BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  16. பூங்குழலி பாய்ந்தாள்! Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. பூங்குழலி பாய்ந்தாள்!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  16. பூங்குழலி பாய்ந்தாள்! Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. பூங்குழலி பாய்ந்தாள்!   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  16. பூங்குழலி பாய்ந்தாள்! Icon_minitimeFri Jun 03, 2011 3:24 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

16. பூங்குழலி பாய்ந்தாள்!



சோழ நாட்டில் பிரயாணம் செய்துள்ளவர்கள் அந்நாட்டின் இயற்கை அமைப்பில் ஒரு விசித்திரத்தைக் கவனித்திருப்பார்கள். சோழ நாட்டைச் சோறுடை வளநாடாகச் செய்யும் நதிகளில் வெள்ளம் வரும்போது, வெள்ளத்தின் மேல் மட்டம் நதிக்கு இருபுறங்களிலுமுள்ள பூமி மட்டத்துக்கு மிக்க உயரமாயிருக்கும். இவ்விதம் இருப்பதினாலேதான் நதிகளில் வரும் வெள்ளம் வாய்க்கால்களின் வழியாக வயல்களுக்குப் பாய்வது சாத்தியமாகின்றது.

இந்த நிலையில் வெள்ளத்தை நதிப் படுகையோடு போகச் செய்வதென்பது மிகவும் சிரமமான காரியம் அல்லவா? நதிகளுக்கு இருபக்கங்களிலும் உயரமான கரைகள் உறுதியாக அமைந்திருக்க வேண்டும். இல்லாவிடில், வெள்ளம் நதியோடு போவதற்குப் பதிலாக, மழை நீர் நாலாபுறமும் பாய்ந்து ஓடுவதுபோல் ஓடிச் சோழ நாட்டைத் தண்ணீர் தேங்கிய சதுப்பு நிலமாக்கி ஒன்றுக்கும் பயனற்றதாகச் செய்துவிடும்.

இதை முன்னிட்டு ஆதிகாலத்திலிருந்து சோழமன்னர்கள் காவேரிக்கும், காவேரியின் கிளை நதிகளுக்கும் கரைகள் அமைப்பதில் மிக்க கவனம் செலுத்தினார்கள். கரிகால் வளவன் ஈழ நாட்டிலிருந்து யுத்தத்தில் தோற்றவர்களைச் சிறைப்படுத்தி வந்து, காவேரிக்குக் கரையெடுக்கும் வேலையில் அவர்களை ஈடுபடுத்தினான் என்னும் வரலாற்றை நேயர்கள் அறிந்திருப்பார்கள்.

காவேரியின் கிளை நதிகளில் தண்ணீர் நல்ல மேல் மட்டத்தில் வருவதற்கு உதவியாகவே ஸ்ரீரங்கத்துக்கு ஒரு காத தூரம் கிழக்கே சோழ மன்னர்கள் கல்லணை கட்டினார்கள். அந்த அணையின் மூலம் தண்ணீர் மட்டம் மேலும் உயர்ந்து கிளை நதிகளில் நிறையத் தண்ணீர் பாய்வது சாத்தியமாயிற்று.

இவ்விதம் இயற்கை அமைப்போடு இடைவிடாத செயற்கை முயற்சிகளும் சேர்ந்தே சோழ நாட்டைப் பண்டை நாளிலேயே நீர் வளத்தில் இணையில்லாத நாடாகச் செய்திருந்தன.

சோழ வள நாட்டுக்கு இவ்விதம் இயற்கை, விசேஷ உதவிகள் செய்தது போலவே, சில சமயம் விபரீதமான அபாயங்களையும் உண்டாக்கி வந்தது.

சோழ மண்டலத்துக் கடற்கரைக்குக் கிழக்கே கடலில் அடிக்கடி சுழிக் காற்றுகளும், புயற்காற்றுகளும் தோன்றுவது உண்டு. இக்காற்றுகள் சில சமயம் கடற்கரையோரமாக வடக்கு நோக்கிச் சென்று கிருஷ்ணை - கோதாவரி முகத்துவாரங்களிலோ அல்லது கலிங்க நாட்டிலோ, உள்ளே பிரவேசித்துப் பெருமழை கொட்டச் செய்து கடுமையான சேதங்களை விளைவிக்கும். வேறு சில சமயங்களில் சோழ நாட்டுக்குள்ளேயே நேரடியாகப் பிரவேசித்து மேற்கு நோக்கி விரைந்து செல்லும். கோடிக்கரைக்கும், கொள்ளிடக் கரையின் முகத்துவாரத்துக்கும் மத்தியில் இவ்விதம் சுழிக்காற்று உள்நாட்டில் பிரவேசிப்பது சரித்திரத்தில் பலமுறை நடந்திருக்கும் சம்பவம். சில சமயம் அச்சுழிக் காற்றுகள் கோரபயங்கர ரூபங்கொண்டு கடலையே பொங்கி எழச் செய்து கடற்கரையோரமுள்ள ஊர்களையே அழித்துவிடும்!

பூம்புகார் என்று வழங்கிய காவேரிப்பட்டினத்தைக் கடல் கொண்டது வெறுங்கதையன்று; சரித்திர ஆதாரங்களினால் நிரூபிக்கக் கூடிய உண்மை நிகழ்ச்சியேயாகும்.

நதிகளில் வெள்ளம் அதிகமாக வரும்போது சில சமயம் கரைகள் உடைந்து விடுவதும் உண்டு. நதிகளின் நீர்மட்டத்தைக் காட்டிலும் பூமி மட்டம் தாழ்வாயிருக்கும் காரணத்தினால் உடைப்பு எடுத்தாலும் சுற்றுப்புறமெல்லாம் ஒரே தண்ணீர் மயமாகிவிடும். நதிகளுக்கு அருகிலுள்ள ஊர்கள் முழுகிப் போய்விடும். அப்போதெல்லாம் ஜனங்கள் உயிர் தப்புவதற்கு அக்கம்பக்கத்திலுள்ள கோயில்கள் உதவியாயிருக்கும்.

விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் காவேரி உற்பத்தியாகும் ஸஹஸ்ய மலையிலிருந்து அந்த மாநதி கடலில் சங்கமமாகும் இடம் வரையில் நூற்றெட்டு ஆலயங்களை எடுப்பித்தான் என்று சரித்திரம் கூறுகிறது. சாதாரண காலங்களில் கோயில்கள் கடவுளை ஆராதிப்பதற்குப் பயன்படுவது போலவே, பெருவெள்ளம் வந்து உடைப்பெடுக்கும் காலத்தில் மக்கள் கோயில் மண்டபங்களின் மீது ஏறி உயிர் தப்புவதற்கும் உபயோகமாயிருக்கட்டும் என்பது ஆதித்த சோழனின் நோக்கமாக இருக்கலாம் அல்லவா?

நதிக்கரைகளில் உடைப்பு உண்டாவதன் காரணமாகச் சில சமயம் நதிகளின் போக்கே மாறிவிடுவது உண்டு. அரிசிலாறும், குடமுருட்டி முதலிய நதிகள் இப்படி பலமுறை இடம்மாறி, திசை மாறியிருக்கின்றன என்பதைப் பழைய வரலாறுகளிலிருந்து அறியலாம்.

இனி நம்முடைய வரலாறு நடந்த காலத்துக்கு வருவோம். இலங்கைத் தீவிலிருந்து சோழ நாட்டுக்குப் பார்த்திபேந்திரனுடைய கப்பல் வந்து கொண்டிருந்தபோது உண்டான சுழிக்காற்று, வந்தியத்தேவனை முன்னிட்டு இளவரசர் அருள்மொழிவர்மரைக் கடலில் குதிக்கச் செய்தபிறகு, கடலோரமாகவே சென்று கலிங்க நாட்டை அடைந்து மறைந்தது.

ஆனால் அருள்மொழிவர்மர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் தங்கியிருந்தபோது உண்டான சுழிக்காற்று, சோழ நாட்டுக்குள்ளேயே புகுந்து பற்பல அட்டகாசங்களைச் செய்து கொண்டு மேற்கு நோக்கிச் சென்றது. ஒரே இரவில் அது காவேரியின் இருபுறங்களிலும் தன் லீலைகளை நடத்திக் கொண்டு போய் மறுநாள் கொங்குநாட்டை அடைந்து தேய்ந்து மறைந்தது. அது பிரயாணம் செய்த இடங்களிலெல்லாம் பற்பல சேதங்களை விளைவித்தது மட்டுமன்று; அதைத் தொடர்ந்து பெருமழை கொட்டும்படியாகவும் செய்து கொண்டு போயிற்று. மேற்கே போகப்போக மழை அதிகமாகப் பெய்தது. ஆகவே காவேரியிலும் கொள்ளிடத்திலும் அவற்றிலிருந்து பிரிந்த கிளை நதிகளிலும் மறுநாள் முதல் வெள்ளம் அபரிமிதமாக வந்தது. பல நதிகள் கரைகளை உடைத்துக் கொண்டன. மழையினாலும், நதிகளின் உடைப்பினாலும் சோழ நாடெங்கும் வெள்ளக் காடாகிவிட்டது.

ஆனால் இவ்வளவு இயற்கை விபரீதங்களும் சோழநாட்டு மக்களைப் பீதிகொண்டு செயலிழந்து செய்துவிடவில்லை. இவை அடிக்கடி நடைபெறும் நிகழ்ச்சிகளாதலால், அம்மாதிரி நிலைமைகளில் என்ன செய்யவேண்டும் என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள். அப்போதைக்குக் கோயில் மண்டபங்களிலோ வேறு உயரமான இடங்களிலோ ஏறிக்கொண்டு உயிர் தப்புவார்கள். வெள்ளம் எவ்வளவு அவசரமாக வந்ததோ, அவ்வளவு துரிதமாக வடிந்து போய்விடும். வீடுகளை இழந்தவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியைக் கொண்டு உடனே வீடு கட்டிக்கொள்வார்கள். "ஐயோ! போய் விட்டதே! என்று தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடமாட்டார்கள்.

சோர்வு சோம்பல் என்பதையே அறியாத தன்னம்பிக்கை கொண்ட மக்கள் அக்காலத்தில் சோழ நாட்டில் வாழ்ந்திருந்தார்கள். இல்லாவிடில் இன்றைக்கும் உலகம் கண்டு வியக்கும்படியான அற்புதங்களை அவர்கள் சாதித்திருக்க முடியாது அல்லவா?

வானதி கோயில் மண்டபத்தின் மீது ஏறாமல் தவறித் தண்ணீரில் விழுந்ததும் முதலில் மண்டபத்தின் மேல் ஏறியிருந்தவர்கள் கவலை அடைந்தார்கள். ஆனால் உடனடியாக அந்தக் கவலை மாறியது. வானதி, ஜோதிடர் வீட்டுக் கூரைமீது தொத்திக் கொண்டதைப் பார்த்து அவர்களுக்குத் தைரியம் உண்டாயிற்று. இளையபிராட்டி ஓரளவு குதூகலமே அடைந்தாள். வானதியை அபாயகரமான நிலைமைகளில் சிக்க வைப்பதிலும், அவள் எப்படிச் சமாளிக்கிறாள் என்று பார்ப்பதிலும் குந்தவை தேவிக்கு எப்போதும் உற்சாகம் இருந்தது. வீராதி வீரனான தம்பியை மணந்து கொள்ளப் போகிறவள் நெஞ்சுத் துணிவுள்ள தீர மங்கையாக வேண்டுமென்பதில் இளைய பிராட்டிக்குச் சிரத்தை இருந்தது. அத்தகைய தீரத்தை வானதியின் உள்ளத்தில் வளர்க்கும் பொருட்டுத் குந்தவை பல உபாயங்களையும் தந்திரங்களையும் கையாண்டு வந்தாள். அந்த உபாயங்கள் நல்ல பலன் அளித்திருக்கின்றன என்ற நம்பிக்கையும் அவளுக்கு ஏற்பட்டிருந்தது.

சில காலமாக வானதி மூர்ச்சையடைந்து விழும் வழக்கத்தை விட்டுவிட்டிருந்தாள் அல்லவா? இப்போது குந்தவையின் தந்திரம் ஒன்றுமின்றித் தெய்வாதீனமாகவே வானதியின் தீரத்தைச் சோதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருக்க, ஓர் ஓட்டுக் கூரையின் மேல் வானதி தொத்திக் கொண்டிருந்தாள். அவள் பயப்படாதிருப்பாளா? ஜோதிடரின் சீடன் படகு கொண்டு வந்து அவளைத் தப்புவிக்கும் வரையில் தைரியத்தைக் கைவிடாது இருப்பாளா? ஆம்; இருப்பாள்! சந்தேகமில்லை! இத்தனை காலமும் அளித்து வந்த பயிற்சி இச்சமயம் பயன்படாமலா போய்விடும்?

இவ்விதம் குந்தவை எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது, ஆழ்வார்க்கடியான், "தாயே! இது என்ன? கூரை நகர்வதாகத் தோன்றுகிறதே?" என்றான்.

"உன் கண்ணிலே ஏதோ கோளாறு! வெள்ளம் நகர்ந்து செல்கிறது; கூரை நகர்வதாகத் தோன்றுகிறது!" என்றாள் குந்தவை.

இப்படிச் சொல்லும்போதே அவளுடைய உள்ளத்திலும் சந்தேகம் உதித்து விட்டது. அதன் அறிகுறி முகத்திலும் காணப்பட்டது.

"அம்மா! நன்றாகப் பாருங்கள்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"ஐயோ! இது என்ன விபரீதம்?" என்றாள் இளைய பிராட்டி.

"ஜோதிடரே! உம்முடைய சீடன் சீக்கிரம் படகுடன் வருவானா?" என்றான் ஆழ்வார்க்கடியான்.

"போதும்! போதும்! ஜோதிடரையும் அவருடைய சீடனையும் நம்பியது போதும்! திருமலை! உன்னால் வானதியைக் காப்பாற்ற முடியுமா என்று பார்; இல்லாவிட்டால், நானே வெள்ளத்தில் குதிக்க வேண்டியதுதான்! வானதிக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், அப்புறம் நான் ஒரு கணமும் உயிர் வைத்திருக்கமாட்டேன்!" என்றாள்.

"தாயே! அபாயம் நேரும் காலத்திலேதான் நிதானத்தை இழக்கக்கூடாது. இது தங்களுக்கு தெரியாதது அல்ல. கொடும்பாளூர் இளவரசிக்கு உதவி செய்வதற்காக என் உயிரைக் கொடுக்கவும் சித்தமாயிருக்கிறேன்; அதனால் பயன் ஏற்பட வேண்டுமே? படகு இல்லாமல் நான் மட்டும் நீந்திச் சென்றாள் அந்தக் கூரையில் போய் நானும் தொத்தி ஏறிக் கொள்ளலாம். கொடும்பாளூர் இளவரசியைத் தாங்கும் கூரை என்னையும் சேர்த்துத் தாங்குமா? அல்லது இரண்டு பேரையும் வெள்ளத்தில் அமுக்கிவிட்டுக் கூரையும் கீழே போய்விடுமா? இதைப்பற்றி சிறிது யோசிக்க வேண்டும்..."

பூங்குழலியின் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு அவளை இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். "இந்த வீர வைஷ்ணவர் யோசித்து முடிப்பதற்குள் கொடும்பாளூர் இளவரசியின் வாழ்க்கை முடிந்துவிடும்!" என்றாள் பூங்குழலி.

"அப்படி நேர்ந்தால் இந்த ஓடக்காரப் பெண் சந்தோஷப்படுவாள்!" என்று ஆழ்வார்க்கடியான் கூறியதும் பூங்குழலியின் முகத்தில் ஆத்திரம் கொதித்தது.

திருமலை மேலும் தொடர்ந்து கூறினான்: "ஆனால், தேவி! அவ்விதம் ஒன்றும் நேரப் போவதில்லை! ஆலிலை மேல் பள்ளி கொண்டு அகிலமெல்லாம் காப்பாற்றும் திருமால், வானதியையும் காப்பாற்றுவார். மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள் எடுத்து இந்தப் பூவுலகைக் காப்பாற்றிய ஸ்ரீமந்நாராயணன் கொடும்பாளூர் இளவரசியையும் காப்பாற்றுவார்!... அதோ பாருங்கள்! ஜோதிடர் சீடன் படகுடன் வருகிறான்!"

ஆழ்வார்க்கடியான் சுட்டிக்காட்டிய திசையில் உண்மையாக படகு வந்து கொண்டிருந்தது. அப்படகு வெள்ளத்தின் வேகத்தை எதிர்த்து இவர்கள் இருந்த கோயில் மண்டபத்தை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது. வானதி ஏறியிருந்த கூரையோ வெள்ளத்தோடு போய்க் கொண்டிருந்தது. படகு இங்கே வந்து இவர்களை ஏற்றிக் கொண்டு போவதற்கு வெகு நேரம் ஆகிவிடும். அதற்குள் வானதி அதிக தூரம் போய் விடுவாள். கண்ணுக்கு மறைந்தாலும் மறைந்து விடுவாள்.

இதையெல்லாம் எண்ணி மண்டபத்தில் மேல் நின்றவர்கள் படகில் வந்த ஜோதிடர் சீடனைப் பார்த்து உரக்கக் கத்தினார்கள்; சமிக்ஞைகளும் செய்து பார்த்தார்கள். தன்னைச் சீக்கிரம் வரச் சொல்லுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டு அவன் படகை விரைவாகச் செலுத்தி வர முயன்றான்.

பூங்குழலி அப்போது குந்தவையைப் பார்த்து, "தேவி! எனக்கு அனுமதி கொடுங்கள்! நான் நீந்திப்போய் படகை வழிமறிந்து அழைத்துச் சென்று கொடும்பாளூர் இளவரசியை ஏற்றி வருகிறேன்!" என்றாள். குந்தவை சிறிது தயங்கினாள். பூங்குழலி கையைக் கொடுக்கப் போய்த்தான் வானதி வெள்ளத்தில் விழுந்தாள் என்பது அவளுக்கு நினைவு இருந்தது.

"தேவி என்னை நம்புங்கள், என்னுடைய அஜாக்கிரதையினால் தான் இளவரசி வெள்ளத்தில் விழுந்தாள். ஆகையால் அவரை மீட்பது என்னுடைய கடமை!" என்று பூங்குழலி கூறினாள்.

"பெண்ணே! உன்னை நான் நம்புகிறேன். ஆனால் வானதியைத் தான் நம்பவில்லை!" என்றாள் குந்தவை.

"ஆகா! நான் இருக்கும் படகில் ஒருவேளை ஏற மறுத்து விடுவார் என்கிறீர்களா? அப்படியானால் அவரை ஏற்றிவிட்டு நான் இறங்கிக் கொள்வேன்!" என்று சொல்லிக் கொண்டே பூங்குழலி வெள்ளத்தில் பாய்ந்தாள். படகை நோக்கி விரைந்து சென்றாள்.

குந்தவை ஜோதிடரைப் பார்த்து, "ஐயா! ஜோதிடரே! உம்முடைய சாஸ்திரத்தில் ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தேன்; இன்றைக்கு அந்த நம்பிக்கையை இழந்து விட்டேன்!" என்றாள்.

"ஆனால் எனக்கு இன்றைக்குத்தான் பூரண நம்பிக்கை ஏற்பட்டது. தேவி! கொடும்பாளூர் இளவரசியின் ஜாதகப் பிரகாரம் அவருக்கு இன்று பெரிய கண்டம் வரவேண்டும். பழுவேட்டரையர் மூலம் அது வருமோ என்று நினைத்தேன். அப்படி வராமற் போகவே ஆச்சரியமடைந்தேன். வேறு விதமாகக் கண்டம் வந்தது. இளவரசி இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைப்பார்! ஆகா! அவருடைய அபூர்வமான கை ரேகைகள்! அவர் விஷயமாக நான் சொல்லியிருப்பதெல்லாம் நிறைவேறும், அதைப் பற்றி சந்தேகமில்லை!" என்றார்.

"அழகாய்த்தானிருக்கிறது, அது எப்படி நிறைவேறும்? வானதி இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைத்தாலும் உம் ஜோசியம் நிறைவேறப் போவதில்லை. சற்றுமுன் உம்முடைய வீட்டில் அந்தப் பெண் செய்த சபதத்தை நீர் கேட்கவில்லையா?" என்றாள் குந்தவை.

"யார் என்ன சபதம் செய்தாலும், என் ஜோசியம் நிறைவேறியே தீரும். அப்படி நிறைவேறாவிட்டால், என்னிடமுள்ள ஜோதிட ஏடுகளையெல்லாம் காவேரி நதியில் எறிந்து விடுகிறேன்! இது என் சபதம்!" என்றார் ஜோதிடர்.

அப்போது ஆழ்வார்க்கடியான், "ஜோதிடரே! உமது ஏடுகளை நீரே எறியும் வரையில் காவேரி மாதா காத்திருக்கவில்லை. அவளே கொண்டுபோய் விட்டாள்!" என்றான்.

ஜோதிடர் அவன் கூறியதன் உண்மையை உணர்ந்து திகைத்து நின்றார். "ஆயினும், என் ஜோதிடம் பலிக்காமற் போகாது!" என்று தம் வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.







Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. பூங்குழலி பாய்ந்தாள்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ இரண்டாம் பாகம் : சுழற்காற்று~~ 1. பூங்குழலி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 8. "ஐயோ! பிசாசு!"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 22. வேளக்காரப் படை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: