BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  6. முருகய்யன் அழுதான்! Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 6. முருகய்யன் அழுதான்!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  6. முருகய்யன் அழுதான்! Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 6. முருகய்யன் அழுதான்!   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  6. முருகய்யன் அழுதான்! Icon_minitimeWed Jun 01, 2011 3:40 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம் : தியாக சிகரம்

6. முருகய்யன் அழுதான்!




தஞ்சை நகருக்கு அருகில், மந்தாகினி ஏறியிருந்த பல்லக்கின் பின்னால் மரம் முறிந்து விழுந்த அதே தினத்தில், வீர நாராயண ஏரியில் காற்று அடித்துக் கரையோரமிருந்த படகு நகர்ந்துபோன அதே நேரத்தில், நாகைப்பட்டினத்தில் நிகழ்ந்த சம்பவங்களையே சென்ற அத்தியாயங்களில் கூறினோம் என்பதை நேயர்கள் அறிந்திருப்பார்கள்.

அன்றிரவு முழுவதும் நாகைப்பட்டினமும், அதன் சுற்றுப்புறங்களும் ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தன. அவரவர்களும் உயிர் பிழைத்திருந்தால் போதும் என்ற நிலைமையில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும் இயலாத காரியமாயிருந்தது. ஆயினும் புத்த பிக்ஷுக்கள் நாகைப்பட்டினத்தின் வீதிகளில் அலைந்து ஜனங்களுக்கு இயன்றவரை உதவி புரிந்து வந்தார்கள்.

அதே இரவில் ஆச்சாரிய பிக்ஷுவும் பொன்னியின் செல்வரும் ஆனைமங்கலம் சோழ மாளிகைக்குள் வெகுநேரம் கண் விழித்திருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கடும் புயலினால் கடல் பொங்கியதால் கடற்கரையோரத்து மக்கள் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாவார்கள் என்பதைப் பற்றிப் பேசிப் பேசிக் கவலைப்பட்டார்கள்.

அரண்மனை மணியக்காரனை இளவரசர் அழைத்து அரண்மனைக் களஞ்சியங்களில் தானியம் எவ்வளவு இருக்கிறது என்றும், பொக்கிஷத்தில் பணம் எவ்வளவு இருக்கிறது என்றும் விசாரித்தார். களஞ்சியங்கள் நிறையத் தானியம் இருந்ததென்று தெரிந்தது. திருநாகைக் காரோணத்தில், நீலாயதாட்சி அம்மனின் ஆலயத்தைப் புதுப்பித்துக் கருங்கல் திருப்பணி செய்வதற்காகச் செம்பியன் மாதேவி அனுப்பி வைத்த பொற்காசுகள் பன்னிரெண்டு செப்புக் குடங்கள் நிறைய இருப்பதாகவும் தெரிந்தது.

"குருதேவரே! புத்த பகவானுடைய சித்தத்துக்கு உகந்த கைங்கரியத்தைத் தாங்கள் செய்வதற்கு வேண்டிய வசதிகள் இருக்கின்றன. அரண்மனைக் களஞ்சியங்களில் உள்ள தானியம் முழுவதையும் ஏழைகளுக்கு, உணவளிப்பதில் செலவிடுங்கள். செப்புக்குடங்களிலுள்ள பொற்காசுகள் அவ்வளவையும் வீடு இழந்தவர்களுக்கு விநியோகம் செய்யுங்கள்!" என்றார் இளவரசர் பொன்னியின் செல்வர்.

"அது எப்படி நியாயமாகும்? தானியத்தையாவது உபயோகிக்கலாம். தங்கள் பெரிய பாட்டியார், செம்பியன் மாதேவியார், ஆலயத் திருப்பணிக்காக அனுப்பியுள்ள பணத்தை வேறு காரியத்துக்காக செலவு செய்யலாமா? அந்த மூதாட்டி வருத்தப்பட மாட்டாரா?" என்றார் ஆச்சாரிய பிக்ஷு.

"ஆச்சாரியரே! என் பெரிய பாட்டியாருக்கு நான் சமாதானம் சொல்லிக்கொள்வேன். இப்பொழுது இந்தப் பணத்தை ஏழை எளியவர்களின் துயரத்தைத் துடைப்பதற்காகச் செலவு செய்வேன். வருங்காலத்தில் என் பாட்டியாரின் உள்ளம் மகிழ்ந்து பூரிக்கும்படி இந்தச் சோழ நாடெங்கும் நூறு நூறு சிவாலயங்களை எழுப்பிக் கொடுப்பேன். பெரிய பெரிய கோபுரங்களை அமைப்பேன். இந்த மாதிரி கடல் பொங்கி வந்தாலும் முழுக அடிக்கமுடியாத உயரமுள்ள ஸ்தூபிகளை எழுப்புவேன். தஞ்சை மாநகரில் தக்ஷிண மேரு என்று சொல்லும்படி விண்ணையளாவும் உயரம் பொருந்திய கோபுரத்துடன் பெரியதொரு கோயிலைக் கட்டுவேன்! ஐயா! இன்று முழுகிப்போன சூடாமணி விஹாரம் மண்ணோடு மண்ணாய்ப் போனாலும் கவலைப்பட வேண்டாம். அதற்கு அருகாமையில் கல்லினால் திருப்பணி செய்து பிரளயம் வந்தாலும் அசைக்க முடியாத பெரிய சூடாமணி விஹாரத்தை எழுப்பிக் கொடுப்பேன்!" என்று இளவரசர் ஆவேசம் ததும்பக் கூறினார்.

"பொன்னியின் செல்வா! வருங்காலத்தைப் பற்றித் தாங்கள் இத்தனை உற்சாகத்துடன் பேசுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது!" என்றார் பிக்ஷு.

"ஆம், ஆம், இந்த உலகில் நான் ஜீவித்திருந்து ஏதோ பெரிய காரியங்கள் செய்ய வேண்டுமென்பது இறைவனுடைய சித்தம். ஆகையினாலேயே என் உயிருக்கு நேர்ந்த எத்தனையோ அபாயங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறார். இன்றைக்குப் கூடப் பாருங்கள். இந்த முருகய்யன் எப்படியோ நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தான். இல்லாவிடில் தாங்களும், நானும் சூடாமணி விஹாரத்துக்குள்ளேயே இருந்திருப்போம். கடல் பொங்கி வந்து இவ்வளவு சீக்கிரத்தில் விஹாரத்தை முழுக அடித்துவிடும் என்று எண்ணியிருக்க மாட்டோம்."

"அது உண்மைதான், ஐந்நூறு ஆண்டுகளாக நடவாத சம்பவம் இன்று பிற்பகலில் ஒரே முகூர்த்த நேரத்தில் நடந்துவிடும் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? கருணைக் கடலாகிய புத்த பகவான் பொங்கி வந்த கடலின் கோபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றினார். தங்கள் மூலம் என் அற்பமான உயிரையும் காத்தருளினார். தாங்கள் செய்ய உத்தேசிக்கும் காரியத்தை நான் பூரணமாக ஒத்துக் கொள்கிறேன். அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து எடுத்துச் செலவு செய்தால் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர் கோபங்கொள்வார். ஆலயத் திருப்பணிக்காக விநியோகிப்பதைக் குறித்து தங்கள் திருப்பாட்டியார் கோபித்துக்கொள்ள மாட்டார். அவ்விதம் தாங்கள் செய்வது உசிதமானது. ஆனால், இந்த மகத்தான புண்ணிய காரியத்தைத் தாங்களே முன்னின்று நடத்துவது அல்லவோ பொருத்தமாயிருக்கும்? இந்த ஏழைச் சந்நியாசி அவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க முடியாது!..."

"குருதேவரே! நான் முன்னின்று நடத்தினால் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படும். பாண்டவர்களின் அக்ஞாத வாசத்தைப் பற்றித் தாங்கள் கூறியது என் நெஞ்சில் பதிந்திருக்கிறது. நமது செந்தமிழ் நாட்டுப் பொய்யாமொழிப் புலவரின் வாக்கும் நினைவுக்கு வந்தது.

'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதென்றும்
தீமை இலாத சொல்லல்'

என்றும்

'பொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்'

என்றும் தமிழ் மறை கூறுகிறதல்லவா? என்னை நான் இச்சமயம் ஜனங்களுக்கு வெளிப்படுத்திக் கொள்வதால் நாட்டில் குழப்பமும் கலகமும் விளையலாம் என்று அறிவிற் சிறந்த என் தமக்கையார் கருதுகிறார். நான் மறைந்திருப்பதனால் யாருக்கும் எத்தகைய தீமையும் இல்லை. ஆகையால் புயலின் கொடுமையினால் கஷ்டப்பட்டுத் தவிக்கும் மக்களுக்குத் தாங்கள்தான் அரண்மனையில் உள்ள பொருளைக் கொண்டு உதவி புரிய வேண்டும்" என்றார் இளவரசர்.

"பொன்னியின் செல்வ! என் மனம் எதனாலோ மாறிவிட்டது. தங்களை வெளியிட்டுக் கொண்டு மக்களுக்கு உதவி செய்ய இதுவே சரியான தருணம் என்று என் மனத்தில் உதித்திருக்கிறது. அதுவே புத்த பகவானுடைய சித்தம் என்று கருதுகிறேன்" என்றார் பிக்ஷு.

இச்சமயம் யாரோ விம்மும் குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். முருகய்யன் ஒரு மூலையில் உட்கார்ந்து முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தான்.

இளவரசர் அவனிடம் சென்று கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்தார்.

"முருகய்யா! இது என்ன? ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார்.

"என் மனையாள்... என் மனையாள்..." என்று தடுமாற்றத்துடன் கூறி முருகய்யன் மேலும் விம்மினான்.

"ஆமாம், ஆமாம்! உன் மனைவியை நாங்கள் அடியோடு மறந்து விட்டோ ம். அவள் இன்றிரவு புயலிலும் மழையிலும் என்ன ஆனாளோ என்று உனக்குக் கவலை இருப்பது இயல்புதான். ஆயினும் இந்த நள்ளிரவு நேரத்தில் செய்யக் கூடியதும் ஒன்றுமில்லை. பொழுது விடிந்ததும் உன் மனையாளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்" என்றார் இளவரசர்.

"ஐயா அதற்காக நான் வருந்தவில்லை. அவளுக்கு ஆபத்து ஒன்றும் நேர்ந்திராது. இதைப்போல் எத்தனையோ பயங்கரமான புயலையும், வெள்ளத்தையும் அவள் சமாளித்திருக்கிறாள்!" என்றான் முருகய்யன்.

"பின் எதற்காக அழுகிறாய்?" என்று இளவரசர் கேட்டார்.

படகோட்டி தட்டுத் தடுமாறிப் பின்வரும் விவரங்களைக் கூறினான்:- "அவளைப் பற்றி நான் என்னென்னமோ சந்தேகப்பட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன். அவள்தான் என்னை வற்புறுத்திக் கோடிக்கரையிலிருந்து இங்கே அழைத்துக் கொண்டு வந்தாள். தாங்கள் சூடாமணி விஹாரத்தில் இருக்கக்கூடும் என்று அவள் தான் சொன்னாள். அவளுடைய கட்டாயத்துக்காகவே நான் வந்தேன். தங்களுக்கு ஏதோ தீங்கு செய்ய நினைக்கிறாளோ என்று கூடப் பயந்தேன். அது எவ்வளவு பிசகு என்று இப்போது தெரிந்தது. சற்று முன்னால் தாங்கள் இந்த படகோட்டி ஏழையைக் குறித்துப் பாராட்டிப் பேசினீர்கள். கடவுள் என் மூலம் தங்கள் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறினீர்கள். ஆனால் என்னை இந்தக் காரியத்துக்கு தூண்டியவள் என் மனையாள். அவளைப் பற்றிச் சந்தேகித்தோமே என்று நினைத்தபோது என்னை மீறி அழுகை வந்து விட்டது!"

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இளவரசர் பொன்னியின் செல்வரின் உள்ளத்தில் வேறொரு ஐயம் இப்போது உதித்தது. "அப்பனே! உன் மனையாள் மிக்க உத்தமி. அவளைப் பற்றி நீ சந்தேகித்தது தவறுதான். ஆனால் அவளுக்கு நான் இங்கே இருப்பது எப்படித் தெரிந்தது?" என்று கேட்டார்.

"என் அத்தையும், என் தங்கை பூங்குழலியும் நாகைப்பட்டினத்துக்குப் படகில் புறப்பட்டார்கள். அதிலிருந்து என் மனையாள் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டாள்."

"எந்த அத்தை?" இளவரசர் பரபரப்புடன் கேட்டார்.

"ஐயா, ஈழத்தீவில் தங்களைப் பலமுறை அபாயங்களிலிருந்து காப்பாற்றிய ஊமை அத்தைதான்."

"ஆகா! அவர்கள் இப்போது எங்கே? உன் அத்தையும் பூங்குழலியும் என்ன ஆனார்கள்? இங்கே புறப்பட்டு வந்தார்கள் என்று கூறினாயே?"

"ஆம்; புறப்பட்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் பிரயாணம் தடைப்பட்டு விட்டது!" என்று சொல்லிவிட்டு மேலும் முருகய்யன் விம்மி விம்மி அழத் தொடங்கினான்.

பொன்னியின் செல்வர் மிக்க கவலை அடைந்து அவனைச் சமாதானப்படுத்தி விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஈழத்து அரசியை யாரோ மூர்க்கர்கள் பலவந்தமாகப் பிடித்துக்கொண்டு போனதை அறிந்ததும் இளவரசருக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. அவர்களை ராக்கம்மாள் தடுக்கப் பார்த்தாள் என்றும், அதற்காக அவளை அடித்து மரத்தில் சேர்த்து வைத்துக் கட்டி விட்டுப் போனார்கள் என்றும் அறிந்தபோது ராக்கம்மாளின் பேரில் ஏற்பட்டிருந்த ஐயம் நீங்கி விட்டது. இளவரசருக்கு அவள் பேரில் இப்போது மதிப்பும் அபிமானமும் வளர்ந்தன.

"குருதேவரே! கேட்டீர்களா! இந்த உலகத்தில் நான் போற்றும் தெய்வம் ஒன்று உண்டு என்றால், ஈழத்தரசியாகிய மந்தாகினி தேவிதான். அந்த ஊமை மாதரசிக்கு எந்தவிதமான தீங்கும் செய்தவர்களை நான் மன்னிக்க முடியாது. பழுவேட்டரையர்கள் என்னைச் சிறைப்படுத்தக் கட்டளை பிறப்பித்தது குறித்து நான் சிறிதும் கோபம் கொள்ளவில்லை. ஆனால் ஊமை ராணிக்கு ஏதேனும் அவர்கள் தீங்கு செய்திருந்தால், ஒருநாளும் என்னால் பொறுக்க முடியாது. பழுவேட்டரையர் குலத்தை அடியோடு அழித்து விட்டு மறு காரியம் பார்ப்பேன். என்னைப் பெற்ற அன்னையும், என் சொந்தத் தந்தையும் ஈழத்து அரசிக்குத் தீங்கு செய்திருந்தாலும், அவர்களை என்னால் மன்னிக்க முடியாது. குருதேவரே! நாளைக்கே நான் தஞ்சாவூருக்குப் பிரயாணப்படப் போகிறேன். வியாபாரியைப் போல் வேடம் பூண்டு இந்த படகோட்டி முருகய்யனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு கிளம்பப் போகிறேன். ஈழத்தரசியைப் பற்றி அறிந்து கொண்டாலன்றி என் மனம் இனி நிம்மதி அடையாது! ஆச்சாரியரே! புயலினால் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் கைங்கரியத்தைத் தாங்கள்தான் நடத்த வேண்டும். தங்கள் பெயரால் நடத்தப் பிரியப்படாவிட்டால் 'ஈழத்து நாச்சியார் அறச்சாலை' என்று வைத்து நடத்துங்கள். ஈழத்தரசி புத்த மதத்தில் பற்றுக் கொண்டவர் என்பது தங்களுக்குத் தெரியுமோ? என்னமோ? 'பூதத்தீவு' என்று மக்கள் அழைக்கும் போதத் தீவில் உள்ள புத்த பிக்ஷுக்களின் மடத்திலேதான் அவர் சாதாரணமாக வசிப்பது வழக்கம்!" என்றார் இளவரசர். புத்த பிக்ஷுவும் இதற்கு மாறு சொல்லாமல் ஒப்புக் கொண்டார்.

மறுநாள் புயலின் உக்கிரம் தணிந்தது. பொங்கி வந்த கடலும் பின்வாங்கிச் சென்றது. ஆனால் அவற்றினால் ஏற்பட்ட நாசவேலைகள் வர்ணனைக்கு அப்பாற்பட்டிருந்தன. நாகைப்பட்டினம் நகரில் பாதி வீடுகளுக்கு மேல் கூரைகளை இழந்து குட்டிச்சுவர்களாக நின்றன. அந்த வீதிகளில் ஒன்றில் இளவரசர் அருள்மொழிவர்மர் வியாபாரியின் வேடத்தில் தோளில் ஒரு மூட்டையைச் சுமந்து நடந்துகொண்டிருந்தார். அவர் பின்னால் முருகய்யன் இன்னும் ஒரு பெரிய மூட்டையைச் சுமந்து நடந்துகொண்டிருந்தான். புயலினாலும் வெள்ளத்தினாலும் நேர்ந்திருந்த அல்லோலகல்லோலங்களைப் பார்த்துக்கொண்டு அவர்கள் போனார்கள்.

இடிந்த வீடு ஒன்றின் சுவரின் மறைவிலிருந்து ஒரு பெண் அவர்கள் வருவதைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். அவள் வேறு யாரும் இல்லை. முருகய்யனின் மனையாள் ராக்கம்மாள் தான். இளவரசரும், முருகய்யனும் அவள் நின்ற இடத்துக்கு அருகில் வரும் வரையில் அவள் பொறுமையோடு காத்திருந்தாள். திடீரென்று வெளிப்புறப்பட்டு ஓடி வந்து இளவரசரின் முன்னால் வந்து காலில் விழுந்தாள். முருகய்யன் அவளுடைய கவனத்தைக் கவர முயன்றாள். உதட்டில் விரலை வைத்துச் சமிக்ஞை செய்தான். 'உஷ், உஷ்' என்று எச்சரித்தான். ஒன்றும் பயன்படவில்லை.

"சக்கரவர்த்தித் திருமகனே! வீராதி வீரனே! பொன்னியின் செல்வா! சோழ நாட்டின் தவப் புதல்வா! சூடாமணி விஹாரத்தில் முழுகிப் போய்விடாமல் தாங்கள் பிழைத்து வந்தீர்களா? என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன!" என்று கூச்சலிட்டாள்.

வீதியில் அச்சமயம் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேருடைய கவனமும் இப்பொழுது இளவரசரின்பால் திரும்பின.







Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 6. முருகய்யன் அழுதான்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. வந்தான் முருகய்யன்!
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. பரிசோதனை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 35. சக்கரவர்த்தியின் கோபம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: