BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  44. காதலும் பழியும் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 44. காதலும் பழியும்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  44. காதலும் பழியும் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 44. காதலும் பழியும்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  44. காதலும் பழியும் Icon_minitimeMon May 30, 2011 3:49 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

நான்காம் பாகம் : மணிமகுடம்

44. காதலும் பழியும்



இரு நண்பர்களும் மேற்கூறியவற்றையெல்லாம் திகிலுடன் பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள். குதிரைகள் மீதிருந்து குதித்தார்கள். தண்ணீர் கரையோரம் பாய்ந்து வந்தார்கள். இதற்குள் சிறுத்தை தண்ணீரிலே சிறிது தூரம் சென்று விட்டது! அது மிதந்த விதத்தைப் பார்த்தால் அது ஒரு வழியாகப் பிராணனை விட்டுவிட்டது என்று தோன்றியது. பெண்மணிகள் இருவரும் புலியினால் எவ்வளவு காயப்படுத்தப்பட்டார்கள் என்பது ஒன்றும் தெரியவில்லை. இருவரும் தண்ணீரில் குதித்துப் பெண்மணிகளை நோக்கிச் சென்றார்கள்.

முதலில் வந்தியத்தேவன் மணிமேகலையை அணுகிச் சென்றான். ஏனெனில் நந்தினியை நெருங்குவதற்கு அவனுக்கு அச்சமாக இருந்தது. மணிமேகலைக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. புலி விழுந்த வேகத்தில் அவளும் தண்ணீரில் விழுந்து முழுகியதில் சிறிது மூச்சுத் திணறியதைத் தவிர வேறொன்றும் அவளுக்கு நேரவில்லை! வந்தியத்தேவன் தன் அருகில் வருவதைப் பார்த்ததும் அவள் எல்லையில்லாத உள்ளக் கிளர்ச்சி அடைந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

கரிகாலர் வந்தியத்தேவனுடைய கையைப் பிடித்து நிறுத்தி நந்தினியின் பக்கம் அனுப்பிவிட்டுத் தன்னை நோக்கி வருவதை அவள் அறியவில்லை. இரண்டு கைகளினாலும் கரிகாலர் அவளைத் தூக்கி அணைத்துக் கொண்டு படித்துறைப் படிகளில் ஏறி மேலே போய்ச் சேர்ந்து தரையில் மெதுவாக அவளை வைக்கும் வரையில் கண்ணை விழித்துப் பார்க்கவில்லை. மூக்கில் சுவாசம் வருகிறதா என்று கரிகாலர் விரலை வைத்துப் பார்த்தபோதுதான் கண்களை மெல்ல மெல்லத் திறந்தாள். திறக்கும்போதே வந்தியத்தேவனிடம் தன் கரை காணாக் காதலைத் தெரிவிக்கும் பொருட்டு அன்பும் ஆர்வமும் ததும்பிய நோக்குடன் பார்த்தாள். அவளுடைய கண்ணின் முன் தெரிந்தவர் இளவரசர் கரிகாலர் என்று தெரிந்ததும் துள்ளி எழுந்து நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

அவளுடைய முகத்தில் அச்சமயம் தோன்றிய ஏமாற்றத்தைக் கவனித்த கரிகாலர் கலீர் என்று சிரித்தார்.

"மணிமேகலை! இது என்ன துள்ளல்? என்னைக் கண்டு இவ்வளவு அருவருப்பு ஏன்?" என்றார்.

"ஐயா! வேற்று மனிதர் கை பட்டால் பெண்களுக்குக் கூச்சமாயிராதா?" என்றாள் மணிமேகலை.

"பெண்ணே! என்னை வேற்று மனிதனாக்கி விட்டாயா? எனக்கும் உனக்கும் கலியாணம் செய்து வைக்க ஏகப் பிரயத்தனம் நடக்கிறதே?" என்றார் கரிகாலர்.

"சுவாமி! அந்தப் பிரயத்தனம் பலித்த பிறகுதானே சொந்தமாக முடியும்? அதுவரையில் தாங்கள் வேற்று மனிதர்தானே?" என்றாள் மணிமேகலை.

"ஆனால் அது உனக்கு இஷ்டமா என்பதை நீ சொல்லலாம் அல்லவா?"

கடம்பூர் இளவரசி சற்று யோசித்துவிட்டு, "ஐயா! தாங்கள் சோழ குலத்தோன்றல்; எல்லாம் அறிந்த புத்திமான். சிறு பெண்ணாகிய என்னிடம் இவ்விதம் பேசலாமா? என் தந்தையிடமல்லவா கேட்க வேண்டும்?" என்றாள்.

"பெண்ணே! உன் தந்தை சம்மதித்தால் நீ சம்மதிப்பாயா?"

"என் தந்தை சம்மதித்த பிறகு அவர் கேட்டால் சொல்லுவேன். தங்களிடம் இதைப் பற்றிப் பேசவே எனக்குக் கூச்சமாயிருக்கிறது. புலி என்னைக் கொல்லாமலும், நான் தண்ணீரில் முழுகிப் போகாமலும் என்னைக் காப்பாற்றினீர்கள். அதனால் தங்களிடம் ஏற்பட்டுள்ள நன்றி காரணமாக இத்தனை நேரமும் பொறுமையாக இருக்கிறேன்..."

கரிகாலன் சிரித்துவிட்டு, "மணிமேகலை! நீ வெகு கெட்டிக்காரி. மிக அழுத்தமானவள். ஆனாலும் ஏமாந்து போனாய். அதற்காக என்னை ஏமாற்றப் பார்க்க வேண்டாம்!" என்றார்.

"ஐயா! இது என்ன வார்த்தை! தங்களை இந்த அறியாப் பெண் ஏமாற்றுவதா? எதற்காக? எந்த முறையில்?"

"வீணாக ஏன் சுற்றி வளைத்துப் பேசுகிறாய்? எனக்குப் பதிலாக வந்தியத்தேவன் உன்னைத் தூக்கிக் கொண்டு வந்து கரை சேர்ந்திருந்தால் இவ்வளவு கடூரமாகப் பேசுவாயா? வந்தியத்தேவன் என்று நினைத்துத்தானே நீ கண்ணை மூடிக் கொண்டாய்? அதே எண்ணத்துடன்தானே கண்ணைத் திறந்தும் பார்த்தாய்! பாவம்! ஏமாந்து போனாய்!" என்றான் கரிகாலன்.

மணிமேகலை வெட்கத்துடனே சிறிது பீதியும் அடைந்தாள். பின்னர் தைரியப்படுத்திக் கொண்டு, "அரசே, தங்களுக்குத் தான் என் மனது தெரிந்திருக்கிறதே! அப்படியிருக்கும்போது, இந்தப் பேதைப் பெண்ணை எதற்காகச் சோதிக்கிறீர்கள்?" என்றாள்.

"மணிமேகலை! உன் மனது எனக்குத் தெரிந்திருக்கிறது. அது போலவே வல்லவரையனுடைய மனமும் எனக்குத் தெரிந்திருக்கிறது. உன்னுடைய பரிசுத்தமான அன்புக்கு அவன் பாத்திரன் அல்லவே என்றுதான் யோசிக்கிறேன். அதோ பார், இளைய ராணி நந்தினியும் வந்தியத்தேவனும் சல்லாபம் செய்வதை! நந்தினியின் முகத்தில் குடிகொண்டிருக்கும் குதூகலத்தைப் பார்!" என்றார்.

மணிமேகலை அவர் காட்டிய திசையைப் பார்த்தாள். அந்தக் கணத்தில் அசூயை என்னும் விஷம் அவளுடைய பால் போன்ற நெஞ்சில் ஏறிவிட்டது.

அதே சமயத்தில் வந்தியத்தேவனும் நந்தினியும் பேசிக் கொண்டிருந்தார்கள். நந்தினியின் தோள் ஒன்றில் புலி நகம் பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மணிமேகலையைப் போல் நந்தினி கண்ணை மூடிக்கொள்ளவும் இல்லை. வந்தியத்தேவன் கைகளிலிருந்து விடுவித்துக் கொள்ள அவசரப்படவும் இல்லை. வந்தியத்தேவனோ, தன் கையைச் சுட்டுக் கொண்டிருந்த நெருப்புத் தணலைக் கீழே போடுவதுபோல் அவசரமாக இளைய ராணியைக் கரையில் இறக்கிவிட்டான். தண்ணீரில் முழுகி இருந்த போதிலும் நந்தினியின் உடம்பு உண்மையிலேயே சுட்டுக் கொண்டிருந்தது.

வந்தியத்தேவன் உள்ளத்தில் இனந்தெரியாத பீதி குடிகொண்டது. அவன் உடம்பு பதறியது. நந்தினி புன்னகையுடன் "ஐயா! ஏன் இவ்வளவு பதட்டம்? என்னைப் புலி என்று நினைத்துக் கொண்டீரா? அல்லது புலியைக் காக்க நினைத்துத் தவறாக என்னைக் கரை சேர்த்து விட்டதற்காக வருத்தப்படுகிறீரா?" என்றாள்.

"அம்மணி! இவ்வளவு கொடூரமான வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம். தங்களைத் தொட்டு எடுத்து வரும்படி நேர்ந்து விட்டதை நினைத்து நெஞ்சு சிறிது கலக்கம் அடைந்தது..."

"குற்றம் உள்ள நெஞ்சு அல்லவா? அதனால் கலங்குகிறது!"

"தேவி! நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே!"

"குற்றம் செய்யவில்லை? தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசிப்பதற்கு என் உதவியை நாடினீர். முத்திரை மோதிரத்தைக் கொடுத்து உதவினேன். பிறகு என் அந்தப்புரத்தில் திருட்டுத்தனமாகப் பிரவேசித்தீர். அப்போதும் உமக்குத் தீங்கு நேராமல் காப்பாற்றினேன். அதற்குக் கைம்மாறு என்ன செய்தீர்? எனக்குத் தெரியாமல், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் திருடனைப் போல தப்பி ஓடிப்போனீர். பழையாறை இளைய பிராட்டியைச் சந்தித்த பிறகு என்னிடம் திரும்பி வருவதாகச் சொன்னீர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இவையெல்லாம் குற்றமல்லவா?"

"அந்தக் குற்றங்களை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் காரணம் இருக்கிறது. நான் பிறரிடம் சேவகம் செய்பவன். ஆதித்த கரிகாலருடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டவன். இதைத் தாங்கள் எண்ணிப்பார்த்தால் என் பேரில் குற்றம் சாட்டமாட்டீர்கள்..."

"ஆமாம்; புலியின் வாயிலிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்ற வேண்டுமென்றால் கூடக் கரிகாலன் கட்டளை உமக்கு வேண்டும். தண்ணீரில் மூழ்கும் பெண்ணைக் கரை சேர்ப்பதற்கும் அவருடைய அனுமதி வேண்டும். நான் கவனித்துக் கொண்டுதானிருந்தேன். அடடா! மணிமேகலையைக் காப்பாற்றுவதில் இளவரசர் எத்தனை பரபரப்புக் காட்டினார்? நான் நீரில் மூழ்கி செத்துப் போயிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். அவருடைய மனதை அறியாமல் நீர் என்னைக் கரை சேர்த்து விட்டீர்..."

"அம்மணி! அவ்வாறு சொல்ல வேண்டாம்! தாங்கள் ஓலை அனுப்பியபடியால்தான் கரிகாலர் காஞ்சியிலிருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்..."

"ஆனால் அவர் இங்கு வராமல் தடை செய்வதற்காக நீர் அவசர அவசரமாக ஓடி வந்தீர். இளைய பிராட்டியின் செய்தியுடன் வந்தீர். ஆனால் உம்முடைய முயற்சி பலிக்கவில்லை. என்னுடைய காரியத்தில் நீர் தலையிடுவதற்குச் செய்யும் முயற்சியெல்லாம் இவ்வாறுதான் தோற்றுப் போகும்!"

நந்தினியின் இந்த வார்த்தைகள் வந்தியத்தேவனின் மனக் குழப்பத்தை அதிகமாக்கின. அந்த வார்த்தைகளின் உட்கருத்தை நந்தினியின் முகபாவத்திலிருந்து தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவளை உற்றுப் பார்த்தான். ஆனால் நந்தினியின் முகம் எவ்வித மாறுதலும் இன்றி வழக்கம் போலப் புன்னகை பூத்து விளங்கியது.

நந்தினி தொடர்ந்து, "உம்முடைய குற்றத்தை உம்முடைய முகத்தோற்றமே ஒப்புக் கொள்கிறது. அமாவாசை இராத்திரி, பள்ளிப்படைக்கு அருகில் நீர் என் வசம் அகப்பட்டீர். என் ஆட்களிடம் ஒரு சமிக்ஞை செய்திருந்தால் போதும்; உம்மைக் கொன்றிருப்பார்கள். அப்போதும் உம் உயிரைக் காப்பாற்றி அனுப்பினேன். அதற்குக்கூட உமக்கு நன்றி இல்லை. உம்மைப் போல் நன்றி கெட்ட மனிதரை இந்த உலகத்தில் நான் பார்த்ததே இல்லை...."

"தேவி! என் மனத்தில் தங்களிடம் பரிபூரண நன்றி குடிகொண்டிருக்கிறது. சத்தியமாகச் சொல்கிறேன்."

"ஆனால் இந்த ஊருக்கு நாம் வந்து இத்தனை நாளாகியும் உமது நன்றியைத் தெரிவிப்பதற்கு நீர் ஒரு முயற்சியும் செய்யவில்லையே? உமது வார்த்தையை நான் எப்படி நம்புவது?"

"தங்களைத் தனியாகச் சந்திக்கும்போது தெரிவித்துக் கொள்ளலாம் என்றிருந்தேன் அதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..."

"சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொள்ள நீர் ஒருவித முயற்சியும் செய்யவில்லை. முகத் தோற்றத்தினால், கண் பார்வையினால் ஒரு குறிப்பு வெளியிடக் கூடவில்லை. ஏன்? இத்தனை நாளாக என் பக்கம் நீர் ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கக் கூடவில்லை.."

"தேவி! தாங்கள் சோழ நாட்டுத் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையாரின் தர்மபத்தினி..."

"அதாவது கிழவனைக் கலியாணம் செய்து கொண்டவள் என்று என்னைப் பரிகசிக்கிறீர்; இல்லையா?"

"ஐயோ! தங்களை நான் பரிகசித்தால் கொடிய நகரத்துக்குப் போவேன்..."

"வேண்டாம், வேண்டாம்! எது எப்படியிருந்தாலும் சரி; பழுவேட்டரையரின் 'தர்ம பத்தினி' என்று என்னைக் குறிப்பிட வேண்டாம், நான் அவருடைய மனைவியே அல்ல..."

"ஐயோ! இது என்ன சொல்கிறீர்கள்?"

"உண்மையைத்தான் சொல்கிறேன். பலவந்தமாக ஒரு பெண்ணைப் பிடித்துக் கொண்டு வந்து வைத்திருந்தால், அவள் மனைவி ஆகிவிடுவாளா?"

"தேவி! தாங்கள் தமிழ் நாட்டுப் பெண் குலத்தில் வந்தவர். பெண் குலத்தின் தர்மத்துக்கு மாறாகத் தாங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள்!"

"பெண் குலத்தில் தர்மத்தை நான் அறிந்துதானிருக்கிறேன். பழந்தமிழ் நாட்டுப் பெண்கள் மனத்தினால் யாரைக் காதலித்தார்களோ, அவரையே கணவனாகக் கொண்டார்கள். பலவந்த மணத்துக்கு அவர்கள் உடன்படுவதில்லை!"

"ஆனால் தாங்கள்..."

"நீர் சொல்லப் போவது எனக்குத் தெரியும். பழுவேட்டரையருடைய பலவந்த மணத்துக்கு நான் எப்படி உடன் பட்டேன் என்று கேட்கிறீர். ஒரு முக்கிய நோக்கத்துக்காகவே உடன்பட்டேன். பழந்தமிழ் நாட்டுப் பெண்களுக்கு மற்றொரு சிறப்பியல்பும் உண்டு. அவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழி வாங்கியே தீருவார்கள். ஐயா! நீர் எனது காதல் நிறைவேறுவதற்குத்தான் உதவி செய்யவில்லை. என் விரோதிகள் மீது பழி வாங்குவதற்காவது உதவி செய்வீரா?"

கடைசியாக நந்தினி கூறிய மொழிகள் ஏககாலத்தில் வந்தியத்தேவனுடைய நெஞ்சை வஜ்ராயுதத்தினால் பிளப்பது போலவும், அவன் தலையில் திடீரென்று பேரிடி விழுவது போலவும் அவனைத் திணறித் திண்டாடச் செய்தன.

"தேவி! தேவி! இது என்ன?... காதலாவது? பழியாவது? எனக்கும் தங்கள் காதலுக்கும் என்ன சம்பந்தம்? காதலுக்கும் பழி வாங்குவதற்கும் என்ன சம்பந்தம்?..."

"சம்பந்தம் உண்டு; ஆனால் அதைப் பற்றி சொல்வதற்கு இப்போது நேரம் இல்லை. அதோ, இளவரசரும் மணிமேகலையும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். நாளை நள்ளிரவு நேரத்தில் நான் இருக்கும் அறைக்குத் தனியாக வந்தால் சொல்லுகிறேன்..."

"அது எப்படிச் சாத்தியம், தேவி! தாங்கள் அந்தப்புரத்தில் இருக்கிறீர்கள். நான் எப்படி அங்கே நள்ளிரவில் தனியாக வர முடியும்?"

"அதே அந்தப்புர அறையிலிருந்தும் ஒரு நாள் நீர் யாரும் அறியாமல் தப்பித்துக் கொண்டு செல்லவில்லையா? போன வழியாகவே அங்கே திரும்பி வரலாம் அல்லவா? உமக்கு மனம் மட்டும் இருந்தால்..."

வந்தியத்தேவனுடைய திகைப்பு இப்போது பரிபூரணமாகிவிட்டது. ஆனால் நந்தினியின் முகத்தில் எவ்வித மாறுதலும் இல்லை. எப்போதும் போலப் புன்னகை தவழ்ந்தது.






Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 44. காதலும் பழியும்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. நந்தினி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. இரு சிறைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: