BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  75. விபரீத விளைவுகள்" Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 75. விபரீத விளைவுகள்"

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  75. விபரீத விளைவுகள்" Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 75. விபரீத விளைவுகள்"   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  75. விபரீத விளைவுகள்" Icon_minitimeTue Jun 14, 2011 3:41 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

75. விபரீத விளைவுகள்"



தஞ்சைபுரி அரண்மனையின் அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்தில் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி தர்ம சிங்காதனத்தில் வீற்றிருந்தார். அரண்மனைப் பெண்டிர்களில் முக்கியமானவர்கள் அவருக்கு இருமருங்கிலும் அமர்ந்திருந்தார்கள். சோழ நாட்டு அமைச்சர்களும், தளபதிகளும், அரசிளங்குமாரர்களும் சக்கரவர்த்தியின் முன்னிலையில் வணக்கமான பாவனையில் நின்று கொண்டிருந்தார்கள். பெண்டிர்களிலே மூத்த எம்பிராட்டியான செம்பியன் மாதேவியும் உடைய பிராட்டி வானமாதேவியும், இளைய பிராட்டி குந்தவையும், கொடும்பாளூர் இளவரசி வானதியும் காணப்பட்டனர். அவர்களுடன் கலந்து நிற்பதற்குத் தயங்கிய பூங்குழலியும் சற்றுத் தூரத்தில் காணப்பட்டாள். ஆடவர்களிலே பெரிய பழுவேட்டரையரும், சின்னப் பழுவேட்டரையரும், முதன்மந்திரி அநிருத்தரும், சேனாதிபதி பெரிய வேளாரும், மிலாடுடையார் மலையமானும், இளவரசர் அருள்மொழிவர்மரும், புனர் ஜன்மம் பெற்ற மதுராந்தகத் தேவரும், பார்த்திபேந்திரப் பல்லவனும் முதன்மந்திரிக்குப் பின்னால் சற்று ஒதுங்கித் திருமலையும் இருந்தனர்.

சக்கரவர்த்தி சபையில் கூடியிருந்தவர்களைக் கண்ணோட்டமாகப் பார்த்துவிட்டு, "அழைத்தவர்கள் எல்லாரும் வந்திருக்கிறார்களா? கடம்பூர் மன்னரைக் காணோமே?" என்றார்.

"சம்புவரையரின் மகன் இப்போதுதான் திரும்பி வந்தான். தந்தையும் மகனும் விரைவில் இங்கு வந்து சேருவார்கள்!" என்றான் பார்த்திபேந்திரன்.

"ஓ! கந்தமாறன் திரும்பி வந்துவிட்டானா? என்ன செய்தி கொண்டு வந்தான்? தப்பி ஓடியவர்களைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டானா?" என்று சுந்தர சோழர் வினாவினார்.

"இல்லை, பிரபு! அவர்களை பிடிக்க முடியவில்லை. ஆனால் வந்தியத்தேவனைக் கொன்று விட்டதாகச் சொல்லுகிறான். இன்னொரு பைத்தியக்காரன் அகப்படவில்லையாம்; தப்பிப் போய் விட்டானாம்!" என்றான் பார்த்திபேந்திரன்.

பெரிய பழுவேட்டரையர் இப்போது ஒரு ஹுங்காரம் செய்தார். அவர் ஏதோ சொல்லப் போகிறார் என்று மற்றவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.

சக்கரவர்த்தி, "நான் செய்த தவறினால் இன்னும் என்னென்ன விளைவுகள் நேருமோ, தெரியவில்லை! முதல்மந்திரி! என் மனத்தில் உள்ள எண்ணங்களை நன்கு அறிந்திருக்கிறீர், எனக்கும் என் குலத்துக்கும் மிகவும் வேண்டியவர்களை இங்கே இப்போது அழைத்திருக்கிறேன். எதற்காக அழைத்தேன் என்பதையும், என் கருத்தையும் நீர்தான் இவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். என்னைக் காட்டிலும் தெளிவாக உம்மால் சொல்ல முடியும் அல்லவா?" என்றார்.

"ஆக்ஞை, சக்கரவர்த்தி!" என்று முதல் அமைச்சர் கூறிவிட்டுச் சபையோரைப் பார்த்துச் சொன்னார்:

"பல காரணங்களினால் சக்கரவர்த்தியின் உள்ளம் புண்பட்டிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அபிமன்யுவையும் அரவானையும் ஒத்த வீராதி வீரனான மூத்த மகனைச் சமீபத்தில் நம் மன்னர் பறி கொடுக்க நேர்ந்தது. இளவரசர் இறந்த காரணமோ இன்னமும் மர்மமாக இருந்து வருகிறது. மூன்று ஆண்டுக் காலமாக அந்த வீரத் திருமகனை நம் அரசர் பார்க்கவில்லை. காஞ்சியில் பொன்மாளிகை கட்டிவிட்டுத் தந்தையை அங்கே வந்து தங்கியிருக்க வேண்டும் என்று கரிகாலர் செய்திக்கு மேல் செய்தி விடுத்தார் ஆயினும் சக்கரவர்த்தி போகவில்லை. அதன் காரணம் நீங்கள் எல்லாரும் அறிந்ததே. இந்தத் தஞ்சைமா நகரில் சக்கரவர்த்தி சின்னப் பழுவேட்டரையரின் பாதுகாப்பில் இருந்து வந்தார். நாடு நகரங்களில் பலவித வதந்திகள் உலாவி வந்தன. அத்தகைய சந்தர்ப்பங்களில் சக்கரவர்த்தி தஞ்சையை விட்டுச் சென்றால், பழுவேட்டரையர்களிடம் அவருக்கு நம்பிக்கை குன்றி விட்டதாக யாரேனும் எண்ணக்கூடும் அல்லவா? அத்தகைய எண்ணத்துக்கு இடம் கொடுக்க சக்கரவர்த்தி விரும்பவில்லை. நம் அரசர் சொல்வதற்கு தயங்கக்கூடிய ஒரு செய்தியை நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். அதற்காக இங்கே கூடியுள்ள மன்னர் குலத் தலைவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். நம் அரசர் சில காலமாக உடல் நோயுற்றுக் கால்களின் சக்தியை இழந்திருந்தார். அதனால் அவர் உள்ளம் நலிவுற்றிருந்தது. ஆனால் அதைக் காட்டிலும் அதிகமாக அவர் உள்ளத்தைப் புண்படுத்திய மன நோய் ஒன்றும் இருந்தது. சோழர் பெருங்குலத்துக்கு உற்ற துணைவர்களாயும், பரம்பரையாக அக்குலத்துடன் உறவு பூண்டவர்களாயும், இந்தப் பெரிய சோழ சாம்ராஜ்யத்தைத் தாங்கும் வைரத் தூண்களாயும் இருந்த நீங்கள் ஒருவரோடொருவர் வேற்றுமைப்பட்டுப் பகைமை பூண்டிருந்தது நம் சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் புண்படுத்தி உடல் நோயையும் வளர்த்து வந்தது. யானை மேல் துஞ்சி வீர சொர்க்கம் அடைந்த இராஜாதித்தரின் தலைமையில் நீங்கள் அனைவரும் ஒருமுகமாகத் தக்கோலப் போர்க்களத்தில் சண்டையிட்டீர்கள். அந்தப் போர்க்களத்தில், இராஜாதித்தர் எதிர்பாராத வீர மரணம் அடைந்தபடியால் சோழ சைன்யம் தோல்வியுற்றது. ஆனால் உங்களுடைய வீரத்தினாலும், உறுதியினாலும் ஒற்றுமையினாலும் அத்தோல்வியையே வெற்றியாக மாற்றினீர்கள். இழந்த தொண்டை மண்டலத்தையும், கங்க மண்டலத்தையும் திரும்பக் கைப்பற்றினீர்கள். சேவூர்ப் போர்க்களத்தில் பாண்டியர்களை முறியடித்துப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி நமது நேர் ஆளுகைக்குள் கொண்டு வந்தீர்கள். ஈழ நாட்டில் மகிந்தனைப் புறங்கண்டு புலிக்கொடியை உயர்த்தினீர்கள். இவ்வளவு அரும் பெரும் காரியங்களை நீங்கள் அனைவரும் ஒருமைப்பட்டுச் சோழ சாம்ராஜ்யத்தின் நலமே உங்கள் நலம் என்று கருதி வந்ததினாலே சாதிக்க முடிந்தது."

"அத்தகைய நன்னிலைமை சில ஆண்டுகளாக மாறிவிட்டது. எக்காரணத்தினாலோ உங்களுக்குள் மன வேற்றுமை ஏற்பட்டு விட்டது. இரண்டு கட்சியாகப் பிரிந்து விட்டீர்கள். இந்தப் பிளவை நீக்க வேண்டும் என்று நம் அரசர் பெருமான் எவ்வளவோ பாடுபட்டார். தமக்குப் பிறகு அரசுரிமை யாருக்கு என்பது பற்றித்தான் உங்களுக்கு வேற்றுமை என்பதை அறிந்தார். நீங்கள் யாரும் அதை நேர்முகமாகச் சக்கரவர்த்தியிடம் சொல்லவில்லை. ஆனாலும் இணையற்ற அறிவாளியான நம் பேரரசர் அதை ஊகித்து அறிந்தார். அரசுரிமை விஷயத்தை உங்கள் எல்லாருடனும் கலந்து மனம் விட்டுப் பேசி சமரசமாகத் தீர்த்து வைக்க விரும்பினார். அவ்விதம் அதைத் தீர்த்து வைத்த பின்னரே காஞ்சிக்குச் செல்வது என்று எண்ணியிருந்தார். சிவஞான கண்டராதித்த பெருமானின் திருக்குமாரருக்கே இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை உரிமையாக்க எண்ணியிருந்தார். இதை ஆதித்த கரிகாலரையும் ஒப்புக்கொள்ளச் செய்யலாம் என்று நம்பியிருந்தார். அதற்காகவே கரிகாலரை இங்கு வரும்படி சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தார். அதற்கிடையில் எதிர்பாராத துயர சம்பவம் நிகழ்ந்து விட்டது. கரிகாலர் கடம்பூர் மன்னரின் மாளிகைக்கு வருகிறார் என்று அறிந்தபோது சக்கரவர்த்தி மனம் பூரித்தார். இதன் மூலம் உங்களுக்குள் ஏற்பட்டிருந்த வேற்றுமை நீங்கிவிடும் என்று எண்ணினார். கரிகாலர் சம்புவரையரின் திருக்குமாரியை மணந்து கொண்டால் முன் போல் நீங்கள் அனைவரும் ஒருமனப்படுவீர்கள் என்றும் இராஜ்ய உரிமை விஷயத்தையும் சுலபமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் எண்ணினார். நானும் அவ்விதமே நினைத்தேன். உங்களில் பலரும் அவ்விதமே எண்ணியிருப்பீர்கள். நம் திருக்கோவலூர் மன்னர் கூட அதனாலேதான் ஆதித்த கரிகாலர் கடம்பூர் செல்வதற்குத் தடை சொல்லவில்லை. ஆனால் நம் எல்லாருடைய ஆசையும் பங்கம் உற்றது. கடம்பூர் அரண்மனையில் இளவரசர் கரிகாலர் அகால மரணம் அடைந்தார்..."

"அது எப்படி நேர்ந்தது என்பதைக் கண்டறிய போகிறோமா, இல்லையா? இதைத் தெரிந்துகொண்டு மேலே நீங்கள் பேசுவது உசிதமாயிருக்கும்" என்றார் திருக்கோவலூர் மலையமான்.

"ஆமாம்; அதைத் தெரிந்து கொள்ளாமல் மேலே எந்த யோசனையும் செய்வது சாத்தியமில்லை!" என்றார் சேனாதிபதி.

"வீரப் பெருமக்களே! நடந்தது நடந்துவிட்டது. போனதைப் பற்றிக் கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்று சக்கரவர்த்தி கருதுகிறார்!" என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.

"அது எப்படி முறையாகும்? சோழ குலத்தின் நீதி பரிபாலனம் உலகப் பிரசித்தியானது. இந்த ராஜ்யத்தில் ஒரு திக்கற்ற அனாதை உயிரிழந்தாலும், அது எப்படி நேர்ந்தது என்று விசாரிக்கப்படுகிறது. அதற்கு யாராவது காரணம் என்று ஏற்பட்டபின் தக்க தண்டனை விதிக்கப்படுகிறது. அப்படியிருக்க பட்டத்து இளவரசர் என்று முடிசூடிய இளங்கோவின் அகால மரணத்தை எவ்வாறு விசாரிக்காமல் விடுவது?" என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.

சுந்தர சோழர் பெருமூச்சு விட்டு, "கொடும்பாளூர் மாமா! கேளுங்கள்! என் அருமை மகன் அகால மரணம் அடைந்ததில் என்னைவிடத் துயரம் வேறு யாருக்காவது இருக்க முடியுமா? நானே விசாரணை வேண்டாம் என்கிறேன். ஏன்? இங்குள்ள யாரும் அதற்குப் பொறுப்பாளி அல்ல என்று நிச்சயமாக அறிந்துள்ளேன். நான் செய்த பாவத்தின் பயனாக என் மகனைப் பறி கொடுத்தேன். அதற்குப் பிராயச்சித்தம் என்ன உண்டோ சொல்லுங்கள்! செய்து விடுகிறேன் வேறு காரணம் தேட வேண்டாம்!" என்றார்.

"பிரபு! தாங்கள் இப்படிச் சொல்லுவதினால் குற்றத்துக்குப் பொறுப்பாளியான யாரையோ காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று ஏற்படும். நாட்டு மக்கள் ஏற்கெனவே இளவரசரது மரணத்தின் காரணம் பற்றிப் பலவாறு பேசிக் கொள்கிறார்கள். உண்மையைக் கண்டுபிடித்து வெட்ட வெளிச்சமாக்கி விடுவதுதான் நல்லது. குற்றவாளி யாராயிருந்தாலும் உரிய தண்டனைக்கு ஆளாக வேண்டியதுதான்!" என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

"நூற்றில் ஒரு வார்த்தை! அதுதான் நேர்மையான இராஜரீக முறை. இந்தப் பெருங்குற்றத்தை விசாரித்துத் தண்டிக்காவிட்டால், நாட்டு மக்களுக்கு நீதி பரிபாலனத்திலேயே நம்பிக்கை குன்றிப்போய் விடும்!" என்றான் பார்த்திபேந்திரன்.

"பெரியோர்களே! இதைப்பற்றி ஏன் இவ்வளவு யோசனையும், வாதப்பிரதிவாதமும்? இந்தச் சிறுவன் கூறுவது அதிகப் பிரசங்கமாக இருந்தால் மன்னித்து அருளுங்கள். குற்றவாளி தண்டிக்கப்பட்டு விட்டான்! இளவரசர் கரிகாலனைக் கொன்றவனும், என் சகோதரியின் வாழ்க்கையைப் பாழாக்கி அவளைப் பைத்தியமாக அடித்தவனுமான பாதகன் வந்தியத்தேவனை நானே என் கை வேலால் கொன்றுவிட்டுத் திரும்பினேன். இன்னும் என்னத்திற்கு விசாரணை?" என்றான் கந்தமாறன்.

முதன்மந்திரி முதலில் பேசிக் கொண்டிருந்த போது கந்தமாறன் அங்கே வந்து விட்டான். அவன் வந்திருந்ததை அவன் குரலைக் கேட்ட பிறகுதான் மற்றவர்கள் கவனித்தார்கள்.

அவர்களில் பெரிய பழுவேட்டரையர் மெல்லிய குரலில், "மூடன்! கடம்பூர் சம்புவரையருக்கு இப்படிப்பட்ட பிள்ளை வந்து பிறந்தானே" என்று முணுமுணுத்தார்.

முதன்மந்திரி அநிருத்தர், "கந்தமாறா! வந்தியத்தேவனை நீ வேல் எறிந்து கொன்றது உண்மைதானா? அவனை நீ பார்த்தாயா? இரவு நேரத்தில் அல்லவா அவனை நீ துரத்திச் சென்றாய்?" என்றார்.

"முதன்மந்திரி! உங்களுக்கு என் பேரில் எப்போதும் நம்பிக்கை இல்லையென்பதை அறிவேன். இரவாக இருந்ததினால் ஆளைத் தெரியாமல் போகுமா?"

"அவனும் வீரனாயிற்றே! உன்னுடன் சண்டை போடவில்லையா?"

"ஆமாம், என்னுடைய வீரத்திலும் தங்களுக்கு நம்பிக்கை கிடையாதுதான். ஆகையால் சக்கரவர்த்தியிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன். ஓடியவர்கள் இரண்டு பேர். ஒருவன் சில வருஷங்களாக நம் பாதாளச் சிறையிலிருந்த பைத்தியக்காரன். அவன் என்னைத் தடுக்க யத்தனித்தபோது இன்னொருவன் ஆற்றின் அக்கரையை நெருங்கிக் கொண்டிருந்தான். வேல் எறிந்து அவனைக் கொன்றேன். அவன் வாணர் குலத்து வந்தியத்தேவனாகவே இருக்கவேண்டும்."

"இறந்து போனவனுடைய உடலை நீ உன்னுடன் எடுத்து வரவில்லையா?"

"நீர் இப்படிச் சந்தேகிப்பீர் என்று தெரிந்திருந்தால் வடவாற்று வெள்ளத்தில் இன்னும் கொஞ்ச தூரம் தேடிப் போயிருப்பேன். ஆனால் இந்த மந்திராலோசனை சபைக்கு வந்திருக்க முடியாது!" என்றான் கந்தமாறன்.

"ஆமாம், நீ வராமலிருந்தால் பெரு நஷ்டமாயிருக்கும்!" என்றார் தளபதி சின்னப் பழுவேட்டரையர்.

"தம்பி! வந்தியத்தேவனைத் தேடிப் பிடிப்பதில் உனக்கு என்ன அவ்வளவு சிரத்தை?" என்று பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரி கேட்டார்.

"இதைக் கேட்கவும் வேண்டுமா? என்னுடைய வீட்டில் அந்தத் துயர சம்பவம் நிகழ்ந்தது. உண்மைக் குற்றவாளி அகப்படாவிட்டால், என் பேரிலும், என் தந்தையின் பேரிலும் நீங்கள் சந்தேகப்பட மாட்டீர்களா?"

சுந்தர சோழர் தலையிட்டு, "பிள்ளாய்! கந்தமாறா! அப்படியெல்லாம் வேறு யார் சந்தேகப்பட்டாலும் நான் சந்தேகப்பட மாட்டேன். உன் தந்தைக்கு என்னிடமுள்ள பக்தி விசுவாசத்தை நான் அறியேனா? போகட்டும்! பெரிய சம்புவரையர் எங்கே?" என்றார்.

"சக்கரவர்த்தி! எங்கள் குடும்பத்தின் அவமானத்தை நானே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் வந்தியத்தேவனைக் கொன்றுவிட்டுத் திரும்பியதாக என் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதை என் தங்கை மணிமேகலை கேட்டுக் கொண்டிருந்தாள். நான் கூறியதைக் கேட்டதும் அவள் என்னையே கத்தியால் குத்திக் கொல்ல வந்துவிட்டாள். அவளைச் சாந்தப்படுத்தி, அவளுடைய வெறியைத் தணிக்க என் தந்தை முயன்று கொண்டிருக்கிறார். விரைவில் வந்து விடுவார். இந்த மந்திராலோசனை சபையில் என்ன முடிவாகிறதோ, அதைத் தாமும் ஏற்றுக் கொள்வதாக என்னிடம் சொல்லி அனுப்பினார்!" என்றான் கந்தமாறன்.

"அப்பனே! உன் சகோதரி முன்னமேயே 'இளவரசரை நான் தான் கொன்றேன்!' என்று பித்துப்பிடித்தவள் போலச் சொல்லிக் கொண்டிருந்தாள் அல்லவா?" என்றார் கிழவர் மலையமான்.

"ஆம், ஆம்! வந்தியத்தேவன் செய்த குற்றத்தை மறைத்து அவனைத் தப்புவிப்பதற்காகவே அவ்வாறு அவள் சொன்னாள். அப்போது அவள் முழுப் பைத்தியமாகியிருக்கவில்லை. இப்போது பைத்தியம் முற்றிப் போயிருக்கிறது. எங்கள் குலத்தில் துரதிர்ஷ்டம்!" என்றான் கந்தமாறன்.

"இளஞ் சம்புவரையரே! வந்தியத்தேவர் தான் இளவரசர் கரிகாலரைக் கொன்றதாக அவ்வளவு தீர்மானமாய்ச் சொல்கிறீர்? அது எப்படி? நீரே உம் கண்ணால் பார்த்தீரா? அல்லது பார்த்தவர்கள் யாரேனும் சொன்னார்களா?" என்று முதன்மந்திரி கேட்டார்.

"அமைச்சர் ஐயா! கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? இளவரசர் இறந்து கிடந்த இடத்தில் அந்த வாணர் குல வீரன்தான் இருந்தான். அவன் முகத்தைப் பார்த்தாலே குற்றவாளி என்று எழுதி ஒட்டியிருந்தது போல் தெரிந்தது. அதுவோ பழுவூர் இளைய ராணியின் அந்தப்புரம். அங்கே இவன் வேறு எதற்காகப் போனான்? குற்றவாளியில்லாவிட்டால், பாதாளச் சிறையிலிருந்து ஏன் தப்பித்து ஓடியிருக்க வேண்டும்?" என்றான் கந்தமாறன்.

"பாதாளச் சிறையிலிருந்து தப்பி ஓடியவனைப் பிடித்துக் கொண்டு வந்து ஒப்புவிக்கும் பொறுப்பை முதன்மந்திரி ஏற்றுக் கொண்டார். அதை இந்தச் சமயத்தில் ஞாபகப்படுத்துகிறேன்" என்றான் பார்த்திபேந்திரன்.

"பல்லவர் குலக் கோமகனே! நான் அவ்வாறு ஏற்றுக் கொண்டது உண்மைதான். ஆனால் இளம் சம்புவரையர் இவ்விதம் தாமே நீதிபதியாகி விசாரித்து முடிவு செய்து தண்டனையையும் நிறைவேற்றி விடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வந்தியத்தேவரும் பழமையான வாணர் குலத்தில் தோன்றியவர். அவருடைய மூதாதையர் ஒரு சமயம் பெரிய இராஜ்யத்தையே ஆண்டார்கள். சோழர் குலத்துக்குப் பெண் கொடுத்து உறவு பூண்டார்கள். குறுநில மன்னர் குலத்தில் வந்தவர்கள் மீது குற்றம் ஏற்பட்டால் சக்கரவர்த்தியே தர்மாசனத்தில் வீற்றிருந்து விசாரித்து முடிவு செய்வதுதான் மரபு!" என்றார் முதன்மந்திரி அநிருத்தப்பிரம்மராயர்.

"ஐயா! சிறையிலிருந்து தப்பி ஓடியவனை உயிருள்ளவனாகப் பிடித்து வரலாம் அல்லது உயிரற்றவனாகவும் பிடித்து வரலாம் என்பதும் மரபுதான்!" என்றான் பல்லவர் குல வீரன் பார்த்திபேந்திரன்.

"வந்தியத்தேவனை உயிரற்றவனாகவும் இளஞ் சம்புவரையர் கொண்டுவரவில்லையே? வடவாற்று வெள்ளத்தில் விட்டு விட்டல்லவா வந்துவிட்டார்?" என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.

அச்சமயத்தில் பெரிய சம்புவரையர் அந்த மந்திராலோசனை மண்டபத்தில் பிரவேசிக்கவே எல்லாருடைய கண்களும் அவர்பால் திரும்பின. அவர் முகத்தில் குடிகொண்டிருந்த வேதனையை அனைவரும் கவனித்தார்கள்.

கந்தமாறன் அவர் அருகில் சென்று மெல்லிய குரலில் "மணிமேகலை எப்படி இருக்கிறாள்?" என்று கேட்டான்.

சம்புவரையர் "அப்படியேதான் இருக்கிறாள். உன் அன்னையை அவளுக்குக் காவல் வைத்துவிட்டு வந்தேன்!" என்று உரத்த குரலில், சற்றுக் கடுமையாகவே கூறினார்.

சக்கரவர்த்தி சம்புவரையரைப் பார்த்து, "ஐயா! தாங்கள் தங்கள் செல்வக்குமாரியின் அருகில் இருப்பது அவசியமானால் அவ்வாறே செய்யலாம். நம்முடைய ஆலோசனையை நாளை வைத்துக் கொள்ளலாம்" என்றார்.

"இல்லை, பிரபு! அவள் அருகில் நான் இருந்து பயன் ஒன்றுமில்லை. என் குமாரன் கை வேலினால் உயிர் துறந்த வாணர் குல வீரன் வந்தியத்தேவன் மீண்டும் உயிர் பெற்று வந்தால் ஒருவேளை பயன்படலாம்!" என்றார் சம்புவரையர்.

அவர் பேச்சில் தொனித்த வேதனை நிறைந்த துயரமும் மனக் கசப்பும் அந்தச் சபையில் சிறிது நேரம் மௌனம் குடிகொள்ளும்படி செய்தது.

முதன்மந்திரி அநிருத்தர், "ஐயா! தங்கள் மாளிகையில் நடந்த விபரீத சம்பவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இளவரசர் தங்கள் மாளிகையில் அகால மரணம் அடைய நேர்ந்ததினால் தங்கள் உள்ளம் எவ்வளவு புண்பட்டிருக்கிறது என்பதை நாங்கள் எல்லாரும் உணர்ந்திருக்கிறோம். அதற்குத் தங்களை எந்த விதத்திலும் பொறுப்பாக்கச் சக்கரவர்த்தி விரும்பவில்லை. ஆனாலும் நாடு நகரங்களில் நாளாவிதமான வதந்திகள் பரவாமலிருக்கும் பொருட்டு இளவரசரின் மரணம் எவ்விதம் நேர்ந்தது என்று நிச்சயமாகத் தெரிந்தால் நல்லது அல்லவா? இந்தச் சபையில் கூடியுள்ளவர்கள் அவ்வாறு கருதுகிறார்கள். அதைப்பற்றித் தாங்கள் ஏதாவது தெரியப்படுத்துவதற்கு இருக்கிறதா? வாணர் குலத்து வந்தியத்தேவனால்தான் இளவரசரின் மரணம் நேர்ந்தது என்று இளஞ் சம்புவரையர் சாதிக்கிறார் தங்களுடைய கருத்து என்ன?" என்று கேட்டார்.

சம்புவரையர் சிறிதுநேரம் திகைத்து நின்றார். பின்னர் நாலாபுறமும் பார்த்தார். அவருடைய பார்வை கந்தமாறன் பேரில் விழுந்ததும், "ஆம், ஆம்! இந்த மூடன் அவ்வாறு தான் அன்றைக்கும் சொன்னான் அதை நான் நம்பவில்லை; இன்றும் நம்பவில்லை. இவன் வார்த்தையைக் கேட்டு இளவரசர் கரிகாலரைக் கடம்பூர் மாளிகைக்கு வரும்படி அழைத்தேன். அதனால் இத்தனை விபரீத விளைவுகள் நேர்ந்துவிட்டன. எனக்கும் என் குலத்துக்கும் என்றும் அழியாத அபகீர்த்தி ஏற்பட்டு விட்டது?" என்றார்.

கிழவர் மலையமான் இரங்கிய குரலில், "சம்புவரையரே! பதற வேண்டாம்! நடந்தது நடந்து விட்டது! நல்ல எண்ணத்துடனே தான் தாங்கள் என் பேரப் பிள்ளையைத் தங்கள் மாளிகைக்கு அழைத்தீர்கள். கரிகாலனுடைய மரணத்துக்குத் தங்களைப் பொறுப்பாக்க இங்கே யாரும் எண்ணவில்லை. ஆகையினால்தான் உண்மையை அறிய விரும்புகிறோம். அதற்குத் தாங்கள் உதவி செய்தால் நலமாயிருக்கலாம்!" என்றார்.

"நான் என்ன உதவி செய்ய முடியும்? என் மகன் ஒன்று சொல்லுகிறான், அதற்கு நேர்மாறாக என் மகள் இன்னொன்று சொல்லுகிறாள். இருவர் பேச்சையும் என்னால் நம்பமுடியவில்லை. எனக்கும் உண்மை தெரியவில்லை. கண்களைக் கட்டிக் காட்டிலே விட்டதுபோல் இருக்கிறது. உண்மையில் நடந்ததை அறிவதற்கு என்னைக் காட்டிலும் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர் உதவி செய்யக்கூடும் அவரைக் கேளுங்கள். அவர்தான் எல்லாவற்றுக்கும் மூலகாரணம். அவர்தான் முதன் முதலில் மதுராந்தகத் தேவரை ரகசியமாகக் கடம்பூருக்கு அழைத்து வந்தார். என் மகளை அவருக்கு மணம் செய்து கொடுக்கும்படியும் சொன்னார். அதிலிருந்து என் குடும்பத்துக்குச் சனியன் பிடித்தது. அந்த மதுராந்தகத் தேவரே இப்போது மாயமாய் மறைந்துவிட்டதாக அறிகிறேன். பின்னர், பெரிய பழுவேட்டரையர் தமது இளையராணியை அழைத்துக் கொண்டு வந்தார். காஞ்சியிலிருந்து இளவரசரையும் வரப் பண்ணினார். இரண்டு பேரையும் என் மாளிகையில் விட்டு விட்டுப் போய்விட்டார். ஏன் போனார் என்று கேளுங்கள். அவருடைய இளையராணி இப்போது எங்கே போனார் என்று கேளுங்கள்...!"

இவ்விதம் சம்புவரையர் வெறி கொண்டவர் போல் எதையெல்லாமோ பேசிக் கொண்டே போனார்.

சக்கரவர்த்தி குறுக்கிட்டு, "போதும்! போதும்! நிறுத்துங்கள்! இதனாலேதான் நடந்துவிட்ட காரியத்தைப் பற்றி விசாரணை ஒன்றும் வேண்டாம் என்று நான் சொன்னேன் நீங்கள் கேட்கவில்லை. ஏற்கனவே உங்களுக்குள்ளே இருக்கும் வேற்றுமை போதாதா? புதிய பூசல்கள் வேறு வேண்டுமா? சம்புவரையரே! உங்கள் மாளிகையில் நடந்ததற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல. அதனாலேதான் உங்களை உடனே பாதாளச் சிறையிலிருந்து விடுவிக்கச் சொன்னேன். என் வீரப் புதல்வன் அகால மரணம் அடைந்ததற்கு என்னுடைய பழைய பாவங்கள்தாம் காரணம். யார் பேரிலும் குற்றம் இல்லை. நீங்கள் அதைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம். பெரிய பழுவேட்டரையரும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை!" என்றார்.

அப்போது பெரிய பழுவேட்டரையர் சிம்ம கர்ஜனையைப் போல் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பெரும் குரலில் பேசினார்: "சோழர் குலக் கோமானே! கருணை கூர்ந்து மன்னிக்கவேண்டும். நான் பேசாமலிருக்கலாகாது! என் மனத்தில் உள்ளதைக் கூறியே ஆகவேண்டும். உண்மையை நான் அறிந்தபடி சொல்லியே ஆகவேண்டும். ஆம், பெருமானே! உண்மையை எதற்காகச் சொல்லவேண்டும் என்றும், சொல்லாமலே என் பிரதிக்ஞையை நிறைவேற்றி விடலாம் என்றும் எண்ணியதுண்டு. சோழர் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆபத்து வருங்காலத்தில் காப்பாற்ற முடியாவிட்டால் என் தலையை நானே வெட்டிக்கொண்டு உயிர் விடுவேன் என பிரதிக்ஞை செய்திருந்தேன். ஆதித்த கரிகாலரைக் காப்பாற்ற என்னால் முடியவில்லை. ஆகையால் என் பிரதிக்ஞையை நிறைவேற்றியே தீரவேண்டும். அதற்கு முன்னால் எனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லிவிட விரும்புகிறேன். இல்லாவிட்டால் வீணான பலப் பல சந்தேகங்கள் ஏற்பட்டு வீண் பழிகள் சுமத்தப்பட ஏதுவாகும்!"

இவ்வாறு பெரிய பழுவேட்டரையர் கூறி நிறுத்தியபோது அந்தச் சபையில் பரிபூரண மௌனம் குடிகொண்டிருந்தது. எல்லாருடைய உள்ளமும் ஒரு கணம் கனிந்து உருகி விட்டது.

சக்கரவர்த்தி தழுதழுத்த குரலில், "மாமா! சற்று யோசியுங்கள்! எதற்காகத் தாங்கள் நடந்து போன காரியங்களைப் பற்றிப் பேச வேண்டும்? இறந்தவர்களின் உயிர் திரும்பி வரப்போவதில்லை. தாங்கள் மனமறிந்து சோழ குலத்துக்கு எந்தவிதத் துரோகமும் செய்திருக்க மாட்டீர்கள்! ஆகையால், நடந்து போனதை மறந்து விட்டு இனி நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசுவோம்!" என்றார்.

"இல்லை ஐயா! நடந்து விட்டதைப் பற்றி நான் பேசியே ஆகவேண்டும். சோழர் குலத்துக்கு நான் எவ்வளவு பெரிய துரோகம் செய்வதற்கிருந்தேன் என்று கூறியே தீரவேண்டும். தங்களுக்கும் எனக்கும் குலதெய்வமான துர்க்கா தேவிதான் அவ்விதம் நேராமல் தடுத்தாள். அந்த அன்னை பரமேசுவரிக்கு என் காணிக்கையைச் செலுத்தியே தீரவேண்டும். கருணை கூர்ந்து நான் சொல்லப் போவதைச் செவிகொடுத்துக் கேளுங்கள்!" என்றார் பெரிய பழுவேட்டரையர்.

அவர் பேசுவதைத் தடை செய்ய முடியாது என்று கண்ட சக்கரவர்த்தியும் சும்மா இருந்தார்.

பின்னர், பெரிய பழுவேட்டரையர் தாம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சாலையோரத்தில் நந்தினியைச் சந்தித்து அவள் பேரில் மோகம் கொண்டது முதல் நடந்ததையெல்லாம் ஒன்றையும் மறைக்காமல் எடுத்துச் சொன்னார். தம் சகோதரர் சின்னப் பழுவேட்டரையர் அடிக்கடி எச்சரிக்கை செய்தும் தாம் பொருட்படுத்தாததைக் கூறினார். நந்தினியின் தூண்டுதலினால் மதுராந்தகத்தேவருக்குச் சோழ சிங்காதனத்தை உரிமையாக்க எண்ணியதையும் அதற்காக மற்ற சிற்றரசர்களுடன் சேர்ந்து சதி செய்ததையும் கூறினார். நந்தினியின் மூடுபல்லக்கில் மதுராந்தகனை அழைத்துப் போனதைப் பற்றியும் சம்புவரையர் மாளிகையில் நள்ளிரவில் நடந்த கூட்டத்தைப் பற்றியும் கூறினார். முதன் முதலில், வந்தியத்தேவன் காரணமாகவே நந்தினியின் பேரில் தமக்குச் சந்தேகம் உதித்தது என்றும், அதிலிருந்து பாண்டிய நாட்டுச் சதிகாரர்களைப் பற்றி யோசனை தோன்றியது என்றும் தெரிவித்தார். ஆனாலும் அவ்வப்போது நந்தினியின் மோகமாகிய மாயை தம் அறிவை மறைத்து வந்தது என்று துயரத்தோடு எடுத்துச் சொன்னார். கடைசியாக, கொள்ளிடத்து உடைப்பு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதனால் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களின் திட்டம் இன்னதென்று அறிந்து கொண்டதையும், விரைந்து திரும்பிக் கடம்பூர் சென்றதையும் கூறினார். வழியில் காளாமுக சைவரைப் போல வேஷம் பூண்டதையும், இடும்பன்காரியின் உதவியினால் இரகசிய வழியில் சென்று அந்தப்புரத்தை அடைந்ததையும் யாழ்க் களஞ்சியத்தில் ஒளிந்திருந்து நந்தினிக்கும், இளவரசருக்கும் நடந்த சம்பாஷணையை ஒட்டுக் கேட்கும் ஆர்வத்தினால் ஒரு நிமிடம் தாமதித்ததையும், அதற்குள் இளவரசர் மாண்டு விழுந்ததையும் தெரிவித்தார். அவரைத் தாங்குவதற்காகத் தாம் பாய்ந்து சென்றபோது விளக்கு அணைந்ததையும், தம்மைப் பலர் சூழ்ந்து தாக்கியதையும், தாம் மூர்ச்சையுற்றதையும், பச்சை மலைக் குகையில் தமக்கு பிரக்ஞை வந்ததையும் பின்னர் திரும்பி வந்ததையும் விவரித்தார்.

"சக்கரவர்த்தி! இவ்விதம் சோழர் குலத்துக்கு நான் பெருந்துரோகம் செய்தவனாவேன். பாண்டிய நாட்டுச் சதிகாரர்களுக்கு என்னுடைய அரண்மனையிலேயே இடம் கொடுத்தேன். நம்முடைய பொக்கிஷத்திலிருந்து அவர்கள் சதிச் செயலுக்கு வேண்டிய பொருள் கொண்டு போக அனுமதித்தேன். தங்களையும், தங்கள் புதல்வர்கள் இருவரையும் ஒரே சமயத்தில் கொன்று விடுவதற்கு அந்தச் சதிகாரர்கள் திட்டமிட்டார்கள். தங்களை செவிடும் ஊமையுமான ஒரு தெய்வப் பெண்மணி தன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றினாள். பொன்னியின் செல்வரைக் கேவலம் அறிவற்ற மிருகமாகிய ஒரு யானை காப்பாற்றியது. நான் ஆதித்த கரிகாலரைக் காக்க முயன்று தோல்வியுற்றேன். அவருடைய அகால மரணத்துக்கு நானே ஆதியிலும், நடுவிலும் முடிவிலும் காரணமானேன். ஐயா! துர்க்கா பரமேசுவரியின் சந்நிதியில் நான் எடுத்துக்கொண்ட பிரதிக்ஞையை இதோ நிறைவேற்றுவேன்!" என்று கூறிவிட்டுத் தம் நீண்ட கரத்தில் பிடித்திருந்த வாளை வீசினார். அவருடைய நோக்கத்தை அறிந்து கொண்ட அனைவரும் திடுக்கிட்டுப் பிரமித்து நின்றார்கள். சிறிது சிறிதாக அவர் அருகில் வந்திருந்த பொன்னியின் செல்வர் மட்டும் சட்டென்று பாய்ந்து பெரிய பழுவேட்டரையரின் வாள் ஓங்கிய கரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.

"ஐயா! பொறுங்கள்! வழிவழியாகச் சோழர் குலத்து மன்னர்களின் முடிசூட்டு விழாவின் போது பழுவேட்டரையர்கள் தான் கிரீடத்தை எடுத்துத் தலையில் வைப்பது வழக்கம். என் பட்டாபிஷேகத்தின் போதும் தங்கள் ஆகிவந்த கரத்தினால் தான் முடிசூட்ட வேண்டும். அதற்குப் பிறகு தங்கள் விருப்பம் போல் செய்துகொள்ளலாம் அதுவரையில் பொறுத்திருங்கள்!" என்றார்.

இந்த வார்த்தைகள் சக்கரவர்த்தியையும், மற்றக் குறுநில மன்னர்களையும் வியப்புக் கடலில் ஆழ்த்தின என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா?










Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 75. விபரீத விளைவுகள்"
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. நந்தினி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. இரு சிறைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: