BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  84. பட்டாபிஷேகப் பரிசு Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 84. பட்டாபிஷேகப் பரிசு

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  84. பட்டாபிஷேகப் பரிசு Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 84. பட்டாபிஷேகப் பரிசு   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  84. பட்டாபிஷேகப் பரிசு Icon_minitimeSat Jun 18, 2011 3:59 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

84. பட்டாபிஷேகப் பரிசு




சீனத்து வர்த்தகர்கள் இருவரும் தலையில் பெரிய பெரிய தலைப்பாகைகளுடனும் முகத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த தாடி மீசைகளுடனும் காட்சி அளித்தார்கள். அரண்மனை மேன்மாடத்தில் அச்சமயம் எரிந்து கொண்டிருந்த மங்கலான தீபத்தின் ஒளியில் அவர்களுடைய முகத் தோற்றங்கள் தெளிவாகப் புலப்படவில்லை. அவர்கள் என்ன பிராயத்தினர் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

குந்தவை உள்ளத்தில் தோன்றியிருந்த ஐயங்கள் மேலும் வலுப்பட்டன. அறிவில் மிக்க அம்மாதரசி, "பட்டுப் பட்டாடைகளைப் பார்ப்பதற்கு இந்த வெளிச்சம் போதாது, பெரிய தீவர்த்தி ஏற்றிக்கொண்டு வா!" என்று அவ்வர்த்தகர்களை அழைத்து வந்த சேவகனுக்குக் கட்டளையிட்டாள்.

"நான் சென்று நல்ல விளக்கு அனுப்புகிறேன்!" என்று கூறிவிட்டு மதுராந்தகத் தேவர் அவ்விடத்திலிருந்து அகன்றார். அவருடன் செம்பியன் மாதேவியும் சென்றார்.

அவர்கள் சென்ற பின்னர் குந்தவை சீன வர்த்தகர்களை நோக்கி, "ஐயா! உங்களுக்கு ஏன் இத்தனை அவசரம்? உங்கள் சரக்குகளை நாளைப் பகல் வேளையில் கொண்டு வந்து காண்பிக்கக் கூடாதா? இரவுக்கிரவே வந்தீர்களே?" என்றாள்.

"இளவரசிமார்களே! மன்னிக்க வேண்டும்! நாங்கள் தஞ்சைக்கு வந்து பல தினங்கள் ஆயின. எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் அரண்மனைக்குள் வந்து தங்களைப் பார்க்க முடியவில்லை. நாளை மறுதினம் நாகப்பட்டினத்திலிருந்து நாவாய் புறப்படுகிறது. அதில் நாங்களும் புறப்படவேண்டும். அதனாலேதான் அவசரப்பட்டோ ம்!" என்று சீன வர்த்தகர்களில் ஒருவன் சொன்னான்.

அவனுடைய குரல் சிறிது விசித்திரமாக இருந்தாலும் அவன் பேசிய தமிழ் நன்றாக இருந்ததைக் குறித்து அங்கிருந்தவர்கள் அதிசயப்பட்டார்கள்.

"சீன வர்த்தகரே! உமக்குத் தமிழ்மொழி மிக நன்றாக வருகிறதே!" என்றாள் குந்தவை.

"நான் இச்சோழ நாட்டுக்கு வியாபார நிமித்தமாக வந்து தங்கிச் சில காலம் ஆயிற்று. அதனால் தமிழ் பேசச் சிறிது கற்றுக் கொண்டேன். தமிழும், தமிழ்நாடும் எனக்குப் பிடித்திருக்கின்றன" என்றான் அவ்வர்த்தகன்.

"பின் ஏன் இப்போது உங்கள் நாட்டுக்குப் புறப்பட அவசரப்படுகிறீர்கள்? பட்டாபிஷேகம் வரையிலாவது இருந்து விட்டுப்போகக் கூடாதா? அவ்வளவு அவசரம் என்ன?"

"நாளை மறுநாள் புறப்படும் கப்பல் தவறி விட்டால், அப்புறம் எப்போது கப்பல் கிளம்புமோ தெரியாது. முன்போலவெல்லாம் இப்போது அடிக்கடி நாகையிலிருந்து கப்பல்கள் புறப்படுவதில்லை!"

"அது எதனால்?"

"தங்களுக்கு அதன் காரணம் தெரியாதா தேவி! கடற் பிரயாணம் முன்போல இப்போது சுலபமாயில்லை. பத்திரமாகவும் இல்லை. கடற் கொள்ளைக்காரர்கள் அதிகமாகி விட்டார்கள். அரபு நாட்டிலிருந்து ஆவேச வெறி கொண்ட வீரர்கள் கப்பல்களில் ஏறி மேலைக் கடல்களிலும் கீழைக்கடல்களிலும் எங்கெங்கும் சஞ்சரித்து வருகிறார்கள். கடற்கரை ஓரங்களிலும், துறைமுகங்களின் சமீபத்திலும்கூட அவர்கள் வந்து காத்திருக்கிறார்கள். வர்த்தகக் கப்பல்களைக் கண்டதும், நெருங்கி வந்து பாய்கிறார்கள். மூர்க்காவேசத்துடன் போர் செய்து கப்பல்களில் உள்ளவர்களையெல்லாம் கொன்று, பொருள்களையும் கொள்ளை கொண்டு போகிறார்கள். இது காரணமாக, இப்போதெல்லாம் வர்த்தகக் கப்பல்கள் தனித் தனியாகக் கிளம்பிச் செல்ல இயலுவதில்லை. பத்துக் கப்பல்கள், இருபது கப்பல்கள் சேர்ந்து புறப்பட வேண்டியிருக்கிறது. அவ்வாறு நாளை மறுநாள் புறப்படும் கப்பல்கள் போய் விட்டால், மறுபடி எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ, தெரியாது. தேவிமார்களே! பெரிய மனசு செய்து நாங்கள் கொண்டு வந்திருக்கும் பட்டுப் பட்டாடைகளைப் பாருங்கள்!"

இவ்வாறு சொல்லிக்கொண்டே அச்சீன வர்த்தகன் தான் கொண்டு வந்திருந்த மூட்டையைப் பிரிக்கத் தொடங்கினான். அம்மாதிரியே இன்னொருவனும் மூட்டையை அவிழ்த்தான்.

"வர்த்தகர்களே! இப்போது உங்கள் கடையை விரிப்பதில் பயனில்லை. உங்கள் பட்டாடைகளின் தரத்தை இரவு நேரத்தில் பார்த்து நன்கு தெரிந்துகொள்ள முடியாது. உங்களிடம் பட்டாடைகள் வாங்கினால் விலை கொடுப்பதற்கு வேண்டிய பொருளும் இங்கே நாங்கள் கொண்டு வந்திருக்கவில்லை!" என்றாள் இளைய பிராட்டி.

முதலில் பேசிய வர்த்தகன் உடனே மிக்க வியப்படைந்தவனைப் போல் எழுந்து நின்று கரங்களை விரித்துக் குவித்து விட்டு, "இளவரசி! தங்களிடம் நாங்கள் விலை கூறிப் பெறுவோமா? நல்ல வார்த்தை சொன்னீர்கள்! தாங்கள் இந்தப் பட்டாடைகளை ஏற்று அணிந்துகொள்ள மனமுவந்தால், அதுவே நாங்கள் முன் ஜென்மங்களில் செய்த தவத்தின் பயன் என்று எண்ணி மகிழ மாட்டோ மா? விலை கூறி விற்பதற்காக நாங்கள் இந்தச் சரக்குகளைக் கொண்டு வரவில்லை, பட்டாபிஷேகப் பரிசுகளாகக் கொண்டு வந்தோம்!" என்றான்.

"அப்படியானால், நீங்கள் தவறான இடந்தேடி வந்தீர்கள். இங்கேயுள்ள எங்களில் யாருக்கும் பட்டாபிஷேகம் இல்லை. முடிசூட்டிக் கொள்ளப் போகிறவர் இளவரசர் பொன்னியின் செல்வர். அவரைத் தேடிக்கொண்டு போய் உங்கள் பரிசுகளைக் கொடுங்கள்!"

"இல்லை, தேவி! சரியான இடந்தேடித்தான் நாங்கள் வந்துள்ளோம். எதற்கேனும் பொன்னியின் செல்வரின் தயவைப் பெற வேண்டுமானால், முதலில் இளைய பிராட்டி குந்தவை தேவியின் தயவைப் பெறுவதுதான் அதற்கு உபாயம் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்!" என்றான் சீன வர்த்தகன்.

இதைக் கேட்டு அங்கிருந்த பெண்ணரசிகள் அனைவரும் நகைத்தார்கள். "எல்லாரும் என்றால் யார்? அவ்விதம் எங்கே, யார் பேசியதை நீங்கள் கேள்விப்பட்டீர்கள்?"

"ஏன், தாயே? இன்றைக்கு இந்த நகரில் நடந்த உற்சவத்தின் போது கூடியிருந்த கூட்டத்தில் கூடப் பலர் பேசிக்கொண்டார்கள். 'தமக்கை சொல்லைத் தம்பி தட்டவே மாட்டார்' என்று சொல்லிக் கொண்டார்கள். இதோ என் தோழனை வேண்டுமானாலும் கேளுங்கள்!"

இத்தனை நேரம் சும்மாயிருந்த அத்தோழன், "ஆம் இளவரசிமார்களே! அது உண்மைதான்! 'பொன்னியின் செல்வருக்குப் பட்டாபிஷேகம் என்றால், அது குந்தவைப்பிராட்டிக்குப் பட்டாபிஷேகம் செய்தது மாதிரிதான்!' என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். 'இனிமேல் சோழ நாட்டில் பெண்ணரசு தான் நடக்கப் போகிறது! அது நல்லரசாகவும் இருக்கும்' என்று ஜனங்கள் சொல்லிக்கொண்டார்கள்."

மறுபடியும் இளவரசிகள் 'கலகல'வென்று சிரித்தார்கள்.

"ஆகையால், இளவரசிமார்களே! கருணை கூர்ந்து இந்தப் பட்டாபிஷேகப் பரிசுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்!" என்றான் ஒரு சீன வர்த்தகன்.

"ஏற்றுக்கொண்டு, பொன்னியின் செல்வரிடம் எங்கள் கோரிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்!" என்றான் இன்னொரு வர்த்தகன்.

"என்ன கோரிக்கை? பொன்னியின் செல்வரிடம் உங்களுக்கு என்ன காரியம் ஆகவேண்டும்? முதலில் அதைச் சொல்லுங்கள்!" என்றாள் குந்தவைப் பிராட்டி.

"தேவி! அவரால் எத்தனையோ காரியம் ஆகவேண்டும். எங்களுக்கு மட்டும் அல்ல. சோழ நாடு முதல் சீன தேசம் வரையில் உள்ள எல்லா நாட்டு வர்த்தகர்களும் பொதுமக்களும் அருள்மொழிவர்மரைத் தான் நம்பியிருக்கிறார்கள். பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் கடல்களெல்லாம் பத்திரமாயிருந்தன. கடற் பிரயாணத்தில் புயற் காற்றினால் நேரும் ஆபத்தைத் தவிர, வேறுவித அபாயம் இல்லாமலிருந்தது. கடலில் கப்பல்களைத் தாக்கிக் கொள்ளையடிப்பது என்பது கனவிலும் கேள்விப்படாத காரியமாயிருந்தது. சோழ நாட்டு நாவாய்கள் வர்த்தகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இராஜபாட்டைகளில் செல்வது போல் நிர்ப்பயமாகச் சென்று கொண்டிருந்தன. மாநக்கவாரம், மாயிருடிங்கம், மாபப்பாளம், இலாமுரி தேசம், ஸ்ரீவிஜயம், சாவகம், கடாரம், காம்போஜம் ஆகிய கடல் சூழ்ந்த நாட்டுத் துறைமுகங்களுக்குச் சோழ நாட்டுக் கப்பல்கள் சென்று ஆங்காங்கே இறக்குமதி ஏற்றுமதி செய்துகொண்டு எங்கள் சீன நாட்டுக்குச் சென்றன. அவ்விதமே எங்கள் சீன தேசத்திலிருந்து புறப்பட்ட கப்பல்களும் சோழ நாட்டுக்குத் தங்கு தடையின்றி வந்து கொண்டிருந்தன. அந்தக் காலம் இப்போது பழங்கனவாகப் போய்விட்டது தேவி! தங்களிடம் உண்மையைச் சொல்லி விடுகிறோம். இந்தப் பட்டுப் பட்டாடைகளை தாங்கள் திரும்பக் கொண்டு போனால் பத்திரமாய் எங்கள் நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்போம் என்பது நிச்சயமில்லை. வழியில் அராபியக் கடல் கொள்ளைக்காரர்களிடம் இந்தப் பட்டாடைகளைப் பறி கொடுப்பதைக் காட்டிலும் சோழ நாட்டு இளவரசிமார்களுக்குப் பரிசாக அளிப்பதே மிகவும் விசேஷமான காரியமல்லவா?"

இவ்விதம் அந்தச் சீன வர்த்தகன் சொல்லி வந்தபோது குந்தவை தேவியின் கருவண்டுகளை ஒத்த கண்கள் நன்கு விரிந்து அளவிலா ஆர்வம் ததும்பப் பெற்றவையாயின.

"பொன்னியின் செல்வரால் அந்தக் காரியம் நடைபெறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல், கடற்பிரயாணம் அபாயமற்றதாகும் என்று எண்ணுகிறீர்களா? மாநக்கவாரம், மாயிருடிங்கம், கடாரம், ஸ்ரீவிஜயம் முதலிய நாடுகளில் பொன்னியின் செல்வரின் புகழ் பரவும் என்று நம்புகிறீர்களா?" என்று கேட்டாள்.

"நாங்கள் நம்புவது மட்டும் என்ன? இந்தச் சோழ நாட்டு வர்த்தகப் பெருமக்கள் எல்லாரும் நம்புகிறார்கள். ஏன்? சற்று முன் நாங்கள் ஒரு சோதிடரிடம் போயிருந்தோம். அவருங்கூடச் சொன்னார்."

"என்ன சொன்னார்?"

"பொன்னியின் செல்வர் பெரிய பெரிய கப்பல் படைகளைத் திரட்டிக்கொண்டு கடல்களைக் கடந்து செல்வார்; கொள்ளைக்காரர்களின் கூட்டங்களை ஒழித்து விடுவார்; கடற்பிரயாணத்தை முன்போல் நிர்ப்பயமானதாகச் செய்து விடுவார்; சோழ நாடு பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் அடைந்திருந்த பெருமையை மீண்டும் அடையும் என்றெல்லாம் ஜோதிடர் சொன்னார். ஆனால் இதற்கெல்லாம் சோழ நாட்டு இளவரசிகள் குறுக்கே நின்று தடை கிளப்பாமல் இருக்க வேண்டும் என்றும் கூறினார்!"

"இவ்வளவுதான் சொன்னாரா? இளவரசிகளைப் பற்றி இன்னும் ஏதாவது அவதூறு கூறினாரா?"

"ஆகா! அவதூறா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தேவி! பழையாறை இளையபிராட்டியைப் பற்றியும், கொடும்பாளூர்க் கோமகளைப் பற்றியும் அவதூறு சொல்கிறவர்கள் இந்தச் சோழ நாட்டில் யாருமே இருக்க முடியாது. அப்படி இருக்க, இளவரசிகளின் தயவை எதிர்பார்த்திருக்கும் ஜோதிடர் மட்டும் துணிந்து சொல்லுவாரா?"

"வேறு என்னதான் அந்த ஜோதிடர் எங்களைப் பற்றிச் சொன்னார்?"

"இளவரசிமார்கள் இருவரும் சற்று முன் அவரிடம் வந்து விட்டுப் போனதாகக் கூறினார். இரண்டு பேருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று சொன்னார். தேவிமார்களே! பட்டாபிஷேகத்துப் பரிசாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் திருமணப் பரிசிலாகவாவது இந்தப் பட்டு ஆடைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றான் முதலில் பேசிய சீன வர்த்தகன்.

இதைக் கேட்ட வானதி, "அக்கா! இந்தச் சீன வர்த்தகர்கள் வெறும் வம்புக்காரர்கள் இவர்களைப் போகச் சொல்லுங்கள்!" என்றாள்.

"கொஞ்சம் பொறு வானதி! இவர்களுடைய வம்பு இன்னும் எவ்வளவு தூரம் போகிறது, பார்க்கலாம்!" என்று குந்தவை சொல்லிவிட்டு, "வர்த்தகர்களே! ஜோதிடர் வீட்டு வாசலில் யானையின் மீது வந்து நின்றவர்கள் நீங்கள்தானே?" என்றாள்.

"ஆம், தேவி! ஜோதிடர் வீட்டைத் தேடிப் போனதற்குப் பயன் உடனே கிடைத்து விட்டது. நீங்கள் வந்திருப்பதைத் தெரிந்து கொண்டோ ம். உங்களைச் சந்திக்கும் பாக்கியம் இன்று எங்களுக்குக் கிடைக்கும் என்று ஜோதிடர் கூறியதும் பலித்து விட்டது. அம்மாதிரியே கொடும்பாளூர் இளவரசியைக் குறித்து அவர் கூறியதும் பலித்துவிட்டால் எங்கள் கவலையெல்லாம் தீர்ந்துவிடும்!"

வானதி மீண்டும், "அக்கா! இவர்களைப் போகச் சொல்லுங்கள்!" என்றாள்.

"வர்த்தகர்களே! உற்சவக் கூட்டத்தினிடையே யானை ஏறி வந்தவர்களும் நீங்கள்தானே? அடிக்கடி நீங்கள் யானை மேலிருந்து கீழிறங்கி ஜனக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள் அல்லவா?" என்று குந்தவை கேட்டாள்.

"ஆம், தேவி! வரப்போகும் பட்டாபிஷேகத்தைப் பற்றி ஜனங்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பி அவ்வாறு கூட்டத்தில் புகுந்து சுற்றி வந்தோம்."

"ஜனங்கள் என்ன பேசிக்கொண்டார்கள்? பொன்னியின் செல்வர் முடிசூட்டிக்கொள்ளப் போவதைப் பற்றித் திருப்தியாகத் தானே பேசினார்கள்?"

"இல்லை; முடிசூட்டு விழாவைப் பற்றியே யாரும் பேசவில்லை."

"பின்னர், ஜனங்கள் எதைப் பற்றிப் பேசினார்கள்?"

"மதுராந்தகத்தேவரின் பக்தி மகிமையைப் பற்றியே பேசிக் கொண்டார்கள்."

"அப்படி நல்ல விஷயமாகச் சொல்லுங்கள். பூங்குழலி! கேட்டாயா?" என்று குந்தவை பூங்குழலியைப் பார்த்துச் சொல்லி விட்டு, "மதுராந்தகத் தேவரைப் பற்றி இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள்?" என்றாள்.

"மதுராந்தகருடைய தியாகப் பண்பைப் பற்றிப் பேசினார்கள். சோழ ராஜ்யத்தில் அவருக்குப் பாத்தியதை கொண்டாடும் உரிமை இருந்தும், 'இராஜ்யம் வேண்டாம்' என்று சொல்லி விட்டதை மிகவும் பாராட்டினார்கள்."

"அப்படியா? அதற்குக் காரணம் என்ன சொல்லிக் கொண்டார்கள்?"

"மதுராந்தகத்தேவர் யாரோ ஒரு படகுக்காரப் பெண் மீது காதல் கொண்டு அவளையே பட்டமகிஷியாக்கிக் கொள்ளுவேன் என்று பிடிவாதம் பிடித்தாராம். அதனால் ஏற்கெனவே அவர் கட்சியிலிருந்த சிற்றரசர்களின் மனம் மாறிவிட்டதாம். 'அப்படியானால் மதுராந்தகருக்குப் பட்டம் கிடையாது; பொன்னியின் செல்வருக்கே பட்டம் ' என்று சிற்றரசர்கள் சொல்லிவிட்டார்களாம். இம்மாதிரி ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். இளவரசிமார்களே! அந்தப் பாக்கியசாலியான ஓடக்காரப் பெண் இங்கே இருந்தால், அவருக்கும் பட்டாடைப் பரிசு கொடுக்க விரும்புகிறோம்."

பூங்குழலி இப்போது, "தேவி! கொடும்பாளூர் இளவரசி கூறியது சரிதான். இந்த வர்த்தகர்கள் வெறும் வம்புக்காரர்கள். இவர்களை உடனே போகச் சொல்லுங்கள்!" என்றாள்.

"கொஞ்சம் பொறு பூங்குழலி! உனக்கு என்ன கோபம்? இவர்கள் உன்னைப் பற்றி ஒன்றும் தவறாகப் பேசவில்லையே? புகழ்ச்சியாகத்தானே பேசுகிறார்கள்?" என்றாள் குந்தவை.

"இவர்கள் என்னைப் பற்றிப் புகழ்ச்சியாகவும் பேச வேண்டாம்; இகழ்ச்சியாகவும் பேச வேண்டாம்! எனக்குப் பரிசு கொடுக்கவும் வேண்டாம்!" என்று பூங்குழலி கிளம்பினாள்.

"அம்மணி! தாங்கள்தானா அந்தப் பாக்கியவதி? ஆகா! ஜனங்கள் பேசிக்கொண்டது ரொம்ப சரி!" என்றான் சீன வர்த்தகர்களில் ஒருவன்.

"இன்னும் வேறு என்ன பேசிக் கொண்டார்கள்?" என்று பூங்குழலி புன்னகையுடன் கேட்டாள்.

"மதுராந்தகத்தேவர் தங்களை முன்னிட்டு இந்தச் சோழ ராஜ்யத்தையே தியாகம் செய்துவிட்டார் என்று கூட்டத்தில் ஒருவர் சொன்னபோது, அதற்கு மறுமொழியாக இன்னொருவர், 'பூங்குழலி தேவிக்காக ஒரு இராஜ்யத்தைத்தானா தியாகம் செய்யலாம்? என்னிடம் ஒன்பது இராஜ்யம் இருந்திருந்தால் அவ்வளவு இராஜ்யங்களையும் தியாகம் செய்திருப்பேனே?' என்று சொன்னார். அவர் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன்!" என்றான் அச்சீன வர்த்தகன்.

பூங்குழலி கள்ளக் கோபத்துடன், "அக்கா! இந்த அதிகப்பிரசங்கி வர்த்தகரை உடனே தண்டிப்பதற்குத் தாங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்; இல்லாவிட்டால் நானே பொன்னியின் செல்வரிடம் சொல்லி இவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பேன்!" என்றாள்.

இதை கேட்டுக்கொண்டு அப்போது மேன்மாடத்துக்கு வந்தார் மதுராந்தகத்தேவர். மாலை நேரத்துப் பூஜை செய்து விட்டுக் கையில் மலர்ப் பிரஸாதம் எடுத்துக்கொண்டு வந்தவர், பூங்குழலியின் வார்த்தைகளைக் கேட்டு, "இந்த வர்த்தகர் கூறுவதில் தவறு ஒன்றுமில்லையே? எதற்காக அவரைத் தண்டிக்க வேண்டும்? அவர் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன் பூங்குழலி!" என்றார்.

இவ்விதம் சொல்லிக்கொண்டு வந்தவரை அந்தச் சீன வர்த்தகன் திரும்பிப் பார்த்தபோது, பூங்குழலி, "உண்மையான வர்த்தகர் சொன்னால் சரிதான். வேஷதாரி வர்த்தகரை எப்படி ஆமோதிக்க முடியும்?" என்று சொல்லிக்கொண்டே, அந்த வர்த்தகர் தலையில் அணிந்திருந்த சீனத்துத் தலைப்பாகையைப் பிடித்து இழுத்தாள். தலைப்பாகை கீழே விழுந்தது. தலைப்பாகையுடன் அவருடைய முகத்திலிருந்த தாடி எல்லாம் கீழே விழுந்தன!

சாக்ஷாத் வந்தியதேவனுடைய திருமுகம் காட்சி அளித்தது.

"ஐயா! காப்பாற்றுங்கள்!" என்று அலறிக்கொண்டே வந்தியத்தேவன் மற்றொரு சீன வர்த்தகனின் கழுத்தைக் கட்டிக்கொள்ள முயன்றபோது, அவனுடைய தலைப்பாகையும் தாடி மீசையும் கழன்று விழுந்தன.

பொன்னியின் செல்வர் புன்னகை பொலிந்த முகத்துடன் தோற்றமளித்தார்.

மூன்று பெண்மணிகளும் குலுங்கக் குலுங்க நீண்ட நேரம் சிரித்தார்கள்.

செம்பியன்மாதேவி மேன் மாடத்துக்கு வந்த பிறகு அவரிடம் ஒரு தடவை சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார்கள்.

பூங்குழலி, "அம்மா! இவர்களைக் கோயிலின் அருகே பார்த்த போதே ஒருமாதிரி எனக்குச் சந்தேகம் தோன்றிவிட்டது. அதனாலே தான் தைரியமாக இவர்களை அரண்மனைக்கு வரச் சொன்னேன்!" என்றாள்.

மதுராந்தகத்தேவர், "ஆமாம்; எனக்கு என் நண்பனைத் தெரிந்து போய்விட்டது. ஆகையினாலேதான் இவர்களை இங்கே விட்டு விட்டு நான் பூஜை செய்யச் சென்றேன்!" என்றார்.

"வானதி! நீயும் நானும்தான் புருஷர்களின் கள்ள வேடத்தைக் கண்டுபிடிக்க முடியாத அசடுகள் போலிருக்கிறது!" என்றாள் குந்தவை.

"இவர்கள் எதற்காக இந்த மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு வந்து நம்மை ஏமாற்றப் பார்த்தார்கள்? அதைக் கேளுங்கள், அக்கா?" என்றாள் கொடும்பாளூர்க் கோமகள்.

"கேட்பானேன், வானதி! என் சகோதரன் இப்படியெல்லாம் கள்ள வேஷம் போடத் தெரிந்தவன் அல்ல. சகவாச தோஷத்தினால்தான் இவ்வாறெல்லாம் வேடம் போடவும் பொய் புனைந்துரைக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறான்!" என்றாள் குந்தவைப் பிராட்டி.

"தேவி! இந்தக் காரியத்துக்கு வந்தியத்தேவன் மீது பழிசுமத்த வேண்டாம். சீன வர்த்தகர்கள் மாதிரி வேஷம் தரிக்கும் அபூர்வ யோசனை என் மனத்திலேதான் தோன்றியது!" என்றார் அருள்மொழி.

"இம்மாதிரி யோசனை உன் மனதில் தோன்றியதற்குக் காரணந்தான் சகவாச தோஷம் என்று சொல்கிறேன். போகட்டும், இந்த மாதிரி பொய் வேஷம் நீ இனிமேல் போட வேண்டாம்!"

"அக்கா! திருவள்ளுவர் வாய்மையின் பெருமையைப் பற்றி எவ்வளவோ சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்கூட,

பொய்மையும் வாய்மை இடத்த; புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்!'

என்று சொல்லியிருக்கிறார் அல்லவா?"

"திருவள்ளுவர் அந்தக் குறளைப் பாடியபோது இப்படி நீ அதை உபயோகப்படுத்தப் போகிறாய் என்று கனவிலும் கருதியிருக்க மாட்டார்."

"திருவள்ளுவரை விட்டுவிடலாம் இராமர் வனத்துக்குப் புறப்பட்டபோது தம்மைத் தொடர்ந்து வந்த அயோத்தி மக்களைத் திரும்பி அயோத்திக்குப் போகும்படி செய்வதற்குக் கொஞ்சம் பொய்மையைக் கையாளவில்லையா? ஜனங்கள் தூங்கும்போது எழுந்து ரதத்தை அயோத்தியை நோக்கிச் சிறிது தூரம் செலுத்தி விட்டுப் பிறகு கங்கைக் கரையை நோக்கிச் செலுத்தும்படி சுமந்திரரிடம் சொல்லவில்லையா!"

"தம்பி! நீ எல்லாக் காரியங்களிலும் இராமரைப் பின்பற்றுவதாயிருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான்! போகட்டும்! நீங்கள் இந்தப் பொய் வேஷம் பூண்டதால் 'புரை தீர்ந்த நன்மை' என்ன உண்டாயிற்று? அதைச் சொல்வாயா?" என்று கேட்டாள் குந்தவை.

"நாங்கள் இன்னார் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் குடிமக்களின் கூட்டத்தில் புகுந்து அங்குமிங்கும் அலைந்து அவர்களுடைய உண்மையான மனக் கருத்துக்களை அறிய முடிந்தது!"

குந்தவை சிறிது ஆர்வத்துடன், "மக்கள் மனக் கருத்தைப் பற்றி என்ன தெரிந்து கொண்டாய், தம்பி!" என்று கேட்டாள்.

"எத்தனையோ தெரிந்து கொண்டேன், அக்கா! முக்கியமாக, இந்தச் சோழ சாம்ராஜ்யம் பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல் மகோந்நதமடைய வேண்டும் என்பதை மக்கள் எல்லாரும் விரும்புகிறார்கள் என்று அறிந்தேன். சற்று முன்னால் நானும், என் நண்பரும் சீன வர்த்தகர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு இருந்தோமல்லவா? வேஷம் பொய்யாக இருந்தாலும், நாங்கள் கூறியதெல்லாம் மெய்தான்! உங்களிருவரையும் சாலையில் சந்தித்து விட்டுத் தஞ்சைக்கு நாங்கள் சென்றோம். தஞ்சையில் கோட்டை வாசலுக்கு அருகில் உண்மையாகவே இரண்டு சீன வர்த்தகர்களைக் கண்டோ ம். அவர்களிடம் விலை கொடுத்து இந்தப் பட்டு மூட்டைகளை வாங்கிக் கொண்டோ ம். அவர்களைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு திரும்பி வந்தோம். அராபியக் கடல் கொள்ளைக்காரர்களைப் பற்றி நான் சற்று முன் சொன்னதெல்லாம் அந்த வர்த்தகர்கள் எங்களிடம் கூறியதுதான். அராபியக் கடல் கொள்ளைக்காரர்களின் மூர்க்கத்தனத்தை நானும் என் நண்பரும் நேரிலேயே அனுபவித்திருக்கிறோம். தேவி! எது எப்படியானாலும் பட்டாபிஷேக வைபவம் முடிந்ததும் நானும், என் நண்பரும் ஈழ நாட்டுக்குப் புறப்படுவது நிச்சயம். அங்கே எங்கள் காரியம் முடிந்ததும் கடல்களுக்கு அப்பாலுள்ள இன்னும் பல நாடுகளுக்கும் செல்ல உத்தேசித்திருக்கிறோம். உயிருடன் திரும்பி வருவோமோ, அல்லது போகுமிடங்களில் போர்களத்தில் உயிரை விட்டு வீர சொர்க்கம் எய்துவோமோ என்று தெரியாது. ஆகையால் நாங்கள் புறப்படும் வரையில் நீங்கள் எல்லாரும் எங்களுடனேயே இருக்கவேண்டும் என்றும் எங்களுக்கு ஆசிகூறி விடைகொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதற்காகவே அவசரமாகத் தங்களைப் பின் தொடர்ந்து வந்தோம்."

இவ்வாறு பொன்னியின் செல்வர் கூறி வந்தபோது குந்தவை தேவியின் கண்களில் நீர் ததும்பியது.

பூங்குழலி தழுதழுத்த குரலில், "யுத்தம் என்று எதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்களோ, தெரியவில்லை. மனிதர்கள் ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டு ஆனந்தமாயிருக்கக் கூடாதா?" என்றாள்.

"மகளே! அப்படியல்ல! உலகம் உள்ள வரையில் யுத்தம் இல்லாமல் தீராது. பரமசிவனும், பரமேசுவரியும் யுத்தம் செய்ய வேண்டியிருந்ததே! உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் பிறந்தவர்கள் சிலர் உண்டு. அவர்கள் யுத்தம் செய்யத்தான் வேண்டும்!"

இவ்விதம் சிவபக்த சிரோமணியும், பரம சாதுவுமான செம்பியன்மாதேவி கூறியதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியக் கடலில் ஆழ்ந்தார்கள்.








Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 84. பட்டாபிஷேகப் பரிசு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. நம் விருந்தாளி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
»  ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 12. நந்தினி
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 30. இரு சிறைகள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: