், வில்வித்தையையே மறந்து போயிருக்கக் கூடும் என்று சொன்னான் அல்லவா? அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள் அவ்விதம் எண்ணவில்லை. அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளுக்கு அன்று எத்தனையோ காட்டு மிருகங்கள் இரையாயின. முயல்களும், மான்களும், கரடிகளும், சிறுத்தைகளும் செத்து விழுந்தன. விலங்கு எதுவும் கண்ணில் படாத போது வானத்தில் பறந்த பறவைகள் மீது அவனுடைய அம்புகள் பாய்ந்தன. பருந்துகளும் இராஜாளிகளும் அலறிக் கொண்டு தரையில் விழுந்தன. கரிகாலனுடைய கொலை வெறி நேரமாக ஆக அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடன் சென்றவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. குதிரைகளும் மனிதர்களும் கூட்டமாக இரைச்சலிட்டுக் கொண்டு சென்றதில் காட்டு மிருகங்கள் தத்தம் இடத்திலிருந்து கிளம்பிச் சிதறி ஓடின. மற்றவர்கள் வேட்டையில் செய்த உதவி அவ்வளவேதான். கரிகாலன் மீது பாய வந்த மிருகங்கள் மீது மற்றவர்கள் அம்பு விடுவதையும் வேலை எறிவதையும் கூடக் கரிகாலன் அனுமதிக்கவில்லை. கந்தமாறன் ஒரு தடவை அவ்வாறு கரிகாலன் மீது பாய்ந்து வந்த கரடியின் பேரில் அம்பு எய்தான். அப்போது கரிகாலன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, "கந்தமாறா! நீ கரடியைக் கொல்லப் பார்த்தாயா? என்னைக் கொல்ல முயன்றாயா?" என்று கேட்டான். கந்தமாறன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. பிறகு அவன் வில்லை வளைக்கவே இல்லை.

ஏறக்குறைய சூரியன் உச்சி வானத்தை அடைந்த சமயத்தில் எல்லாரும் களைத்துப் போனார்கள். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வீடு திரும்பலாமே என்ற யோசனை எல்லாருடைய மனத்திலும் தோன்றியது. ஆனால் கரிகாலனோ களைத்துப் போன குதிரையை மேலும் காட்டு வழிகளில் செலுத்திக் கொண்டு போனான்.

காலை நேரத்திலெல்லாம் கந்தமாறன் கரிகாலனையொட்டிப் போய்க்கொண்டிருந்தான். "என்னைக் கொல்லப் பார்த்தாயா?" என்று கரிகாலன் அவனைக் கேட்ட பிறகு கந்தமாறன் பின்னால் தங்கிப் பார்த்திபேந்திரனுடன் சேர்ந்து கொண்டான். அவனிடம் இளவரசரின் முரட்டுத்தனமான நடத்தையையும் பேச்சையும் பற்றிக் குறை கூறத் தொடங்கினான். பார்த்திபேந்திரன் அதற்குச் சமாதானம் கூற முயன்றான்.

இந்தச் சமயம் பார்த்து வந்தியத்தேவன் கரிகாலனை அணுகினான். பிறகு அவர்கள் இருவருமே சேர்ந்து முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். வந்தியத்தேவன் வில்லும் அம்பும் எடுத்து வரவில்லை. அவனுக்கு வில்வித்தை அவ்வளவாகப் பழக்கமும் இல்லை. கையில் வேல் மட்டும்தான் கொண்டு வந்திருந்தான். ஆகையால் கரிகாலனுடைய வேட்டையில் குறுக்கிடாமல் அவன் ஜாக்கிரதையாகச் சென்று வந்தான். ஏதாவது அபாயம் நேருவதாக இருந்தால் வேலை உபயோகிப்பதற்கு மட்டும் எச்சமயமும் ஆயத்தமாகப் போய்க் கொண்டிருந்தான். அதற்கு அவசியம் உச்சி நேரம் வரை ஏற்படவில்லை.

கந்தமாறன் பார்த்திபேந்திரனிடம், "இன்றைக்கு இவ்வளவு வேட்டை ஆடியது போதாதா? இன்று ஒரு நாளிலேயே இந்தக் காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம் கொன்று தீர்த்து விடுவார் போலிருக்கிறதே. இவருடைய வேட்டை வெறி தணிவதற்குக் கொல்லி மலைக்குத்தான் போக வேண்டும். 'இன்றைக்குப் போதும்; வீடு திரும்பலாம்' என்று சொல்லுங்கள்!" என்று கூறினான்.

அதற்குப் பார்த்திபேந்திர பல்லவன், "தம்பி! இளவரசரின் உள்ளத்தில் ஏதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துவிடுவது என்றால் இலேசான காரியமா? அந்த ஆத்திரத்தையெல்லாம் வேட்டையில் காட்டுகிறார். அது வரையில் நல்லதுதான். இல்லாவிடில் உன் மீதும் என் மீதும் காட்டுவார். அவராகச் சலிப்புற்றுப் 'போதும்' என்று சொல்லட்டும். நாம் தலையிட வேண்டாம்" என்றான்.

இந்தச் சமயத்தில் அந்த வனம் வனாந்தரமெல்லாம் நடுங்கும்படியான உறுமல் சத்தம் ஒன்று கேட்டது. கந்தமாறன் முகத்தில் பீதியின் அறிகுறி காணப்பட்டது.

"ஐயோ! காட்டுப்பன்றி! இளவரசரை நிற்கச் சொல்லுங்கள்!" என்றான்.

"காட்டுப்பன்றிக்கு என்ன அவ்வளவு பயம்? புலி, கரடியெல்லாம் இளவரசரிடம் பட்ட பாட்டில் பன்றி எந்த மூலை?" என்றான் பார்த்திபேந்திரன்.

"நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள் இந்தக் காடுகளில் உள்ள பன்றிகள் புலி கரடிகளை சின்னாபின்னமாக்கிவிடும்! யானையை முட்டிக் கீழே தள்ளிவிடும்! குதிரைகள் இலட்சியமே இல்லை, அம்பும் வேலும் காட்டுப்பன்றியின் தோலிலே பட்டுத் தெறித்து விழுமே தவிர அதன் உடலுக்குள்ளே போகாது!... ஐயா! ஐயா! நில்லுங்கள்" என்று கந்தமாறன் கூச்சலிட்டான்.

அதே சமயத்தில் காட்டுப் புதர்களிலே ஒரு சிறிய சுழற்காற்று அடிப்பது போன்ற அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. மறு நிமிடம் குட்டி யானைகளைப் போன்ற கரிய பெரிய உருவம் வாய்ந்த இரண்டு காட்டுப்பன்றிகள் வெளிப்பட்டன. அவை ஒரு கண நேரம் நின்று குதிரைகளையும் அவற்றின் மீது வந்தவர்களையும் உற்றுப் பார்த்தன.

கந்தமாறன், "ஜாக்கிரதை ஐயா! ஜாக்கிரதை"! என்று கூச்சலிட்டான்.

பின் தொடர்ந்து வந்த வேட்டைக்காரர்களில் சிலர் இதற்குள் அங்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் தாரை தப்பட்டைகளைப் பிராணன் போகிற அவசரத்துடன் முழக்கிக் கொண்டு "கா கூ" என்று கூச்சலிட்டார்கள்.

அந்தப் பன்றிகள் என்ன நினைத்துக் கொண்டனவோ என்னமோ தெரியவில்லை. ஒருவேளை அவற்றின் குட்டிகளை நினைத்துக் கொண்டிருக்கலாம். குட்டிகளுக்கு ஆபத்து வராமல் தடுக்க வேண்டுமென்ற உணர்ச்சியினால் தூண்டப்பட்டிருக்கலாம். அல்லது தாரை தப்பட்டைகளின் சப்தத்தைக் கேட்டு மிரண்டிருக்கலாம். பன்றிகள் இரண்டும் வெவ்வேறு திசையை நோக்கி பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கின.

கந்தமாறன் அதைப் பார்த்துவிட்டு, "கோமகனே! அவை போய்த் தொலையட்டும், ஐந்தாறு வேட்டை நாய்கள் இல்லாமல் ஒரு காட்டுப்பன்றியைத் துரத்திக் கொல்ல முடியாது!" என்றான்.

கரிகாலன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வில்லை வளைத்து அம்பை விட்டான். அது ஒரு பன்றியின் முதுகில் போய்த் தைத்ததைப் பார்த்து விட்டு இளவரசன், "ஆஹா!" என்று உற்சாக கோஷம் செய்தான். அடுத்த கணத்தில் அந்தப் பன்றி உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது. அம்பு தெறித்துக் கீழே விழுந்தது; பன்றி மேலே ஓடியது.

கந்தமாறன் அப்போது சிரித்த சிரிப்பில் ஏளனத்தின் தொனி தெரிந்தது. கரிகாலன் அவனைப் பார்த்து, "கந்தமாறா! எங்கே ஒரு பந்தயம்! நானும் வந்தியத்தேவனும் அந்தப் பன்றியைத் தொடர்ந்து போய் அதைக் கொன்று எடுத்துக் கொண்டு வருகிறோம். நீயும் பார்த்திபேந்திரனும் இன்னொரு பன்றியைத் துரத்திப் போய்க் கொன்று எடுத்து வாருங்கள்! இந்தப் பன்றிகள் இரண்டையும் கொல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக்கூடாது!" என்று சொல்லிக் கொண்டே குதிரையைத் தட்டி விட்டான். வந்தியத்தேவனும் அவனுடன் சென்றான்.

அவர்கள் தொடர்ந்து சென்ற காட்டுப்பன்றி எந்தத் திசையில் எந்த வழியாகப் போய்க் கொண்டிருக்கிறதென்பது கொஞ்ச நேரம் வரையில் தெரிந்து கொண்டிருந்தது. ஏனெனில் பன்றி சென்ற வழியிலிருந்த செடி கொடிகளும் புதர்களும் அந்தப் பாடுபட்டிருந்தன. பின்னர் ஒரு சிறிய கால்வாய் குறுக்கிட்டது. அது காட்டில் பெய்யும் மழைத் தண்ணீரை ஏரியில் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய். அவ்விடத்துக்கு வந்த பிறகு பன்றி எந்தப் பக்கம் போயிற்று என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கால்வாயைக் கடந்து அப்பாலுள்ள காட்டுக்குச் சென்றதா? கால்வாய் ஓரமாக இந்தப் பக்கமாகவோ, அந்தப் பக்கமாகவோ சென்றதா என்பதை அறிய முடியவில்லை.

அச்சமயம் கால்வாயின் வழியாகத் தெரிந்த ஏரியின் விசாலமான நீர்ப்பரப்பில் தெரிந்த ஒரு காட்சி அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தது. படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிலிருந்தவர்கள் பெண்மணிகள் என்றும் அறியக் கூடியதாயிருந்தது. ஆனால் அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. வந்தியத்தேவனும் கரிகாலனும் அச்சமயம் இருந்த இடத்தை நோக்கியே படகு வருவதாக முதலில் காணப்பட்டது. பிறகு திசை சற்றுத் திரும்பி, ஏரிக் கரையோரமாக இருந்த இன்னொரு தீவை நோக்கிச் சென்று படகு மறைந்து விட்டது.

"வல்லவரையா! படகில் வந்தவர்கள் யாராயிருக்கும்? பெண்மணிகள் போலத் தோன்றினார்கள் அல்லவா?" என்றான் கரிகாலன்.

"பெண்கள் போலத்தான் தோன்றியது; அதற்குமேல் எனக்கும் தெரியவில்லை" என்றான் வந்தியத்தேவன்.

"ஒருவேளை சம்புவரையர் வீட்டுப் பெண்களாயிருக்குமோ?"

"இருந்தாலும் இருக்கலாம்; ஆனால் அவர்கள் ஏன் இவ்வளவு தூரம் வரவேண்டும்?"

"ஆமாம்; அவர்களாயிருக்க முடியாதுதான்...காலையில் பழுவேட்டரையர் புறப்பட்டுப் போய்விட்டார் அல்லவா? நிச்சயந்தானே?"

"நிச்சயந்தான், ஐயா! அரண்மனை வாசல் திறப்பதையும் அவர் யானை மீது வெளியே போவதையும் நானே பார்த்தேன்."

"அவர் மட்டுந்தான் போனாரா?"

"ஆமாம்; கிழவர் மட்டுந்தான் போனார்; இளைய ராணி போகவில்லை."

"அந்தக் கிழவரைப் போன்ற வீராதி வீரனை எங்கே பார்க்கப் போகிறோம்? என் பாட்டனார் மலையமானைக் கூடப் பழுவேட்டரையருக்கு அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும்..."

"ஐயா! அந்தக் கிழவர்களைப் பற்றியெல்லாம் பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். தங்களுடைய வீரத்தைப் போர்க்களத்தில் நேரில் பார்த்திருக்கிறேன்; கடம்பூர் அரண்மனையிலும் பார்த்தேன். கிழவர்கள், குமாரர்கள் எல்லாரையும் எப்படி நடு நடுங்க அடித்துக் கொண்டிருந்தீர்கள்!" என்றான் வந்தியத்தேவன்.

"அது உண்மைதான், ஆனால் எதற்காக அவ்வளவு தடபுடல் செய்தேனோ, அந்தச் சந்தர்ப்பம் நெருங்கி வந்திருக்கும்போது எனக்கு உள்ளமும் உடலும் நடுங்குகின்றன. என்னைப் போன்ற பயங்கொள்ளிக் கோழையை இந்தச் சோழ நாட்டிலேயே காணமுடியாது..."

"இளவரசே! இன்று காட்டில் வேட்டையாடியபோது அப்படித் தாங்கள் பயந்து நடுங்கியதாகத் தெரியவில்லையே? வனவிலங்குகள், பட்சிகள், பின்னோடு வந்தவர்கள் எல்லோரையும் அல்லவா நடு நருங்கச் செய்தீர்கள்?"

"இவையெல்லாம் ஒரு தைரியத்தில் சேர்ந்ததா? கேவலம் ஒரு வேட்டை நாய் வேங்கைப் புலி மீது பாய்ந்து கொல்லுகிறது; காட்டுப்பன்றி மதயானையோடு சண்டைக்குப் போகிறது. வேட்டையாடும் தைரியம் ஒரு தைரியமா? வல்லவரையா, கேள்! நான் செய்த சூழ்ச்சி பலித்துவிட்டது. பழுவேட்டரையர் நந்தினியைத் தனியாக விட்டு விட்டுச் சென்று விட்டார். ஆயினும் அவளைத் தனிமையில் பார்த்துப் பேசுவதைப் பற்றி எண்ணினால் எனக்குப் பீதி உண்டாகிறது!" என்றான் ஆதித்த கரிகாலன்.

"ஐயா! அதற்கு காரணம் உண்டு; இத்தனை காலமும் பழுவூர் இளைய ராணியைப் பற்றி ஒருவிதமாக எண்ணி இருந்தீர்கள். இப்போது அவர் தங்கள் சகோதரி என்பதை அறிந்திருக்கிறீர்கள். அவரோ தங்கள் குலத்தையே அழித்துவிட விரும்பும் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களோடு சேர்ந்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அவரிடம் சொல்வது கஷ்டமான காரியந்தான். எனக்கு அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் என்னால் சொல்ல முடியவில்லையே?..."

"நண்பா! நீ அறிந்து வந்து கூறிய செய்தி ஒவ்வொன்றும் திடுக்கிடச் செய்வதாகவே இருக்கிறது. இன்னமும் என்னால் நமப முடியவில்லை. ஆனால் சிற்சில பழைய விஷயங்களை யோசித்துப் பார்த்தால் உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கும் அவளுக்குமிடையில் எப்பொழுதும் ஒரு மாயத்திரை இருந்து வந்தது. பழையாறை பெரிய பிராட்டியார் - செம்பியன் மாதேவியார் - நந்தினியுடன் நான் சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அந்த நாளில் வற்புறுத்திச் சொன்னார். ஆனால் உண்மை முழுவதையும் சொல்லவில்லை; சொல்லியிருந்தால் இவ்வளவெல்லாம் நேர்ந்திராது..."

"செம்பியன் மாதேவிக்கு முழு உண்மையும் தெரிந்திராமலிருக்கலாம். யாரோ அநாதை ஊமை ஸ்திரீ பெற்று போட்டுப் போன பெண் என்று மட்டும் அறிந்திருக்கலாம். சுந்தர சோழரின் மகள் பழுவூர் இளைய ராணி என்பது ஒருவேளை தெரியாமலிருக்கலாம்."







Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. கரிகாலன் கொலை வெறி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. நிலவறை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ மூன்றாம் பாகம் : கொலை வாள் ~~ 1. கோடிக்கரையில்
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. கோட்டைக்குள்ளே

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: