BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  36. பாண்டிமாதேவி Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 36. பாண்டிமாதேவி

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  36. பாண்டிமாதேவி Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 36. பாண்டிமாதேவி   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  36. பாண்டிமாதேவி Icon_minitimeTue Jun 07, 2011 3:28 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

36. பாண்டிமாதேவி


வந்தியத்தேவனை வாலில்லாக் குரங்கோடு சேர்த்துக் கட்டியவர்கள், அவனுக்கு அருகில் சுவரில் மாட்டியிருந்த கலைமானின் கொம்புகளோடு மணிமேகலையைச் சேர்த்துக் கட்டினார்கள்.

"மந்திரவாதி! நான் தான் உங்கள் எதிரி, கடம்பூர் இளவரசியை ஏன் கட்டுகிறீர்கள்? விட்டு விடுங்கள்!" என்றான் வந்தியத்தேவன்.

ரவிதாஸன் அவனைப் பார்த்து, "பொறு தம்பி, பொறு! பல தடவை நீ எங்கள் காரியத்தில் குறுக்கிட்டிருக்கிறாய்! ஒவ்வொரு தடவையும் உன்னை நாங்கள் உயிரோடு விட்டு வந்தோம். ஆனாலும் நீ எங்களைப் பின் தொடர்ந்து வருவதை நிறுத்தவில்லை!" என்றான்.

வந்தியத்தேவன் சிரித்தான்.

"என்னப்பா, சிரிக்கிறாய்? வாலில்லாக் குரங்கின் ஆலிங்கனம் அவ்வளவு குதூகலமாயிருக்கிறதா?" என்று கேட்டான் ரவிதாஸன்.

"இல்லை! நீ சொன்னதை எண்ணிப் பார்த்துத்தான் சிரித்தேன்!" என்றான் வல்லவரையன்.

"நான் சொன்னவற்றில் எதைக் குறித்து இப்படிச் சிரிக்கிறாய்?"

"உங்களை நான் தொடர்ந்து வருவதாகச் சொன்னாயே? நீங்கள் என்னை விடாமல் தொடர்ந்து வருவதாகவும் சொல்லலாம் அல்லவா? என் காரியத்தில் நீங்கள் குறுக்கிடுவதாகவும் சொல்லலாம் அல்லவா? இப்போது பார்! நான் கடம்பூர் இராஜகுமாரியை அழைத்துக்கொண்டு ஒரு முக்கியமான காரிய நிமித்தமாகப் புறப்பட்டேன். நீ குறுக்கிட்டு என்னை இந்தக் குரங்கோடு சேர்த்துக் கட்டிப் போட்டிருக்கிறாய்!"

"ஓகோ! அப்படியா சமாசாரம்? உன் காரியத்தில் நாங்கள் குறுக்கிடுவதாகவே வைத்துக்கொள். ஆனால் அவ்விதம் நேர்வது இதுதான் கடைசி முறை. இன்று நீ உயிரோடு பிழைத்து விட்டாயானால், பிறகு எங்களைக் காணவே மாட்டாய்!"

"அப்படியானால், நான் உயிரோடிருக்கப் பிரயத்தனப்பட வேண்டியதுதான்! மந்திரவாதி! நான் உயிரோடு தப்புவதற்கு நீயே ஒரு தந்திரம் சொல்லிக் கொடு!" என்றான் வந்தியத்தேவன்.

"பேஷாகச் சொல்லித் தருகிறேன். இந்த மண்டபத்திலும் இதற்கு அடுத்த அறையிலும் என்ன நடந்தாலும் நீ அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இரு! பதட்டமாக ஒன்றும் செய்யாதே! உன் உயிருக்கு ஆபத்து நேராது."

"ஏன் என்பேரில் உங்களுக்கு அவ்வளவு அபிமானம்? ஏன் என்னைக் கொல்லாமல் விடுகிறீர்கள்?"

"அப்படிக் கேள்! அது பெரிய முட்டாள்தனந்தான்! ஆனால் எங்கள் தேவியின் கட்டளை!"

"யார் உங்கள் தேவி?"

"இன்னுமா உனக்குத் தெரியவில்லை? பாண்டிமாதேவிதான். பெரிய பழுவேட்டரையரின் வீட்டில் வந்திருக்கும் வீர பாண்டிய சக்கரவர்த்தியின் வீரபத்தினி நந்தினி தேவிதான்!"

"நல்ல வீரபத்தினி!"

"சீ! துஷ்டச் சிறுவனே! எங்கள் தேவியைப் பற்றி ஏதேனும் சொன்னால் உயிரை இழப்பாய்! ஜாக்கிரதை!"

"நீங்கள் அல்லவா பழுவூர் ராணியின் மீது அவதூறு சொல்கிறீர்கள்? இன்னொரு புருஷன் வீட்டில் வந்திருப்பவளை வீரபாண்டியனுடைய தேவி என்று சொல்கிறீர்களே?"

"அதனால் என்ன? இராமனுடைய பத்தினி சீதை, இராவணனுடைய வீட்டில் சில காலம் இருக்கவில்லையா?"

"இராமர் போய்ச் சீதா தேவியை அழைத்துக்கொண்டு வந்து விட்டாரே?"

"நாங்களும் எங்கள் பாண்டிமா தேவியை அழைத்துக்கொண்டு போகத்தான் வந்திருக்கிறோம். அவர் பழுவூர் அரண்மனையில் தாமாகவே எந்தக் காரியத்துக்காகச் சிறைப்பட்டிருந்தாரோ அது இன்றைக்கு முடியப் போகிறது..."

"ஆகா! அது என்ன காரியம்?"

"சற்று நேரம் பொறுமையாயிரு! நீயே தெரிந்து கொள்வாய்? உன் துஷ்டத்தனத்தைக் காட்டினாயானால், நீ மட்டுமல்ல, இந்தப் பெண்ணும் துர்க்கதிக்கு உள்ளாக நேரிட்டு விடும்!"

இவ்விதம் கூறிவிட்டு ரவிதாஸன் எதிர்ப் பக்கத்துச் சுவரண்டை போவதற்கு யத்தனித்தான்.

"மந்திரவாதி! இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்லி விட்டுப் போ!" என்றான் வந்தியத்தேவன்.

ரவிதாஸன் திரும்பிப் பார்த்து, "தம்பி! என்னை 'மந்திரவாதி' என்று இனி அழையாதே!" என்றான்.

"பின்னே, தங்களை என்னவென்று அழைக்க வேண்டும்?"

"முதன் மந்திரி என்று மரியாதையுடன் அழைக்க வேண்டும்!"

"ஐயா! தாங்கள் எந்த மகா ராஜ்யத்தின் முதன் மந்திரியோ?"

"தெரியவில்லையா, உனக்கு? பாண்டிய மகாசாம்ராஜ்யத்தின் முதன் மந்திரி! பள்ளிப்படைக்கு அருகில் நடந்த பட்டாபிஷேக வைபவத்தை நீ பார்த்துக் கொண்டிருந்தாயே?"

"பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது ஏதோ என் மனப்பிரமை என்று நினைத்தேன்..."

"அதனாலேதான் அதைப்பற்றி யாரிடமும் நீ சொல்லவில்லையாக்கும்?"

"இரண்டொருவரிடம் சொன்னேன்; அவர்கள் என்னைப் பைத்தியக்காரன் என்றார்கள். நான் ஏதோ துர்சொப்பனம் கண்டிருக்க வேண்டும் என்று சொன்னார்கள்..."

"ஆகா! அவர்கள் அப்படியே நினைத்துக்கொண்டிருக்கட்டும். நீ வெளியில் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று நம்பித்தான் உன்னை நாங்களும் உயிரோடு விட்டோ ம்!..."

"மந்திரவாதி! நீங்கள் என்னை உயிரோடு விட்டதற்கு அது ஒன்று மட்டும்தான் காரணமா?"

"வேறு என்ன?"

"உங்கள் ராணி எனக்காகச் சிபாரிசு செய்யவில்லையா?"

"அதனால் என்ன?"

"இப்போதும் அவருடைய சிபாரிசு எனக்குக் கிடைக்கும்."

"கிடைக்கும் வரையில் பொறுத்திரு!"

"மந்திரவாதி, உங்கள் ராணி என்னை அவசரமாக அழைத்து வரும்படி இந்தக் கடம்பூர் இளவரசியை அனுப்பி வைத்தார். அதனாலேதான் நாங்கள் இருவரும் ஒன்றாக வந்தோம்..."

"அப்பனே! இராணியின் அறைக்கு வருவதற்கு வேறு வழி இருக்கிறதே! இந்த வழியில் வருவானேன்?"

"அதைப்பற்றி உன்னிடம் நான் சொல்ல வேண்டியதில்லை. ராணி கேட்டால் சொல்லிக் கொள்கிறேன்..."

"ராணி வந்து கேட்கும் வரையில் பொறுத்துக் கொண்டிரு!"

"மந்திரவாதி! என்னையும் சம்புவரையர் குமாரியையும் உடனே கட்டவிழ்த்து விடச் சொல்! இல்லாவிட்டால்..."

"என்ன செய்வாய்?"

"இந்த மண்டபம் அதிரும்படி கூச்சல் போடுவேன்!"

"நீ அப்படிக் கூச்சல் போட்ட உடனே உன் மேல் மூன்று வேல்கள் ஒரே சமயத்தில் பாயும், ஜாக்கிரதை!"

வந்தியத்தேவன் ஒரு முறை சுற்றும் முற்றும் கூர்ந்து பார்த்தான்.

ஆம்; மூன்று சதிகாரர்கள் கையில் வேலுடன் தயாராகக் காத்திருந்தார்கள்.

"தம்பி! நீ ரொம்பக் கெட்டிக்காரப் பிள்ளை. உன்னை எங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம் என்ற ஆசைகூட எனக்கு ஒரு சமயம் இருந்தது. ஆனால் அந்தப் பழையாறை மோகினியின் பாசவலையில் நீ விழுந்து விட்டாய். அது போனால் போகட்டும். இப்போது புத்திசாலித்தனமாகப் பிழை! சத்தம் மட்டும் போட்டால் நீ சாவது நிச்சயம்!"

இவ்வாறு ரவிதாஸன் எச்சரித்துவிட்டு எதிர்ப் பக்கத்துச் சுவரில் பொருந்தியிருந்த யானை முகத்தை நோக்கிப் போனான். சிறிது நேரம் சுவரண்டை காது கொடுத்துக் கேட்டான். பின்னர் அந்த யானையின் நீண்ட தந்தங்களைப் பிடித்துத் திருகினான். அங்கே ஒரு சிறிய துவாரம் ஏற்பட்டது. உள் அறையில் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்த தீபங்களின் ஒளி, வட்ட வடிவமான பூரண சந்திரனுடைய வெள்ளிக் கிரணங்களைப் போல வேட்டை மண்டபத்துக்குள்ளும் வந்து சிறிது பிரகாசப்படுத்தியது.

வந்தியத்தேவன் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான். இளவரசி மணிமேகலை தன் இடுப்பில் செருகியிருந்த சிறு கத்தியை எடுத்து அவளைக் கட்டியிருந்த கட்டுக்களை அறுத்துவிட்டதைத் தெரிந்து கொண்டான்.

மணிமேகலை இடும்பன்காரியிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்த சிறிய விளக்கு, வேட்டை மண்டபத்தின் ஒரு மூலையில் 'முணுக்கு' 'முணுக்கு' என்று எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சம் மணிமேகலையின் மீது படவே இல்லை. மேலும் சதிகாரர்கள் வந்தியத்தேவனையே கவனித்துக் கொண்டிருந்தபடியால், கடம்பூர் இளவரசி மணிமேகலையைக் கவனிக்கவும் இல்லை. மணிமேகலை கட்டை அவிழ்த்து விடுதலை அடைந்து விட்டதை வந்தியத்தேவன் கவனித்துக் கொண்டான். உடனே வாயைக் குவித்துக் கொண்டு ஆந்தை கத்துவது போல் கத்தினான்.

முதலில் சதிகாரர்கள் மூவரும் சிறிது பிரமித்து நின்றார்கள். திறந்த துவாரத்தின் வழியாக உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ரவிதாஸனும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

"ஆகா? உன் வேலையா?" என்று சொல்லிக் கொண்டு வந்தியத்தேவனை நோக்கி விரைந்து வந்தான். அவன் யானைத் தந்தங்களிலிருந்து கையை எடுத்ததும், சுவரிலிருந்து துவாரம் மறைந்தது. மறுபடியும் வேட்டை மண்டபத்தில் இருள் சூழ்ந்தது. சதிகாரர்கள் மூவரும் கையில் வேல்களுடன் வந்தியத்தேவனை நோக்கி விரைந்து ஓடி வந்தார்கள்.

அவர்களில் ஒருவனை முறுக்கிய நீண்ட கொம்புகளை உடைய மான் தாக்கியது, இன்னொருவன் மீது பிரம்மாண்டமான கரடி ஒன்று விழுந்து அவனைக் கீழே தள்ளியது. மற்றொருவன் மீது திறந்த வாயையும் பயங்கரமான பற்களையும் உடைய முதலை பாய்ந்தது. ரவிதாஸன் தலைமீது ஒரு பெரிய ராட்சத வௌவால் தடாலென்று விழுந்தது.

இவ்விதம் திடீரென்று ஏற்பட்ட தாக்குதல்களினால் அவர்கள் ஒரு நிமிடம் செயலற்று நின்றபோது, மணிமேகலை வந்தியத்தேவனை அணுகி அவனுடைய கட்டுக்களை அறுத்து விட்டாள். வந்தியத்தேவன் இதுகாறும் தன்னைப் பிடித்துக் கொண்டிருந்த வாலில்லாக் குரங்கைத் தூக்கி அந்தச் சதிகாரர்கள் மேல் வீசி எறிந்தான். நால்வரும் தங்கள் மீது விழுந்த செத்த விலங்குகளின் உடல்களைத் தள்ளிவிட்டு மெதுவாகச் சமாளித்து எழுந்தார்கள். இதற்குள் வந்தியத்தேவன் கையில் வேலொன்றை எடுத்துக் கொண்டிருந்தான். தாக்க வருகிறவர்களைத் திருப்பித் தாக்குவதற்குத் தயாராயிருந்தான்.

அச்சமயம் நந்தினி தேவியின் படுக்கை அறைக்கதவு நன்றாகத் திறந்தது. வேட்டை மண்டபத்துக்குள் வெளிச்சம் புகுந்து பிரகாசப்படுத்தியது.

மறுகணம் நந்தினி தேவியும் வேட்டை மண்டபத்துக்குள்ளே பிரவேசித்தாள். "மந்திரவாதி! இது என்ன மூடத்தனம்? இங்கே என்ன தடபுடல் செய்கிறீர்கள்?" என்று கேட்டுக்கொண்டே மேலே வந்தாள்.








Code:
[quote]
Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 36. பாண்டிமாதேவி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. நந்தினி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. இரு சிறைகள்
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: