BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. இறுதிக் கட்டம் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. இறுதிக் கட்டம்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. இறுதிக் கட்டம் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. இறுதிக் கட்டம்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. இறுதிக் கட்டம் Icon_minitimeMon Jun 06, 2011 3:17 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

32. இறுதிக் கட்டம்



நந்தினி திரும்பிச் சென்று தனது அறைக்குள் வருவதற்காக ஏற்பட்ட பிரதான வாசலின் கதவைச் சாத்தித் தாளிட்டு வந்தாள். பின்னர், கையில் தீபத்துடன் வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே பிரவேசித்தாள்.

மந்திரவாதி ரவிதாஸன் முன்னமே கோரமான முகமுடையவன். முகத்திலும் தலையிலும் புதிதாக ஏற்பட்டிருந்த காயங்களினால் அவனுடைய தோற்றம் மேலும் கோரமடைந்திருந்தது.

நந்தினி அதைப் பார்த்துவிட்டு, "மந்திரவாதி இது என்ன? உன் உடம்பெல்லாம் புதுக் காயங்கள்?" என்றாள்.

"ராணி! இதிலே தங்களுக்கு வியப்பு என்ன? தங்களைப் போல் நாங்கள் அறுசுவை உண்டி அருந்தி பஞ்சணை மெத்தையில் சொகுசாய்ப் படுத்துக் காலங் கழிப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? நானும் பரமேசுவரனும் இன்று பிழைத்து வந்திருப்பதே பெரிய காரியம், இறந்துபோன பாண்டிய சக்கரவர்த்தியின் ஆவிதான் எங்களை இன்று உயிரோடிருக்கும்படி காப்பாற்றியது..."

"இல்லை, ரவிதாஸா! இல்லை! அவருடைய ஆவி என்னுடனேயே சதா சர்வ காலமும் இருக்கிறது. ஒரு நாழிகைக்கு முந்திக் கூட என் முன்னால் தோன்றிச் சபதத்தை நிறைவேற்றப் போகிறாயா, இல்லையா? என்று கேட்டது."

"ராணி! அதற்குத் தாங்கள் என்ன பதில் சொன்னீர்கள்?"

"'சபதத்தை இன்று நிறைவேற்றுவேன்; இல்லாவிடில் உயிரை மாய்த்துக் கொள்வேன்' என்று சொன்னேன்."

"அப்படியானால் நாங்கள் ஓடோ டி வந்ததே நல்லதாய்ப் போயிற்று. இத்தனை காலங்கழித்து நீங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுவதில் யாருக்கு என்ன லாபம்? எடுத்த காரியம் அல்லவோ முடிவு பெற வேண்டும்? தங்களால் முடியாது என்றால்..."

"முடியாது என்று யார் சொன்னார்கள்? சபதத்தை நிறைவேற்றுவேன். அதற்குப் பிறகு என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வேன்..."

"வேண்டாம், வேண்டாம். சபதத்தை நிறைவேற்றிய பிறகு தாங்கள் செய்யக்கூடிய காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. மதுரையில் வீரபாண்டியனுடைய திருக்குமாரனுக்கு உலகமறியப் பட்டாபிஷேகம் செய்தாக வேண்டும்..."

"அதையெல்லாம் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இன்று இரவு என் வேலை முடிந்துவிடும். என் வாழ்வும் முடிந்துவிடும்..."

"ராணி! பழுவேட்டரையருடைய பொக்கிஷத்தில் உள்ள திரவியங்கள் எல்லாம் மலைநாட்டுக்குப் போய்ச் சேர வேண்டும். அதற்குத் தங்கள் உதவி தேவையாயிருக்கிறது!"

"சபதம் முடிந்த பின்னரும், என் கணவரை ஏமாற்றிக் கொண்டு உயிர் வாழச் சொல்கிறாயா, மந்திரவாதி!"

"அம்மணி! தங்கள் கணவர் யார்?"

"உலகறிய என்னை, மணந்து, நாடு நகரங்களில் உள்ளவர்களின் பரிகாசங்களையெல்லாம் பொருட்படுத்தாமல், என் ஒவ்வொரு சபதத்தையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிற உத்தமரைத்தான் சொல்கிறேன்."

"ராணி! பழுவேட்டரையர் தங்கள் கணவர் அல்ல. ஒவ்வொரு நாள் இரவும் வீரபாண்டியர் என் கனவில் வந்து தங்களை அவருடைய பட்டமகிஷியாக நடத்தும்படி கட்டளையிடுகிறார்..."

"மந்திரவாதி! அவர் பேச்சு வேண்டாம். இந்தக் காயங்களெல்லாம் உனக்கு எப்படி ஏற்பட்டன என்று சொல்லவில்லையே?"

"நேற்றிரவு கொள்ளிடக் கரைக் காட்டில் எங்களை ஒரு கிழப் புலி தாக்கியது. கிழப் புலியானாலும் பற்களும் நகங்களும் மிக்க கூராயிருந்தன..."

"எப்படித் தம்பி வந்தீர்கள்?"

"பாண்டிய குமாரருக்குப் பட்டாபிஷேகம் நடத்தினோமே? அந்தப் பள்ளிப்படை கோபுரத்தில் இடிந்திருந்த பகுதியை அந்தப் புலியின் பேரில் தள்ளிவிட்டுத் தப்புவித்து வந்தோம்..."

"ஐயோ! பாவம்! கிழப் புலியைக் கூட நீங்கள் நேர் நின்று சண்டையிட்டு ஜயிக்க முடியவில்லை...!"

"ஆம், ராணி! ஒப்புக்கொள்கிறோம். அப்படியிருக்கும் போது இளம் புலியாகிய ஆதித்த கரிகாலனை நேருக்கு நேர் எதிர்ப்பது எப்படி? அதனாலேதான் தந்திர மந்திரங்களைக் கையாள வேண்டியிருக்கிறது. தேவி! இன்றிரவு தப்பினால் அப்புறம் நமக்குச் சந்தர்ப்பம் கிட்டப் போவதில்லை. சுந்தர சோழனையும் அருள்மொழிவர்மனையும் பற்றிச் செய்தி வந்துவிட்டால், பிறகு ஆதித்த கரிகாலன் நம்மிடம் அகப்படப் போவதில்லை..." என்றான் ரவிதாஸன்.

"மந்திரவாதி! அவர்களைப் பற்றி என்ன? ஏதாவது நிச்சயமாகத் தெரியுமா?" என்று கேட்டாள் நந்தினி.

"இத்தனை நேரம் அவர்களுடைய ஆயுள் முடிந்திருக்கும், சந்தேகமில்லை..."

"நீயும் தேவராளனும் ஈழத்துக்குப் போனபோது இப்படிச் சொல்லிவிட்டுத்தான் போனீர்கள்."

"அங்கே அந்த ஊமைப் பைத்தியம் ஓயாமல் எங்களைப் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தது. அதனால்தான் முடியவில்லை..."

"வாணர் குலத்து வீரன் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகச் சொன்னீர்கள். அவனும் தப்பிப் பிழைத்து வந்து விட்டான்..."

"பள்ளிப்படைக் காட்டில் அவனை வேலை தீர்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. தாங்கள் தடுத்துவிட்டீர்கள்."

"அதற்கு முக்கிய காரணம் இருப்பதாகச் சொன்னேன்..."

"அது என்ன முக்கிய காரணமோ தெரியாது. அவன் இங்கே வந்து ஆதித்த கரிகாலனை இரும்புக் கவசம்போல் பாதுகாத்து வருகிறான்."

"அதைப் பற்றி நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம்."

"கவலைப்பட்டே தீரவேண்டியிருக்கிறது. இன்று இல்லாவிட்டால் என்றைக்கும் இல்லை. தேவி! என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? நாங்கள் என்ன செய்ய வேண்டும்?"

"இந்தச் சமயத்தில் நீங்கள் ஒருவரும் இங்கு வராதிருந்தாலே எனக்குப் பெரிய உதவியாயிருக்கும்..."

"அது ஒருநாளும் முடியாத காரியம்."

"என்னிடம் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை..."

"நம்பிக்கை இருப்பதினால்தான் வந்திருக்கிறோம். சபதம் முடிந்த பிறகு தங்களைப் பத்திரமாக அழைத்துக் கொண்டு போவதற்காக வந்திருக்கிறோம். எதிர்பாராத தடங்கல் ஏதாவது ஏற்பட்டால் அதற்கும் தயாராயிருப்போம். எந்த நிமிஷமும் தாங்கள் எங்களை உதவிக்கு அழைக்கலாம்."

"நான் போட்டிருக்கும் திட்டத்தில் தடங்கல் எதுவும் ஏற்படாது. சபதம் முடிந்த பிறகு நான் உயிரோடிருக்கவும் விரும்பவில்லை."

"கூடவே கூடாது! தாங்கள் எங்களுடன் வந்தே தீர வேண்டும். இல்லையென்றால்..."

"மந்திரவாதி! சபதம் முடிந்த பிறகு ஒரு நிமிஷமும் நான் பெரிய பழுவேட்டரையர் வீட்டில் இருக்க மாட்டேன்..."

"அப்படியானால் நீங்கள் எங்களுடன் வந்து விடுங்கள்!"

"என்னை எப்படி அழைத்துக் கொண்டு போவீர்கள்?"

"இந்தச் சுரங்கப் பாதையின் முடிவில் ஐயனார் கோவில் இருக்கிறது. அதன் அருகில் உள்ள காட்டில் பழுவூர் ராணியின் பல்லக்கைத் தயாராக வைத்திருக்கிறோம். இடும்பன்காரி பல்லக்கைச் செப்பனிடுவதற்கென்று முன்னமே வெளியிலே கொண்டு வந்து விட்டான். வீர பாண்டியனின் தலையைக் கொய்தவனைப் பழிவாங்கிய தேவியை நாங்களே பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்வோம். பொழுது விடிவதற்குள் கொல்லிமலைக்குப் போய் விடுவோம்."

"நீங்கள் எத்தனை பேர் இந்த இடத்தில் இருக்கிறீர்கள்?"

"இங்கே நாலு பேர் இருக்கிறோம்!" என்று கூறிவிட்டு ரவிதாஸன் மெதுவாகக் கையைத் தட்டினான்.

அந்த மண்டபத்தில் இருந்த பயங்கரமான செத்த மிருகங்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்தவர்கள் சிறிது வெளிப்பட்டு முகத்தைக் காட்டினார்கள்.

"பரமேசுவரன் எங்கே?" என்று நந்தினி கேட்டாள்.

"அவனை வெளியில் நிறுத்தியிருக்கிறேன். ஐயனார் கோவிலில் காளாமுகன் ஒருவன் நிஷ்டை செய்து கொண்டிருந்தான். அவனை அங்கிருந்து போகச் சொல்வது பெரிய தொல்லையாய்ப் போய் விட்டது. மறுபடியும் அவன் அங்கு வந்து விடாமல் பார்த்துக் கொள்ளும்படி தேவராளனைக் கோவில் வாசலில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறேன்..."

"காளாமுகனைப் பற்றி நமக்கு என்ன கவலை? மந்திரவாதி! பெரிய பழுவேட்டரையரைப் பற்றிய செய்தி தெரியுமா?" என்று நந்தினி கேட்டாள்.

ரவிதாஸன் சிறிது திடுக்கிட்டு, "என்ன செய்தி?" என்றான்.

"அவர் தஞ்சாவூருக்குப் பிரயாணப்பட்டுப் போனார் அல்லவா? வழியில் கொள்ளிடத்தைப் படகில் கடக்கும்போது புயல் அடித்துப் படகு கவிழ்ந்துவிட்டதாம். பழுவேட்டரையர் கரையேறவில்லையென்றும், தண்ணீரில் மூழ்கிப் போய்விட்டதாகவும் சம்புவரையனுக்கு இன்று சாயங்காலம் செய்தி வந்திருக்கிறதாம்!"

"தெய்வமே? அவர் கதி அப்படியா ஆயிற்று? இத்தனை நேரம் தாங்கள் இந்த முக்கிய விவரத்தைப் பற்றிச் சொல்லவில்லையே?"

"அதை நான் நம்பவில்லை, மந்திரவாதி! பழுவேட்டரையர் கொள்ளிடத்தில் முழுகி இறந்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை."

"எனக்கும் அந்தச் செய்தியில் நம்பிக்கை இல்லை, ராணி!"

"அவர் கொள்ளிடத்தின் இக்கரைக்கு நீந்தி வந்திருந்தால் என்ன செய்கிறது? ஒருவேளை இன்றிரவு இங்கு வந்து விட்டால்?... இதைப் பற்றித்தான் சிறிது கவலைப்படுகிறேன்..."

"ராணி! அதைப் பற்றித் தங்களுக்குக் கவலை வேண்டாம். இப்போதுதான் எனக்கும் நினைவு வருகிறது. கொள்ளிடத்துக்கு அக்கரையில் தஞ்சாவூர்ச் சாலையில் ஆஜானுபாகுவான மனிதர் ஒருவரை நேற்றிரவு பார்த்தேன். ஆடை ஆபரணம் ஒன்றும் அவர் அணிந்திருக்கவில்லை. இருட்டாகவும் இருந்தபடியால் அடையாளம் தெரியவில்லை. இப்போது யோசித்தால், அந்த வழிப்போக்கர் ஒருவேளை பெரிய பழுவேட்டரையராகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது!"

"அப்படியானால், நிச்சயமாக இன்றிரவு அவர் இங்கே வந்து விடமாட்டார் அல்லவா?"

"மாட்டவே மாட்டார்! அதைப் பற்றித் தாங்கள் தைரியமாக இருக்கலாம். இப்பொழுது எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?"

"மந்திரவாதி! நீங்கள் இங்கேயே பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். என்னுடைய அறையில் என்ன நடப்பதாகத் தோன்றினாலும், எத்தனை பேருடைய பேச்சுக் குரல் கேட்டாலும் அவசரப்பட்டு உள்ளே வரவேண்டாம். வந்தால் காரியம் கெட்டுப் போகும். நான் குரல் கொடுத்த பிறகு நீங்கள் வந்து சேருங்கள்!"

"ராணி! தாங்கள் எப்படிக் குரல், கொடுப்பீர்கள்?"

"மந்திரவாதி! நான் கலகலவென்று சிரித்துப் பல வருஷம் ஆயிற்று என்று தெரியும் அல்லவா? நான் சிரித்து நீ கேட்டேயிருக்க மாட்டாய்!"

"தேவி! ஒரே ஒரு சமயம் அந்தத் துஷ்ட வாலிபன் வந்தியத்தேவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது நீங்கள் சிரிக்கக் கேட்டேன்..."

"ஆகா! அதைக்கூட ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறாயா? நல்லது! இன்றைக்கு நான் கலகலவென்று உரத்துச் சிரிக்கும் சத்தம் கேட்டால் நீங்கள் இரகசியக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வாருங்கள். காரியம் முடிந்துவிட்டதற்கு அது அடையாளம். இப்போதும் வந்தியத்தேவனைப் பார்த்தே நான் சிரித்துக் கொண்டிருந்தாலும் இருப்பேன். அதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்..."

"தேவி! தங்களுடைய உத்தேசம் என்னவென்பது ஒருவாறு இப்போது எனக்குத் துலங்குகிறது..."

"கொஞ்சம் பொறுத்திருந்தால், எல்லாம் துலாம்பரமாகிவிடும். எதிர்பாராத தடங்கல் ஏதாவது ஏற்பட்டுவிட்டால், அப்போது என் அழுகைக் குரல் கேட்கும். உடனே வந்து சேருங்கள்..."

"அப்படியே செய்வோம், ராணி! ஆனால் தங்கள் அழுகைக் குரலைக் கேட்க நான் விரும்பவில்லை. சிரிப்புக் குரலைக் கேட்கத்தான் விரும்புகிறேன்" என்றான் மந்திரவாதி ரவிதாஸன்.




Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 32. இறுதிக் கட்டம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. நந்தினி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. இரு சிறைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: