BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  60. அமுதனின் கவலை Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 60. அமுதனின் கவலை

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  60. அமுதனின் கவலை Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 60. அமுதனின் கவலை   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  60. அமுதனின் கவலை Icon_minitimeSat Jun 11, 2011 3:44 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

60. அமுதனின் கவலை




நந்தவனத்து நடுவில் இருந்த குடிலில் சேந்தன் அமுதன் நோய்ப்பட்டுப் படுத்திருந்தான். பூங்குழலி அவனுக்கு அன்புடன் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். வாணி அம்மை பாகம் செய்து கொடுத்த கஞ்சியைக் கொண்டு வந்து அவனை அருந்தும்படிச் செய்தாள்.

சற்று முன்னாலேதான் சுந்தர சோழ ஆதுரசாலையிலிருந்து வைத்தியர் வந்து சேந்தன் அமுதனைப் பார்த்துவிட்டுப் போயிருந்தார். போகும்போது அவரிடம் பூங்குழலி தனியாக விசாரித்தாள்.

"அமுதனுக்கு எப்படியிருக்கிறது, பிழைத்து எழுந்து விடுவானா?" என்று கேட்டாள்.

"முன்னமே ஒரு தடவை காய்ச்சல் வந்து பலவீனமாயிருந்தான். அத்துடன் நீண்ட பிரயாணம் போய்த் திரும்பிக் குதிரை மேலிருந்தும் கீழே விழுந்திருக்கிறான். அதனாலெல்லாம் பாதகமில்லை. ஆனால் அவன் மனத்தில் ஏதோ கவலை வைத்துக் கொண்டிருக்கிறான். அதனாலேதான் உடம்பு குணமடைவது தடைப்படுகிறது!" என்றார் வைத்தியர்.

இதை உள்ளத்தில் வைத்துக்கொண்டு பூங்குழலி, "அமுதா, உன் மனத்தில் என்ன கவலை? ஏன் உற்சாகமே இல்லாமலிருக்கிறாய்? உன் மனக் கவலையினால்தான் உன் உடம்பு குணப்படுவது தாமதமாகிறது என்று வைத்தியர் சொல்கிறாரே?" என்றாள்.

அமுதன் "பூங்குழலி! உண்மையைச் சொல்லட்டுமா? அல்லது மனத்தில் ஒன்று வைத்துக்கொண்டு, வெளியில் ஒன்று பேசட்டுமா?" என்றான்.

பூங்குழலி! "நான் அப்படி உள்ளொன்றும் புறமொன்றுமாகப் பேசுகிறவள் என்று சுட்டிக்காட்டுகிறாயா?" என்று கேட்டாள்.

"பூங்குழலி! உன்னுடன் பேசுவதே அபாயகரமாயிருக்கிறது. நீ பேசாமலிருந்தால் உன் முகத்தைப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பேன்."

"என் அத்தைமார்களைப் போல் நானும் ஊமையாய்ப் பிறந்திருந்தால் உனக்குச் சந்தோஷமாயிருக்கும் அல்லவா?"

"ஒரு நாளும் இல்லை; நீ பாடும்போது நான் அடையும் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. வெறும் பேச்சிலே என்ன இருக்கிறது? ஒரு தேவாரப்பண் பாடு!"

"அதெல்லாம் முடியாது; உன் மனத்தில் என்ன கவலை என்பதைச் சொன்னால்தான் பாடுவேன்."

"அப்படியானால் சொல்கிறேன் கேள்! என்னுடைய கவலையெல்லாம் என் உடம்பு சீக்கிரமாகக் குணமாகிவிடப் போகிறதே என்றுதான்."

"இது என்ன இப்படிச் சொல்கிறாய்? உனக்கு உடம்பு குணமாக வேண்டும் என்று நான் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருக்கிறேனே? நீ குணமாகிவிடுமே என கவலைப்படுவது ஏன்?"

"என் உடம்பு குணமாகிவிட்டால் நீ என்னை விட்டு விட்டுப் போய் விடுவாய் அல்லவா? அதை எண்ணித்தான் கவலைப்படுகிறேன், பூங்குழலி!"

பூங்குழலியின் முகம் காலைப் பனித்துளிகளுடன் ஒளிர்ந்த மலர்ந்த செந்தாமரை போல் விளங்கியது. அவன் இதழ்களில் புன்னகை விரிந்தது. கண்களில் கண்ணீர் துளித்தது.

"அமுதா! உன் அன்பை எண்ணி என் நெஞ்சு உருகுகிறது. உன்னை விட்டுவிட்டுப் போகவும் மனம் வரவில்லை; போகாதிருக்கவும் முடியவில்லை."

"ஆமாம், அலைகடல் உன்னை அழைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் என்ன? நானும் உன்கூட வருகிறேன். அதற்கு உன் சம்மதத்தைத் தெரியப்படுத்து. என் உடம்பும் குணமாகிவிடும்."

"அமுதா! நான் என் மனத்திற்குள் செய்து கொண்டிருக்கும் சபதம் அதற்குத் தடையாயிருக்கிறது."

"அது என்ன சபதம்?"

"புவி ஆளும் மன்னனை மணந்து அவனுடன் சிங்காதனத்தில் அமர வேண்டும் என்பது என் மனோரதம். இது முடியாவிட்டால் கன்னிப் பெண்ணாகவே காலம் கழிக்கச் சபதம் செய்திருக்கிறேன்."

"ஆமாம்; பொன்னியின் செல்வர் உன் மனதில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் பூங்குழலி! அது நடக்கிற காரியமா?"

"நீ தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறாய். பொன்னியின் செல்வரிடம் இச்சோழ நாட்டில் பிறந்தவர்கள் அனைவரும் அன்பு கொண்டிருக்கிறார்கள். ஆடவர்கள், மங்கையர்கள், வயோதிகர்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லாரும் அருள்மொழிவர்மரிடம் நேயம் கொண்டிருக்கிறார்கள். அது போலவே நானும் அவரிடம் அபிமானம் வைத்தேன். அவர் காய்ச்சலுடன் படகில் கிடந்தபோது நீயும் நானும் சேர்ந்துதான் அவருக்குப் பணிவிடை செய்து காப்பாற்றினோம்...."

"அப்படியானால், அவரிடம்...அவரிடம்...வேறு வித எண்ணம் உனக்கு நிச்சயமாக இல்லையா?"

"அமுதா! பொன்னியின் செல்வரை மணக்கப் பிறந்தவள் வேறொருத்தி இருக்கிறாள். அவள் கொடும்பாளூர் இளவரசி வானதி. நான் அவளிடம் ஏதோ விளையாட்டாகப் பேசப்போக அந்தப் பெண், 'நான் சிங்காதனம் ஏறுவதில்லை' என்று சபதம் செய்தாள்...."

"மன்னர் குலத்தில் பிறந்தவள் அவ்வாறு சொல்லிச் சபதம் செய்திருக்கிறாள். நீயோ 'சிங்காதனம் ஏறித்தான் தீருவேன்' என்கிறாய். 'இல்லாவிட்டால் கன்னிப்பெண்ணாகவே காலம் கழிப்பேன்' என்று சொல்லுகிறாய்."

"அமுதா! என் அத்தை, அரசர் குலத்தில் பிறந்தவரை நேசித்தாள். அதனால் அவளுடைய வாழ்க்கை துன்ப மயமாயிற்று. என் அத்தை அடையத் தவறிய பாக்கியத்தை நான் என் வாழ்நாளில் அடைவேன். ஏன் கூடாது?"

"உனக்கு அந்த ஆசை ஏற்பட்டது என்னுடைய பாக்கியக் குறைவினால்தான்!" என்றான் அமுதன்.

"அப்படி ஏன் நீ நிராசையடைய வேண்டும்? அரச குலத்தில் பிறந்தவர்தான் அரசர்களாயிருக்கலாம் என்று விதி ஒன்றும் இல்லை. உன்னைப்போல் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கள் வீர பராக்கிரமச் செயல்களினால் இராஜ்ஜியங்களை ஸ்தாபித்துச் சிங்காதனம் ஏறியிருக்கிறார்கள். நீயும் இன்றைக்கு அத்தகைய சபதம் எடுத்துக்கொள். இந்தப் பெரிய பாரத நாட்டிலோ, கடல் கடந்த அயல் நாடுகளிலோ உன் புஜபல பராக்கிரமத்தினால் ஒரு இராஜ்யத்தை ஸ்தாபிக்கத் தீர்மானம் செய்து கொள். நான் உன்னை விட்டுப் பிரியாமல் உனக்குத் துணையாயிருக்கிறேன்" என்றாள் பூங்குழலி.

"பூங்குழலி! அத்தகைய காரியங்களுக்கு நான் பிறக்கவில்லை. என் மனம் கத்தி எடுத்துப் போர் செய்வதில் ஈடுபடவில்லை. ஒரு சிறு பிராணியை இம்சிக்கவும் நான் விரும்பவில்லை. மணிமகுடமும், சிங்காதனமும் என் உள்ளத்தைக் கவரவில்லை. சிவபெருமானையும், சிவனடியார்களையும் ஏத்திப் பரவிப் பாடிக் கொண்டு காலம் கழிக்க விரும்புகிறேன்! ஆகையால் உனக்கும் எனக்கும் பொருத்தமில்லைதான்! உன்னை நான் மணக்க விரும்புவது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போலத்தான். பூங்குழலி! உன்னை இங்கே தாமதிக்கச் சொல்வதில் பயனில்லை. நீ போய் விடு! என் உடம்பு குணமாவதற்காகக் காத்திராதே!" என்றான் சேந்தன் அமுதன்.

அச்சமயம் அக்குடிலின் வாசலில் காலடிச் சத்தம் கேட்கவே இருவரும் பேச்சை நிறுத்தினார்கள்








Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 60. அமுதனின் கவலை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 23. அமுதனின் அன்னை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 16. "மலையமானின் கவலை"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 55. "பைத்தியக்காரன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: