BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  2. வந்தான் முருகய்யன்! Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. வந்தான் முருகய்யன்!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  2. வந்தான் முருகய்யன்! Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. வந்தான் முருகய்யன்!   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  2. வந்தான் முருகய்யன்! Icon_minitimeTue May 31, 2011 3:31 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்

2. வந்தான் முருகய்யன்!



சூடாமணி விஹாரத்துக்கு வெளியே கடல் பொங்கும் போது எழும் ஓசையைப் போல் மக்களின் இரைச்சல் ஒலி பெருகிக் கொண்டிருந்ததைச் சிறிது நேரம் ஆசாரிய பிக்ஷுவும், அருள்மொழிவர்மரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் புத்த விஹாரமும், அதில் உள்ள பிக்ஷுகளும் தம்மால் இந்தப் பெரும் சங்கடத்துக்கு உள்ளாகியிருப்பதை எண்ணி இளவரசர் மிகவும் மனக்கலக்கம் அடைந்தார்.

"சுவாமி என்னால் உங்களுக்கு இந்தத் தொல்லை உண்டானதைப் பற்றி வருத்தப்படுகிறேன்" என்றார்.

"இளவரசே! தங்கள் காரணமாக இதுபோல் நூறு மடங்கு தொல்லை நேர்ந்தாலும், நாங்கள் பொருட்படுத்த மாட்டோ ம். தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் எங்களுக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கு இது ஒரு கைம்மாறாகுமா?" என்றார் பிக்ஷு.

"அதுமட்டும் அல்ல, இம்மாதிரி ஒளிவு மறைவாகக் காரியம் செய்வது எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. நான் இங்கு இருந்து கொண்டே எதற்காக 'இல்லை' என்று சொல்ல வேண்டும்? சத்தியத்துக்கு விரோதமான இந்தக் காரியத்தில் தங்களையும் எதற்காக நான் உட்படுத்த வேண்டும்? தங்களுடைய பரிவான சிகிச்சையினால் எனக்கு உடம்பும், நன்றாகக் குணமாகிவிட்டது. இப்போதே வெளியேறிச் சென்று ஜனங்களிடம் நான் இன்னான் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். தாங்கள் எனக்கு அடைக்கலம் அளித்துச் சிகிச்சை செய்து என் உயிரையும் காப்பாற்றினீர்கள் என்பதை மக்களிடம் அறிவிக்கிறேன். இந்தச் சூடாமணி விஹாரத்துக்கு என் காரணமாக எந்த வித அபகீர்த்தியும் ஏற்படக் கூடாது" என்றார் இளவரசர்.

"ஐயா! இதில் சத்தியத்துக்கு விரோதமான காரியம் எதுவும் இல்லை. தங்களுடைய எதிரிகள் தாங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இந்த நாகைப்பட்டினத்தில் அவர்கள் சென்ற இரண்டு நாளாகப் பரப்பி உள்ள வதந்தியிலிருந்தே அது நிச்சயமாகிறது. அப்படியிருக்க தாங்கள் இங்கே இருப்பதைத் தெரிவியாமல் வைத்திருப்பதில் தவறு என்ன? அரச குலத்தினர் இம்மாதிரி சில சமயம் மறைந்திருக்க வேண்டியது இராஜரீக தர்மத்துக்கு உகந்தது. பஞ்ச பாண்டவர்கள் ஒரு வருஷம் அஞ்ஞாத வாசம் செய்யவில்லையா? அப்போது தர்மபுத்திரர் சத்தியத்துக்கு மாறாக நடந்தார் என்று சொல்ல முடியுமா?" என்று பிக்ஷு கேட்டார்.

"குருதேவரே! தங்கள் அறிவுத்திறனும், விவாதத்திறனும் அபாரமானவை யென்பதை அறிவேன். தங்களுடன் தர்க்கம் செய்து என்னால் வெல்ல முடியாது. ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன்; பஞ்சபாண்டவர்கள் மறைந்திருக்க வேண்டியது, அவர்கள் ஏற்றுக்கொண்ட 'சூள்' காரணமாக அவசியமாயிருந்தது. எனக்கு அப்படி அவசியம் ஒன்றும் இல்லை. என் விரோதிகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். எனக்கு அப்படிப்பட்ட விரோதிகள் யார்? எதற்காக என்னை அவர்கள் விரோதிக்க வேண்டும்? எனக்கோ இராஜ்யம் ஆளுவதில் சிறிதும் ஆசை இல்லை. இதையெல்லாம் நான் வெளியிட்டுச் சொல்லி, அப்படி யாராவது எனக்கு எதிரிகள் இருந்தாலும், அவர்களையும் சிநேகிதர்கள் ஆக்கிக் கொள்வேன். என்னால் உங்களுக்குத் தொந்தரவும் இல்லாமற் போகும். மக்களும் நான் உயிரோடிருப்பது அறிந்து ஏதேனும் திருப்தி அடைவதாயிருந்தால் அடையட்டுமே? அதில் யாருக்கு என்ன நஷ்டம்?"

"இளவரசே! தாங்கள் சொல்லுவதெல்லாம் உண்மையே. தங்களுடைய நிலைமையில் நானும் அவ்விதமே எண்ணி நடந்து கொள்வேன். ஆனால் அதற்குத் தடையாக நிற்பது, தங்கள் திருச்சகோதரி குந்தவைப் பிராட்டிக்கு நாங்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதிதான். பழையாறை இளைய பிராட்டியைப் போன்ற அறிவிற் சிறந்த மாதரசி சோழ குலத்தில் தோன்றியதில்லையென்று தாங்களே பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். வேறு எந்த இராஜ குலத்திலும் தோன்றியதில்லை என்பது என் கருத்து. அவர் தாம் செய்தி அனுப்பும் வரையில் தங்களை இங்கே வைத்துப் பாதுகாக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார். முக்கியமான காரணம் இன்றி அவர் அவ்விதம் சொல்லியிருக்கமாட்டார். சுந்தர சோழ சக்கரவர்த்தியின் குடும்பத்துக்கு விரோதமாகச் சோழ நாட்டுச் சிற்றரசர்கள் பலர் சதி செய்வதாக நாடெல்லாம் பேச்சாக இருந்து வருகிறது. மற்றொரு பக்கத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த சிலர் இரகசியச் சதி வேலை செய்து வருவதாகவும் பேசிக் கொள்கிறார்கள். அந்தக் கூட்டதாருக்கு இந்தப் புத்த விஹாரத்திலுள்ள நாங்கள் உதவி செய்கிறோமோ என்று எண்ணித்தான் ஜனங்கள் ஆத்திரம் அடைந்து வாசலில் வந்து கூடியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் தாங்கள் வெளியேறி, மக்களின் முன்னிலையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது உசிதமான காரியமா? யோசியுங்கள்! அதைக் காட்டிலும் தங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் எங்களுக்கெல்லாம் ஏதேனும் சங்கடம் நேர்ந்தால் நேரட்டுமே?... அதற்கு நாங்கள் ஒரு நாளும் பின்வாங்கப் போவதில்லை!..."

இவ்வாறு தலைமைப் பிக்ஷு சொல்லிக் கொண்டிருந்த போது இன்னொரு இளம் சந்நியாசி அங்கே பரபரப்புடன் வந்தார்.

"சுவாமி! நிலைமை மிஞ்சிப் போய் விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து நின்று 'இளவரசரைப் பார்க்க வேண்டும்' என்று கூச்சலிடுகிறார்கள். 'இளவரசர் இங்கே இல்லை' என்று நாங்கள் எவ்வளவு சொல்லியும் பயனில்லை. 'நாங்களே விஹாரத்துக்குள் வந்து சோதித்துப் பார்க்க வேண்டும்' என்று கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது ஒரு வழி சொல்லா விட்டால், பலாத்காரமாக உள்ளே புகுந்து விடுவார்கள் போலிருக்கிறது!" என்றார்.

"அவர்களுக்கு நாம் என்ன வழி சொல்ல முடியும்? புத்த பகவான் அவர்களுடைய மனத்தை மாற்ற ஏதேனும் வழி கூறினால் தான் உண்டு!" என்றார் தலைமைப் பிக்ஷு.

இளவரசர் அப்போது "குருதேவரே! எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. கருணை கூர்ந்து கேட்க வேண்டும். தங்கள் சீடர்கள் நான் இங்கே இல்லை என்று ஜனங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இனி நான் ஜனங்களின் முன்னிலையில் போய் நின்றால், தங்கள் சீடர்களின் வாக்கைப் பொய்யாக்கியதாகும். அதனால் ஒரு வேளை ஜனங்களின் மூர்க்காவேசம் அதிகமானாலும் ஆகலாம்" என்றார்.

"நிச்சயமாய் ஆகியே தீரும். அதன் பலனை நாங்கள் அனுபவிக்க வேண்டியதுதான்" என்றார் பிக்ஷு.

"அதைக் காட்டிலும் தங்கள் சீடர்களுடைய வாக்கை நான் மெய்யாக்கி விடுகிறேன்..."

"இளவரசே! தங்களால்கூட அது முடியாத காரியம் என்று நினைக்கிறேன். இவர்கள் சொன்னது சொன்னதுதானே? அதை எப்படி இனி மெய்யாக்க முடியும்?"

"அதற்கு வழியிருக்கிறது ஜனங்கள் இந்த விஹாரத்துக்குள் புகுவதற்குள்ளே நான் இங்கிருந்து போய் விடலாம் அல்லவா?"

"ஆகா! எங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அத்தகைய பாவச் செயலை நாங்கள் செய்ய வேண்டுமா? தங்களை வெளியேற்ற வேண்டுமா?"

"குருதேவரே! இதில் பாவமும் இல்லை. பழியும் இல்லை. இங்கிருந்து அரைக்காத தூரத்தில் ஆனை மங்கலத்தில் சோழ மாளிகை இருக்கிறது. அன்றைக்கு என் சகோதரியைப் பார்க்கச் சென்றபடி, இப்போதும் உடனே கால்வாய் வழியே அங்கே போய் விடுகிறேன். பிறகு சௌகரியமான போது திரும்பி வந்து விட்டால் போகிறது!" என்று சொன்னார் இளவரசர்.

ஆச்சாரிய பிக்ஷுவுக்கு இளவரசர் கூறிய அந்த யோசனை பிடித்திருந்ததாகத் தோன்றியது. "ஆம், ஆம்! அப்படிச் செய்தால் தங்களை உடனே வெளிப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமில்லாமற்போகும். தங்கள் தமக்கையின் கருத்தையும் நிறைவேற்றியதாகும். ஆனால் கால்வாய், விஹாரத்திலிருந்து வெளியேறும் இடத்திலும், ஜனங்கள் நிற்கலாம் அல்லவா? அவர்கள் படகில் தாங்கள் போவதைப் பார்க்கக் கூடுமே?" என்றார்.

"குருதேவரே! அதற்கு ஓர் உபாயம் செய்ய முடியும். கூட்டத்தில் உள்ளவர்களில் யாரேனும் ஒருவன் விஹாரத்திற்குள் வந்து தேடிப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுவோம்" என்றார் இளம் பிக்ஷு.

"ஒருவன் வந்து பார்த்தால் போதாதா? அவன் வெளியிலே சென்று மற்றவர்களிடமும் சொல்லமாட்டானா?" என்றார் குரு.

"அவனை இங்கே கொஞ்சம் தாமதப்படுத்தி வைத்திருந்தால், அதற்குள் இருட்டிவிடும். இளவரசர் வெளியேறச் சௌகரியமாகயிருக்கும். அது மட்டுமல்ல, சீக்கிரத்தில் ஒரு பெரும் புயல் அடிக்கலாம் என்பதற்கு அறிகுறிகள் தென்படுகின்றன. இங்கிருந்து பார்க்கும்போதே கடல் அலைகள் மலைபோல் எழுகின்றன. கடலின் ஆரவாரமும் அதிகமாகி வருகிறது. புத்த பகவானுடைய கருணை அப்படி இருக்கிறதோ, என்னமோ? பெரும் புயல் அடித்து நம்முடைய இந்தச் சங்கடம் தீர வேண்டும் என்பது பகவானுடைய சித்தமோ, என்னமோ!" என்று கூறினார் இளம் பிக்ஷு.

"அப்படியெல்லாம் சொல்லவேண்டாம், நம்முடைய சங்கடம் தீருவதற்காகக் கடல் கொந்தளித்துப் பெரும் புயல் வர வேண்டுமா?" என்றார் குரு.

"சுவாமி! தங்கள் சீடர் சொல்லும் வழியை பரீட்சித்துப் பார்க்கலாம் என்று எனக்கும் தோன்றுகிறது. உள்ளே ஒரு தனி மனிதன் மட்டும் வந்தால், ஒருவேளை அவனிடம் நான் பேசி அவன் மனத்தை மாற்றுவது சாத்தியமாகலாம்" என்றார் இளவரசர்.

"அந்த யோசனையும் என் மனத்தில் இருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு கோடிக்கரையிலிருந்து ஒரு படகோட்டியும், அவன் மனையாளும் விஹாரத்தின் வாசலில் வந்து இளவரசரைப் பற்றி விசாரித்தார்கள். இளவரசர் இங்கேதான் இருக்கவேண்டும் என்று சொன்னார்கள். படகோட்டியின் மனையாள் பெருங்கூச்சல் போட்டாள்...!"

"ஆகா! அப்படிப்பட்ட படகோட்டி யார்? அவன் பெயர் என்னவென்று தெரியுமா?" என்றார் இளவரசர்.

"ஆம்; தன் பெயர் முருகய்யன் என்று சொன்னான். கோடிக்கரைத் தியாக விடங்கர் மகன் என்று கூறினான்..."

"அவன் எனக்கு நன்கு தெரிந்தவன். என் விருப்பத்துக்கு விரோதமாக எதுவும் செய்யமாட்டான். அவனை ஏன் என்னிடம் அழைத்து வரவில்லை...?"

"அவன் பெண்டாட்டியினால் நமது இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்று எண்ணினோம். இப்போது அவனும் அவன் மனையாளும் மக்கள் கூட்டத்தில் இருக்கிறார்கள்..."

"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. படகோட்டி முருகய்யனை மெதுவாக இங்கே அழைத்து வந்து விடுங்கள். நான் இட்ட கோட்டை அவன் தாண்டவே மாட்டான். இருட்டிய பிறகு திரும்பி வந்து, அவனே என்னைப் படகில் ஏற்றி, ஆனைமங்கலத்துச் சோழ மாளிகைக்கு அழைத்துப் போய்விடுவான்!" என்றார் இளவரசர்.

ஆச்சாரிய பிக்ஷு, "இளவரசரே! இந்தக் காலத்தில் யாரையும் பூரணமாக நம்பி விடுவதற்கில்லை. இந்தப் படகோட்டியும், அவனது மனையாளுந்தான் இரண்டு நாளாக இந்தப் பட்டினத்தில் தங்களைப் பற்றிய வதந்தியைப் பரப்பியிருக்கவேண்டும் என்று கருதுகிறேன்."

"அப்படியேயிருந்தாலும் அதனால் பாதகமில்லை. எப்படியும் யாரேனும் ஒருவனை விகாரத்துக்குள் அழைத்து வரவேண்டும் அல்லவா? அவன் கொஞ்சம் பெண்டாட்டி சொல்லுகிறபடி ஆடுகின்றவன் தான். ஆனாலும் என் விருப்பத்துக்கு மாறாக, மனையாள் சொல்வதைக் கூடக் கேட்க மாட்டான். முடியுமானால் அவனையே அழைத்துக் கொண்டு வாருங்கள்!" என்றார் இளவரசர்.

ஆச்சாரிய பிக்ஷுவின் சம்மதத்துடன், இளைய பிக்ஷு வெளியேறினார். அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் பெரிய பிக்ஷு இளவரசே! என் மனம் ஏனோ நிம்மதியாகவே இல்லை. நானும் வெளியிலே சென்று பார்த்து வருகிறேன். ஜனங்களுடைய மனோ நிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் அறிந்து வருகிறேன். என்னுடைய பிசகினால் இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்துக்கும் கேடு வரக் கூடாது; தங்களுக்கும் தீங்கு எதுவும் நேரக்கூடாது!" என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்







Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. வந்தான் முருகய்யன்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 6. முருகய்யன் அழுதான்!
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. பிரம்மாவின் தலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 5. நடுக்கடலில்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: