BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  21. உயிர் ஊசலாடியது! Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 21. உயிர் ஊசலாடியது!

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  21. உயிர் ஊசலாடியது! Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 21. உயிர் ஊசலாடியது!   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  21. உயிர் ஊசலாடியது! Icon_minitimeSat Jun 04, 2011 3:31 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

21. உயிர் ஊசலாடியது!


ஒரு கண நேரம் ஒரு யுகமாகத் தோன்றக்கூடிய சந்தர்ப்பங்கள் சில உண்டு. அவற்றில் ஒன்றும், இப்போது வானதிக்கு நேர்ந்தது. அவள் கண்ணை மூடிக்கொண்டு, துர்க்கா பரமேசுவரியைப் பிரார்த்தனை செய்துகொண்டு, ஓட்டுக்கூரை ஓடத்தில் சுழன்று சென்ற நேரம் சில வினாடிகள்தான் இருக்கும். ஆயினும் அவை சில யுகங்களாகவே அவளுக்குத் தோன்றின. பின்னர் ஏற்பட்ட ஒரு பெரிய அதிர்ச்சி அவளுடைய தேகத்தையெல்லாம் குலுக்கிப் போட்டபோது அவளுடைய கண்களும் திறந்து கொண்டன. கூரை ஓடம் ஆற்றங்கரை மரத்தின் வேரில் மோதியதனால் அந்த அதிர்ச்சி உண்டாயிற்று என்பதை அவள் அறிந்தாள். அதனால் அந்தக் கூரை சுக்கல் சுக்கலான போது அதிர்ஷ்டவசமாக வானதியின் பாதி உடம்பு, வளைந்திருந்த மரக் கிளைகளில் சிக்கிக் கொண்டிருந்தது. அதனால் அவள் மரத்தின் வேர்களில் மோதப்படாமல் தப்பினாள். தனது நிலையை ஒருவாறு உணர்ந்து மரக்கிளைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். வெள்ளத்தின் சுழல் அவளுடைய கால்களைப் பிடித்து அதிவேகமாக இழுத்துக் கொண்டிருந்தது. அந்த வேகத்தினால் கால்கள் பிய்த்துக்கொண்டு போய் விடும் போலிருந்தது. அவள் உடுத்தியிருந்த சேலையும் அவளை இழுத்து, வெள்ளத்தில் விட்டு விட முயன்றதாகத் தோன்றியது.

வானதிக்கு அச்சமயம் அதிசயமான மனோதிடமும் தைரியமும் எங்கிருந்தோ வந்திருந்தன. பல்லைக் கடித்துக் கொண்டு தன் முழு பலத்தையும் கொண்டு எழும்பி மரக்கிளையின் மேலே தாவி ஏறினாள். வளைந்து ஊசலாடிய மெல்லிய கிளைகளுக்கு மேலே இரண்டு கவடுகளாகப் பிரிந்த ஒரு பெரிய கிளையில் வசதியான இடத்தில் கெட்டியாக உட்கார்ந்து கொண்டாள். சேலைத் தலைப்புகளை முறுக்கித் தண்ணீரைப் பிழிந்தாள்.

அப்போது சடபடவென்று தண்ணீர் அடிபடும் சத்தம் கேட்டது. சற்று முன்னால், அவள் கண்களை மூடிக்கொள்வதற்கு முன்னால், பார்த்த முதலையின் நினைவு வந்தது.

கீழே குனிந்து நாலு பக்கமும் உற்றுப் பார்த்தாள். முதலில் முதலையின் வால் தண்ணீரை அடிக்கும் காட்சி மட்டும் தென்பட்டது. முதலையின் உடம்பில் பெரும்பகுதியை அவள் ஏறி வந்த ஓட்டுக் கூரையின் உடைந்து சிதறிய பகுதிகள் மறைந்துக் கொண்டிருந்தன. சிறிது சிறிதாக முதலை தன் வாலின் உதவி கொண்டும் உடம்பை அசைத்தும் நெளிந்தும் அந்தக் கூரைப் பகுதிகளிலிருந்து முழுதும் விடுவித்துக்கொண்டு வெளி வந்தது; அப்படி வெளிவந்த மகிழ்ச்சியைக் காட்டுவதற்காக முதலை தன் வாயை அகலப் பிளந்தது. வானதியைப் பார்த்து அது, "வா, வா! எப்படியும் நீ என் வாயில் விழ வேண்டியதுதான்!" என்று சொல்வது போலிருந்தது.

வானதியும் தான் தப்பிப் பிழைத்த விதத்தை எண்ணிப் பார்த்து உற்சாகம் கொண்டிருந்தாள். "ஓகோ! அப்படியா சொல்கிறாய்? என்னை விழுங்கி விடுவேன் என்றா சொல்கிறாய்? முதலையே! உன் கைவரிசை, வால் வரிசை ஒன்றும் என்னிடம் பலியாது! நீ பல்லைக் காட்டுவதிலும் உபயோகமில்லை. உன் பசிக்கு என்னை நம்பியிராதே! வேறு யாரையாவது பார்த்துக்கொண்டு போ!" என்று வானதி முதலையிடம் பேசினாள். அந்தக் குரலைக் கேட்ட முதலை தன் இரண்டு பயங்கரமான கண்களாலும் அவளை உற்றுப் பார்க்கத் தொடங்கியது.

வானதி "ஓகோ! உன்னுடைய சபலம் உன்னை விடவில்லை போலிருக்கிறது!" என்று கூறிவிட்டுச் சுற்று முற்றும் பார்த்தாள். அவளுடைய நிலைமை சற்றுப் பீதி அளிக்கக் கூடியதாகவே தோன்றியது. தண்ணீரின் பக்கம் அந்தப் பெரிய மரத்தின் கிளைகள் வளைந்து தொங்கின. ஆனால் கரையின் பக்கத்தில் அப்படித் தாழ்ந்திருந்த கிளைகளையே காணவில்லை. அடிமரத்தின் வழியாக இறங்கினால், அங்கே வேர்களோடு வேராக முதலை காத்துக் கொண்டிருந்தது. நதியின் பக்கம் வளைந்திருந்த கிளைகளிலிருந்து குதித்தால் மடுவின் சுழல் அவளைச் சுற்றிச் சுற்றிப் பாதாளத்துக்கு இழுத்துக் கொண்டு போகக் காத்திருந்தது. அந்தப் பெரிய சுழலைச் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் கூடத் தலை சுற்றும் போலத் தோன்றியது. "கரைப் பக்கம் கிளைகள் உயரமாக இருந்தாலும் பாதகமில்லை, எப்படியோ குதித்துச் சமாளிக்கலாம்" என்று எண்ணி, மரக்கிளைகளின் வழியாக நடந்து மறு பக்கம் போக எத்தனித்து எழுந்தாள்.

ஏற்கனவே வெகு நேரம் அவளுடைய உடம்பின் கீழ்ப் பகுதி முழுவதும் தண்ணீரில் இருந்தபடியால் கால்கள் சில்லிட்டுப் போயிருந்தன. எழுந்து நிற்க முயன்றபோது கால்கள் வெடவெடவென்று நடுங்கின. "சீச்சீ! கால்களே! உங்களுக்கு என்ன வந்து விட்டது?" என்று சொல்லிவிட்டு வானதி மறுபடி உட்கார்ந்து கொண்டாள். யாருக்குப் பொறுமை அதிகம்? முதலைக்கா, தனக்கா?... என்று சோதித்துப் பார்க்க வேண்டியது தான் போலும்!

இச்சமயம், கஜேந்திரனின் பிளிறல் சத்தம் கேட்டு வானதி திடுக்கிட்டாள். சற்று முன் நதியைக் குறுக்கே கடந்து கரை ஏறி மேற்கு நோக்கிச் சென்ற யானை திரும்பி வந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் ஆற்றின் கரை ஓரமாகப் படகு ஒன்று வருவதையும் கவனித்தாள். அந்தப் படகில் இருவர் இருந்தார்கள். ஆம், ஆம்; அந்த இருவரில் ஒருவன் ஜோதிடரின் சீடன்; இன்னொருத்தி பூங்குழலிதான்! கடைசியில் தன்னைக் காப்பாற்றி அழைத்துப் போகப் பூங்குழலிதானா வரவேண்டும்?

படகு மரத்தின் அடியில் வந்தது. மரக்கிளை மேல் உட்கார்ந்திருந்த வானதியைப் பூங்குழலி பார்த்து விட்டாள். சிரித்துக் கொண்டே "இளவரசி! நல்ல இடம் பார்த்து ஒளிந்து கொண்டீர்கள், சீக்கிரம் இறங்கி வாருங்கள்! அதோ அந்த யானையின் மேல் வருகிறது யார் தெரியுமா?" என்று கேட்டாள்.

வானதியின் மனத்தில் சட்டென்று உண்மை உதயமாகி விட்டது. ஆனாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக , "தெரியாதே? யார்?" என்று கேட்டாள்.

"தாங்கள் யாரைத் தேடிக் கொண்டு புறப்பட்டீர்களோ, அவர் தான்! இளவரசர் தான்" என்றாள் பூங்குழலி.

வானதி அடங்கா வியப்புடன் யானையின் மேல் வருகிறவரைச் சில கண நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் அருகில் வரும் சமயத்தில் தான் மரக்கிளையின் மேல் உட்கார்ந்திருப்பது மிக்க அசம்பாவிதம் என்று தோன்றியது. பூங்குழலியின் யோசனைப்படி அவளுடைய படகில் இறங்கிவிட வேண்டியதுதான் என்று எண்ணிக் கீழே பார்த்தாள்.

அச்சமயம் படகு வெள்ளத்தின் வேகத்தினால் மரத்தடியில் நிற்க முடியாமல் நகர்ந்து செல்வதைக் கண்டாள். படகுடன் போக விரும்பாமல் பூங்குழலி தாவிக் குதித்ததையும் பார்த்தாள். ஐயோ இது என்ன? பக்கத்தில் பயங்கர முதலை கிடப்பதை இந்தப் பெண் கவனிக்கவில்லையா, என்ன? ஒரு கணத்தில் ஒன்பதினாயிரம் எண்ணங்கள் வானதியின் உள்ளத்தில் எழுந்து கொந்தளித்தன. அவள் வாயிலிருந்து ஏதோ உளறிக்குளறி வார்த்தைகள் வந்தன.

"முதலை!" என்பது மட்டும் பூங்குழலியின் காதில் விழுந்தது. அவள் திரும்பிப் பார்த்தாள். ஆம்; அவளுக்கு வெகு சமீபத்தில் பிரம்மாண்டமான முதலை அதன் வாயைப் பிளந்து கொண்டிருந்தது. பூங்குழலி திரும்பிப் பார்த்த சமயம் முதலை தன் வாலை ஓங்கித் தண்ணீரில் அடித்தது.

பூங்குழலி எவ்வளவோ தைரியசாலிதான்! எத்தனையோ அபாயங்களைச் சமாளித்திருக்கிறாள். ஆனால் பத்தடி தூரத்தில் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் முதலைக்கு முன்னால் மனோ தைரியத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய? கரணம் தப்பினால் மரணம்! ஒரு வினாடியில் உயிர் தப்பாவிட்டால், முதலையின் வாயில் போக வேண்டியதுதான்! எப்படி உயிர் தப்புவது? மறுபடியும் படகில் ஏறிக்கொள்ள வேண்டியதுதான்!

இவ்வாறு எண்ணிப் பூங்குழலி தண்ணீரில் பாய்ந்தாள். படகு அதற்குள் கொஞ்ச தூரம் போய்விட்டது. ஜோதிடரின் சீடன் படகை அவ்விடத்தில் நிறுத்த முடியாது என்று தீர்மானித்துச் சற்றுக் கீழ்ப்புறம் சென்று கரையோரமாக அதை ஒதுக்க எண்ணிக் கொண்டு போனான். பூங்குழலியின் ஆபத்தான நிலையை அவன் கவனிக்கவில்லை. படகைப் பிடிக்கத் தாவி நீந்திச் சென்ற பூங்குழலி அலைமோதும் கடலைக் காட்டிலும் காவேரி வெள்ளத்தின் கரையோரச் சுழல் அபாயகரமானது என்று கண்டாள். சுழலின் வேகம் அவளைக் கீழ் நோக்கி இழுத்தது. முதலை அவள் பின்னால் அவளைப் பிடிப்பதற்காக நகரத் தொடங்கி விட்டதென்பதை உணர்ந்தாள். இந்த நிலையில் அவளுடைய சேலையின் தலைப்பு வளைந்திருந்த மரக்கிளைகளில் மாட்டிக் கொண்டு அவளுடைய நிலையை மேலும் அபாயகரமாக்கியது.

இதையெல்லாம் மேற்கிளைமீது அமர்ந்திருந்த வானதி கண்டாள். தன்மீது பூங்குழலி கொண்டிருந்த மனக்கசப்பும், சற்று முன்னால் அவளுடைய கொடூர வார்த்தை காரணமாகத் தான் செய்த சபதமும், அவள் தன்னைக் கை தூக்கிவிட வேண்டாம் என்று எண்ணிக் கையை உதறித் தண்ணீரில் விழுந்ததும் மின்னல் வேகத்தில் அவள் மனதில் தோன்றி மறைந்தன. கூடவே, அப்பெண் பொன்னியின் செல்வரைக் கடலிலிருந்து காப்பாற்றிச் சூடாமணி விஹாரத்தில் கொண்டு போய்ச் சேர்த்ததும், அதனால் சோழ நாடும், தானும் அவளுக்குப் பட்டிருந்த நன்றிக்கடனும் நினைவுக்கு வந்தன. அதோ, யானைமீது அவர் வந்து கொண்டிருக்கிறார். அவர் வருவதற்குள்ளே இவள் முதலை வாயில் அகப்பட்டுக் கொண்டு விட்டால், அவர் மனம் என்ன பாடுபடும்? தன்னைப் பற்றி அவர் என்ன எண்ணுவார்? பார்க்கப் போனால் தன்னைக் காப்பாற்றும் எண்ணத்துடன் அல்லவா இவள் தொடர்ந்து வந்து இந்த அபாயத்துக்கு உள்ளாயிருக்கிறாள்?

இவ்வளவு எண்ணங்களும், இங்கே நேயர்கள் படிப்பதற்கு ஆன நேரத்தில் நூற்றில் ஒரு பங்கு நேரத்திற்குள்ளே, வானதியின் உள்ளத்தில் தோன்றின. "வாயுவேகம் மனோவேகம்" என்று சொல்வது வெறும் வார்த்தை அன்று. எல்லா வேகங்களுக்குள்ளும் சிந்தனையின் வேகம்தான் அதிக வேகமானது. இவ்விதம் எண்ணமிட்ட நேரத்திலேயே தன்னுடைய கடமை இன்னதென்பதையும் வானதி நிச்சயித்துவிட்டாள். மேற்கிளையிலிருந்து ஒரு கிளை கீழே இறங்கி, அதன்மீது படுத்த வண்ணம் கைகளைக் கீழே நீட்டினாள். பூங்குழலியின் தலைக் கூந்தலை வாரிப் பிடித்துக்கொண்டாள். பூங்குழலி மேல் நோக்கிப் பார்த்தாள். வானதியின் கைப்பிடியிலிருந்து அவள் தப்பிச் செல்ல முயலவில்லை. ஒரு கரத்தை மேலே நீட்டினாள். வானதி இப்போது அந்தக் கரத்தைப் பிடித்துக் கொண்டாள். பூங்குழலியை மேலே இழுக்கத் தொடங்கினாள். இன்னொரு கையினால் மரக்கிளை ஒன்றைப் பற்றிக் கொண்டு பூங்குழலி வெள்ளத்திலிருந்து மேலே எழும்பினாள். வானதி இருந்த கிளையிலேயே அவளும் தாவி ஏறினாள். இரண்டு பேரையும் தாங்க முடியாமல் அந்தக் கிளை வளைந்தது. பூங்குழலியும் மேலே ஏற முயற்சித்தாள். அந்த முயற்சியில் அவளுடைய கால்கள் தடுமாறின. மறுகணத்தில் அவள் மரக்கிளைக்கும், நதி வெள்ளத்துக்கும் இடையில் தொங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய ஒரு கையை மட்டும் வானதியின் இரு கரங்களும் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்தன.

மரத்தின் வேர்களுக்கு மத்தியில் கிடந்த முதலை வெளிப் புறப்படுவதற்குச் சிறிது நேரம் ஆயிற்று. இப்போது அது வெளிவந்து விட்டது. மரக்கிளையிலிருந்து தொங்கிய உருவத்தைப் பார்த்து விட்டு, வாயை மறுபடியும் அகலமாகத் திறந்தது. பூங்குழலியின் உடலும், உயிரும் ஊசலாடிக் கொண்டிருந்தன.

வானதியின் மெல்லிய கரங்கள் பூங்குழலியின் வைர உடலின் கனத்தினால் இற்று விழுந்துவிடும் போலிருந்தன. அவளுடைய உள்ளமோ எந்தக் கணத்தில் பூங்குழலி தன் கையிலிருந்து நழுவி முதலையின் வாயில் விழுந்து விடுவாளோ என்ற எண்ணத்தினால் துடி துடித்தது.

அத்தகைய விபத்து நேர்ந்துவிட்டால், பிறகு இளவரசரின் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கவே முடியாது. பூங்குழலி விழும்போது அவளும் கூட விழுந்து உயிரை விட்டு விடுவதே மேலானது. அப்படித்தான் செய்ய வேண்டும்.

அதோ யானை நெருங்கி வந்துவிட்டது. இளவரசர் அதன்மேல் வருகிறார். அவர் வந்து காப்பாற்றும் வரையில், பூங்குழலியை விட்டு விடாமலிருக்க இந்தக் கரங்களில் சக்தி இருக்குமா...? யானை ஆற்றங்கரையில் வந்து மரத்தடியில் நின்றது. மறுபடியும் ஒரு தடவை பிளிறியது, அந்தச் சத்தத்தைக் கேட்டு முதலை அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தது. என்ன நினைத்துக் கொண்டதோ என்னமோ மறுபடியும் மரத்தின் வேர்களுக்கு மத்தியில் சென்று படுத்துக் கொண்டது.

வானதியும் மரக்கிளையின் மீது குனிந்த வண்ணம் யானையைப் பார்த்தாள். அதன் மேலிருந்தவரையும் பார்த்தாள். ஆம்; அவர் இளவரசர்தான்! பொன்னியின் செல்வர்தான்!

"யானைப்பாகா! யானைப்பாகா! அன்றொரு நாள் பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றியதுபோல் இன்றைக்கு இந்தப் பேதை பெண்களைக் காப்பாற்று!" என்று தனக்கு மட்டும் கேட்கக் கூடிய மெல்லிய குரலில் கூறிக் கொண்டாள்.

முடியாது; இனி இந்த ஓடக்காரப் பெண்ணைத் தாங்க முடியாது! இனி ஒரு நிமிஷம் தாமதித்தாலும் தோள் பட்டைகளிலிருந்து கைகள் தனியாகப் பிய்ந்து விழுந்துவிடும்! அப்பப்பா! இவள் பெயர் பூங்குழலி! ஆனால் என்ன கனம் கனக்கிறாள்? இரும்பினால் செய்த உடம்பு போல அல்லவா இருக்கிறது!

"யானைப்பாகா! யானைப்பாகா! சீக்கிரம் வரமாட்டாயா?..."

பூங்குழலி கிறீச்' என்று கத்தினாள். அதைக் கேட்ட வானதி அவளை முதலை பிடித்துக் கொண்டதாக எண்ணினாள். சொல்ல முடியாத பயங்கரம் அவள் மனதில் குடிகொண்டது. கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அவளுடைய கைகளைப் பிடித்துக் கீழ் நோக்கி இழுத்துக் கொண்டிருந்த கனம் மேலும் அதிகமாயிற்று. முதலைதான் பூங்குழலியைப் பிடித்து இழுப்பதாக எண்ணிக் கண்ணை மூடிய வண்ணம் அவளை இன்னும் கெட்டியாகப் பிடித்து மேலே தூக்க முயன்றாள்.

"கையைவிடு! வானதி! கையை விடு!" என்று செவியில் அமுதென ஒலித்த இளவரசரின் குரல் கேட்டது. இன்னது செய்கிறோம் என்று தெரியாமல் கையை விட்டாள். அவளுடைய தோள்களைப் பிய்த்து இழுத்த பாரம் நீங்கியது. கண்களைத் திறந்து பார்த்தாள்.

பூங்குழலியைக் கஜேந்திரன் துதிக்கையினால் சுழற்றிப் பற்றி எடுத்துக் கரையில் இறக்கி விடுவதைக் கண்டாள். பூங்குழலியின் கண்கள் மூடியிருந்தன. யானைத் துதிக்கை அவள் மீது சுற்றியபோதுதான் அவள் அவ்வாறு 'கிறீச்'சிட்டுக் கத்தியிருக்க வேண்டும்.

அதேமாதிரி தானும் ஒரு தடவை கத்திவிட்டு மூர்ச்சையடைந்தது வானதிக்கு நினைவு வந்தது. இப்போது அதைக்காட்டிலும் பன்மடங்கு அபாயகரமான நிலைமையாயிருந்தும், தான் பயப்படாமலும் பிரக்ஞை இழக்காமலும் இருப்பதை நினைக்க அவளுக்கே வியப்பாயிருந்தது.

தன்னுடைய தைரியத்தைப் பார்த்து மெச்சிப் பாராட்ட இளையபிராட்டி இங்கே இல்லையே! ஆயினும் பாதகமில்லை. எப்படியும் ஒருநாள் அவருக்குத் தெரியாமற் போகாது. இப்போது என்னுடைய கதி என்ன? பூங்குழலியை மட்டும் அழைத்துக்கொண்டு என்னை இந்த மரத்தின் மேலேயே விட்டு விட்டு இளவரசர் போய்விடுவாரா?

அவ்விதம் அவர் செய்தால் அது என்னுடைய அசட்டுத்தனத்துக்குச் சரியான தண்டனையாகத்தான் இருக்கும்! இல்லை, இல்லை! கஜராஜனின் துதிக்கை மறுபடியும் அவளை நோக்கி நீண்டு கொண்டு வந்தது. வானதி மீண்டும் ஒரு தடவை கண்களை மூடிக் கொண்டாள். மறுகணம் அவள் மரக்கிளையிலிருந்து தூக்கப்பட்டுக் கெட்டியான தரையில் விடப்பட்டதை உணர்ந்தாள். கண் விழித்துப் பார்த்தபோது தான் நதிக்கரையில் பூங்குழலிக்கு அருகில் நிற்பதைக் கண்டாள்.

தன்னை அறியாமல் எழுந்த அன்புடனும் ஆர்வத்துடனும் அந்த ஓடக்காரப் பெண்ணைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.

பூங்குழலி கண்களில் நீர் ததும்ப, தழுதழுத்த குரலில், "இளவரசி! இன்று 'என் உயிரைக் காப்பாற்றினீர்கள். நான் உங்களை நதி வெள்ளத்தில் முழுகிப் போகாமல் காப்பாற்றி அழைத்துப்போக வந்தேன். அதற்கு மாறாக நீங்கள் என்னை முதலை வாயிலிருந்து காப்பாற்றினீர்கள். இந்த நன்றியை என்றும் மறக்க மாட்டேன்" என்றாள்.

"பூங்குழலி! நானா உன்னைக் காப்பாற்றினேன்? உன்னையும் என்னையும் அந்த யானைப்பாகன் அல்லவா காப்பாற்றினார்? அவரிடம் உன் நன்றியைக் கூறு!" என்றாள் வானதி.

"என் உயிர்மேல் எனக்கு அவ்வளவாக ஆசை ஒன்றுமில்லை. ஆனால் என் அத்தை அவளுடைய செல்வப் புதல்வரிடம் ஓர் அவசரச் செய்தி சொல்லும்படி என்னை அனுப்பினாள். அதைச் சொல்லுவதற்கு முன்னால் நான் செத்துப் போக விரும்பவில்லை!" என்றாள் பூங்குழலி.

யானையின் மேலிருந்தவரை வானதி நிமிர்ந்து பார்த்தாள். ஏதோ ஒரு விஷமக் குதூகலம் அவளை அச்சமயம் பற்றிக் கொண்டிருந்தது.

"யானைப்பாகா! யானைப்பாகா! எங்களை உன் யானை மேல் ஏற்றிக்கொண்டு போகிறாயா?" என்று கேட்டுவிட்டுக் கலீர் என்று சிரித்தாள்.









Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 21. உயிர் ஊசலாடியது!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 57. மாய மோகினி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 25. கோட்டைக்குள்ளே
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 41. நிலவறை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: