BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  86. "கனவா? நனவா?" Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 86. "கனவா? நனவா?"

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  86. "கனவா? நனவா?" Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 86. "கனவா? நனவா?"   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  86. "கனவா? நனவா?" Icon_minitimeSat Jun 18, 2011 4:07 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

86. "கனவா? நனவா?"




மறுநாள் காலையில் செம்பியன் மாதேவியும், மதுராந்தகரும் பூங்குழலியும் தஞ்சைக்குப் புறப்பட்டார்கள்.

பொன்னியின் செல்வரும், வந்தியத்தேவரும் உறையூருக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் போய்வர எண்ணியிருந்தார்கள். போகும்போது கரிகாலச் சோழர் காலத்தில் காவேரி நதியின் நீரைத் தேக்குவதற்காகக் கட்டப்பட்ட பேரணையை வந்தியத்தேவனுக்குக் காட்டுவதாக அருள்மொழிவர்மர் கூறியிருந்தார்.

அவர்கள் புறப்படுவதற்கு முன்னால் பொன்னியின் செல்வர் குந்தவை தேவியிடம் விடைபெற்றுக் கொள்வதற்காகச் சென்றார்.

"அக்கா! தாங்கள் பழையாறைக்கு அவசியம் போக வேண்டுமா?" என்றார்.

"தம்பி! நீங்கள் உறையூருக்கு அவசியம் போக வேண்டுமா? எங்களுடன் பழையாறைக்கு வரக்கூடாதா?" என்று கேட்டாள்.

"இல்லை, அக்கா! உறையூரில் ஆழ்வார்க்கடியானை முக்கியமான காரியத்துக்காகச் சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறோம்.." என்று சொன்னார்.

"ஆகா! நீ முன்மாதிரி இல்லை, தம்பி! உன் மனசு மிகவும் கெட்டுப் போய்விட்டது. என்னை நீ இலட்சியம் செய்வதே இல்லை. இந்த மாறுதலுக்குக் காரணம் அந்த வல்லத்து அரசரின் சிநேகந்தான் என்று கருதுகிறேன்.."

"வீணாக அவர் பேரில் பழியைப் போடாதீர்கள். எனக்குப் பிராயம் வந்து விடவில்லையா, அக்கா! ஒரு பெரிய இராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப் போகிறேன். இனிமேலாவது என் இஷ்டப்படி நான் நடந்து கொள்ள வேண்டாமா?"

"நன்றாக உன் இஷ்டப்படி நடந்துகொள்! உன்னுடைய அதிகாரத்தை என் பேரில் காட்டாமலிருந்தால் சரி! உன் இஷ்டப்படி நான் நடக்க வேண்டுமென்று சொல்லாமலிருந்தால் சரி."

"மகுடாபிஷேகத்துக்கு மட்டும் வந்து விடுங்கள். அப்புறம் உங்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளுங்கள்."

"மகுடாபிஷேகத்துக்குப் பிறகு வேண்டுமானால், நீ என் பேரில் அதிகாரம் செலுத்தலாம். அதுவரை என்னைக் கட்டாயப்படுத்த உனக்கு என்ன உரிமை?"

"அப்படியானால், நீங்கள் மகுடாபிஷேகத்துக்கு வரப்போவதில்லையா?"

"அது வானதியின் விருப்பம். அவள் போகவேண்டும் என்றால் நானும் வருவேன் இல்லாவிட்டால் வரமாட்டேன்."

"அந்தப் பெண் எங்கே அக்கா?"

"உன் அன்னை பொன்னி நதிக்குப் பூஜை செய்யப் போயிருக்கிறாள். உனக்கு நல்ல புத்தியைக் கொடுத்து அருளவேண்டுமென்று பிரார்த்தனை செய்யப் போயிருக்கிறாள்."

இளவரசர் சிரித்துவிட்டு, "அவளுடைய பிரார்த்தனை நிறைவேறட்டும். நான் புறப்படுகிறேன்" என்றார்.

"தம்பி! உன்னைப் போல் குரூரமானவனை நான் பார்த்ததே இல்லை. வானதி இரவெல்லாம் தூங்கவே இல்லை. நினைத்து நினைத்து விம்மிக் கொண்டிருந்தாள். காவேரிப் படித்துறைக்குச் சென்று அவளிடம் விடை பெற்றுக் கொண்டு போ!" என்றாள் குந்தவை.

"அவள் தூங்காதது மட்டும் என்ன? என் தூக்கத்தையும் அவள்தான் பறித்துக்கொண்டு விட்டாள் போலிருக்கிறது. ஒருவர் மனத்தை ஒருவர் அறிந்து நடந்துகொள்ளத் தெரியாவிட்டால் விம்மி அழுதுகொண்டிருக்க வேண்டியதுதான். இப்படிப்பட்ட பெண்ணைக் கட்டிக்கொண்டு வாழ் நாளெல்லாம் நான் கஷ்டப்பட வேண்டுமென்றீர்கள்?" என்று பொன்னியின் செல்வர் சொல்லிவிட்டு, அந்த அரண்மனையின் பின்புறம் விரைந்து சென்றார்.

தோட்டத்தைத் தாண்டியதும் பொன்னி நதியின் படித்துறையில் வானதி அமர்ந்திருப்பதையும் பக்கத்திலிருந்த தட்டிலிருந்து மலர்களை எடுத்துப் பொன்னி நதியின் வெள்ளத்தில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்தார்.

வானதி அவ்விதம் அர்ச்சனை செய்து கொண்டிராவிட்டால், அவள் அந்தக் காவேரித் துறையில் அமைக்கப்பட்ட ஒரு பெண்ணின் பொற்சிலையாகவே தோன்றியிருப்பாள்.

பொன்னியின் செல்வர் சத்தமிடாமல் சென்று வானதிக்குப் பின்னால் மேல் படி ஒன்றில் உட்கார்ந்து கொண்டார். வானதிக்கு யாரோ வருகிறார்கள் என்பது தெரிந்துதானிருக்க வேண்டும். உள்ளுணர்வினால் அவர் பொன்னியின் செல்வர்தான் என்று தெரிந்துகொண்டாள் போலும். ஆகையால் திரும்பிப் பாராமல் அர்ச்சனை செய்வதையும் நிறுத்தி விட்டுச் சும்மா இருந்தாள்.

தட்டிலிருந்த மலர்களின் இதழ்களில் பனித்துளிகள் இரண்டொன்று காணப்பட்டன. வானதியின் கண் மலரின் இதழ்களிலும் முத்துப் போன்ற இரண்டு கண்ணீர்த் துளிகள் பிரகாசித்தன.

உதய சூரியன் பசும்பொற் கிரணங்கள் பொன்னி நதியின் மெல்லிய அலைகளோடு கூடிக் குலாவியபோது, சோழ சாம்ராஜ்ய மங்கை தங்கரேகைகள் ஊடுருவிப் படர்ந்து நீலப் பட்டுச் சேலையை உத்தரீயமாக அணிந்து விளங்குவது போலத் தோன்றியது. அந்த நீலப் பட்டுச் சேலையின் இருபுறங்களிலும் அமைந்த பச்சை வர்ணப் பட்டுக் கரையைப் போல நதியின் இருபுறங்களிலும் செழித்து வளர்ந்திருந்த பசும் சோலைகள் காட்சி தந்தன.

காவேரியின் பிரவாகம் இசைத்த இனிய சுருதிக்கு இணங்க இருபுறத்துச் சோலைகளிலும் பலவகைப் புள்ளினங்கள் மங்கள கீதங்கள் பாடி வாழ்த்தின. கற்பனை உலகிலே சஞ்சரித்துப் பகற் கனவு காண்பதற்கு இடமும் நேரமும் சூழ்நிலையும் மிக வாய்ப்பாக இருந்தன.

இளவரசர் சிறிது மௌனமாயிருந்து பார்த்துவிட்டு, "வானதி! பகல் கனவு காண்கிறாயா? நான் உன் கனவைக் கலைத்துவிட்டேனா?" என்றார்.

"நான் பகற் கனவுதான் காண்கிறேன், ஐயா! ஆனால் என் கனவைத் தாங்கள் எப்படி கலைக்க முடியும்? இரவில் நான் கனவு கண்டாலும், அக்கனவிலே நடுநாயகமாக விளங்குகிறவர் தாங்கள் தானே? ஆகையாலேயே தங்களைப் பக்கத்திலே பார்க்கும் போது, 'இது கனவா? நனவா?' என்று எனக்குச் சந்தேகம் தோன்றிவிடுகிறது. 'வாருங்கள்!' என்று அழைக்கவும் இயலாமற் போகிறது. ஆம், சுவாமி! எத்தனையோ நாள் எத்தனையோ விதமான பகற் கனவு கண்டிருக்கிறேன். தங்களை முதல் முதலில் திருநல்லம் அரண்மனைத் தோட்டத்தில் நான் சந்தித்தபோது, தங்களை யானைப்பாகன் என்று நினைத்தேன். தாங்கள் சாதாரண யானைப்பாகனாகவே இருக்கக் கூடாதா என்று பின்னர் பல தடவை நான் எண்ணியதுண்டு. தாங்கள் வெறும் யானைப்பாகனாயிருந்து என்னைத் தங்கள் பின்னால் யானையின் மீது ஏற்றிச் சென்றதாகப் பலமுறை கற்பனையில் கண்டு களித்தேன். அப்போதெல்லாம், இந்த உலகத்தைச் சேர்ந்த சாதாரண கரிய யானையின் மேல் ஏறிப்போவதாக எனக்குத் தோன்றுவதில்லை. தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்னும் வெள்ளை யானையின் பேரில் நான் ஏறிச் செல்வதாகத் தோன்றும். தாங்களே தேவேந்திரன் என்றும், நான் இந்திராணி என்றும் எண்ணிக் கொள்வேன்..."

"அப்படியானால் இப்போது..." என்று பொன்னியின் செல்வர் குறுக்கிட்டுப் பேச முயன்றதை வானதி தடுத்துத் தொடர்ந்து கூறினாள்:

"கொஞ்சம் பொறுங்கள், அரசே! தேவேந்திரன் இந்திராணி என்ற கற்பனையை உடனே மாற்றிக் கொள்வேன். தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் நிம்மதி ஏது? அவர்கள் இருவரும் தனியாக ஐராவதத்தில் ஏறி ஆனந்தப் பிரயாணம் செய்வதற்கு அவகாசம் ஏது? தேவர்களும் தேவிகளும் புடை சூழவல்லவா எப்பொழுதும் கொலுவிருக்க வேண்டும்? ஆகையால் அந்த எண்ணத்தை உடனே மாற்றிக்கொள்வேன். அரசர் குலத்தில் பிறந்தவளாயில்லாமல் கடற்கரையில் வாழும் படகுக்காரர் குடும்பத்தில் நான் பிறந்திருக்கக் கூடாதா என்று எண்ணிக் கொள்வேன்."

"தெரிகிறது, வானதி! எனக்குத் தெரிகிறது! பூங்குழலியைப் பார்த்து நீ பொறாமைப்படுகிறாய்!"

"ஆம், அது உண்மைதான்! இந்த உலகத்திலேயே பூங்குழலி தேவியைப் பார்த்துத்தான் நான் பொறாமைப்படுகிறேன். அவருடைய மனோரதம் நிறைவேறிவிட்டது. அவரும் அவருடைய காதலரும் கோடிக்கரைக்குப் போய் அலை கடலில் படகு செலுத்தியும், குழகர் கோவிலில் சேவை செய்தும் ஆனந்த வாழ்க்கை நடத்தப் போகிறார்கள். அவர் ஏன் என்னைப் பார்த்து சிரிக்கமாட்டார்? சிரிக்கத்தான் சிரிப்பார். ஐயா! வேறு எந்த விதமாகவேனும் என்னைத் தண்டியுங்கள். பூங்குழலி தேவி என்னைப் பார்த்துச் சிரிக்கும்படி மட்டும் செய்யாதீர்கள்..."

முதல் நாள் இரவு நடந்ததைப் பொன்னியின் செல்வர் நினைவு கூர்ந்து கூறினார்: "வானதி! கொஞ்சம் பொறுத்துக்கொண்டிரு! நேற்று பூங்குழலி உன்னைப் பார்த்துச் சிரித்தாள் அல்லவா? அவளைப் பார்த்து நீ சிரிக்கும் காலம் வரும்!"

"சுவாமி! நான் பூங்குழலி தேவியைப் பார்த்துச் சிரிக்க விரும்பவில்லை. வேறு யாரை பார்த்தும் சிரிக்க விரும்பவில்லை. யார் வேண்டுமானாலும் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு போகட்டும். தங்களுடைய பொன் முகத்தில் சில சமயம் புன்னகையைக் காண்பதற்குத்தான் ஆசைப்படுகிறேன். மற்றவர்களைப் பார்க்கும்போதும், பேசும்போதும் தங்கள் முகம் மலர்ந்திருக்கிறது. என்னைப் பார்க்கும்போது மட்டும் தங்கள் புருவங்கள் நெரிகின்றன. இப்போதுகூடத் தங்களைப் பார்ப்பதற்கே எனக்குப் பயமாயிருக்கிறது..."

"வானதி! இதைக் கேள்! உன்னைப் பார்த்ததும் என் முகம் சுருங்குவதற்குக் காரணம் இருக்கிறது. மற்றவர்களால் எனக்கு எவ்வித இடையூறும் இல்லை. அவர்களால் என் மன நிம்மதி குலைவதில்லை. உன்னால் என் உள்ளம் அமைதியை இழக்கிறது. நேற்றிரவு நீ தூங்கவில்லையென்று என் தமக்கையார் கூறினார். நானும் தூங்கவில்லை, வானதி! பல தினங்களாகவே நான் தூங்குவதில்லை. அரண்மனை மேன்மாடத்தில் படுத்து ஆகாசத்து நட்சத்திரங்களைப் பார்த்தேனானால், உன் கண்களின் ஒளியைத்தான் அந்த விண்மீன்கள் எனக்கு ஞாபகப்படுத்துகின்றன. சோலை மரங்கள் காற்றில் அசைந்தாடி இலைகள் சலசலவென்று சரிக்கும்போது, நீ உன் இனிய குரலில் கலகலவென்று சிரிக்கும் ஒலியைத்தான் கேட்கிறேன். மிருதுவான தென்றல் காற்று என் தேகத்தில் படும்போது நீ உன் காந்தள் மலர்களையொத்த விரல்களால் என்னைத் தொடுவதாக எண்ணிப் பரவசமடைகிறேன். வானதி! இப்படியெல்லாம் உன் நினைவு என்னை ஆட்கொண்டிருப்பதால், உன்னை நேருக்கு நேர் பார்க்கும்போது என் முகம் சுருங்குகிறது. புருவங்கள் நெரிகின்றன. என் வாழ்க்கையில் நான் சாதனை செய்ய விரும்பும் காரியங்களுக்கெல்லாம் நீ தடங்கலாகி விடுவாயோ என்று அஞ்சுகிறேன்...."

"சுவாமி! அந்தப் பயம் தங்களுக்கு வேண்டாம்! தங்கள் காரியங்களுக்கு நான் தடையாக இருக்கமாட்டேன்...."

"நீ தடையாக இருக்கமாட்டாய். யாருமே தடையாக இருக்க முடியாது! மாரிக்காலத்தில் கீழ்த்திசையிலிருந்து புயல் கொண்டு வரும் கருமேகத் திரளை நீ பார்த்திருக்கிறாயா, வானதி! அந்த மேகத்திரளில் மழை நீர் நிறைந்திருக்கிறது. மின்னல்களும், இடிகளும் அம்மேகத்தில் மறைந்திருக்கின்றன. சண்டமாருதம் அந்த மழை நிறைந்த கொண்டலைத் தள்ளிக் கொண்டு வருகிறது. அதை யாராவது தடுத்து நிறுத்த முடியுமா? அந்த மேகங்களின் நிலையில் நான் இருக்கிறேன். வானதி! என் உடம்பில் எப்போதும் ஒரு பரபரப்பு இருந்து கொண்டிருக்கிறது. என் உள்ளத்தில் ஏதோ ஒரு வேகம் இருந்து கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத மின்னல்கள் மின்னுகின்றன. காதில் கேட்காத இடி முழக்கங்கள் ஒலிக்கின்றன. புயல்களும், சூறைக்காற்றுகளும், சண்டமாருதங்களும் என்னை அழைக்கின்றன. ஏழு கடல்களிலும் மலைமலையாக அலைகள் கிளம்பி என்னை வரவேற்கின்றன. ஆயிரமாயிரம் சங்கங்களின் நாதமும், முரசுகளின் முழக்கமும் போர் யானைகளின் பிளிறல்களும் என்னைக் கவர்ந்து இழுக்கின்றன. என்னை யாரும் தடுக்க முடியாது, வானதி! ஆனால் தடுக்க முயன்று எனக்கு மன அமைதி இல்லாமல் செய்ய முடியும்..."

"சுவாமி! அவ்வாறு நான் ஒருநாளும் செய்ய மாட்டேன். தடை செய்ய முயலவும் மாட்டேன். மூன்று உலகையும் ஆளப் பிறந்த தங்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் இடையூறாக இருக்கமாட்டேன். ஆகையினாலேதான் தங்கள் அருகில் சோழ சிங்காதனத்தில் உட்காரவும் மறுதளிக்கிறேன்."

"வானதி! சோழர் குலச் சிங்காதனம் மகிமையில் பெரியதானாலும், அளவிலே சிறியது. அதில் ஒருவர்தான் அமர முடியும். சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் வேறொரு சிங்காதனம் அமைத்து, அதில்தான் சக்கரவர்த்தினி அமரவேண்டும்."

"சுவாமி! எனக்குத் தாங்கள் அமரும் சிங்காதனத்திலும் இடம் வேண்டாம். தங்கள் அருகில் தனிச் சிங்காதனத்திலும் இடம் வேண்டாம். தங்களுடைய பட்டமகிஷியாகச் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கப் புண்ணியம் செய்தவளுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கட்டும். தங்களுடைய நெஞ்சமாகிய சிங்காதனத்திலே எனக்குச் சிறிது இடங்கொடுத்தீர்களானால், அதுவே ஏழு ஜென்மங்களில் நான் செய்த தவத்தின் பயன் என்று கருதி பூரிப்பு அடைவேன்!"

"வானதி! என்னால் சுலபமாகக் கொடுக்க முடிந்ததை நீ கேட்டாய். என்னுடைய நெஞ்சமாகிய சிங்காதனத்தில் நீ ஏற்கெனவே இடம் தயார் செய்து கொண்டு விட்டாய்! அதை நான் உனக்குத் தருவதில் எவ்விதத் தடையுமில்லை! இந்தப் பெரிய சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாக உண்மையிலேயே நீ விரும்பவில்லையா. வானதி கண்டோ ர் கண்கள் கூசும்படி ஜொலிக்கும் நவரத்தினங்கள் பதித்த பொற்கிரீடத்தை உன் சிரசில் சூட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உனக்கு இல்லையா?"

"அந்த ஆசை எனக்குச் சிறிதும் இல்லை! சோழ குலத்துப் புராதன மணி மகுடங்களை நான் பார்த்திருக்கிறேன். கையில் எடுத்துப் பார்த்திருக்கிறேன். அவற்றில் ஒன்றை என் தலையில் வைத்துக் கொண்டால், அதன் கனம் என் தலையை அமுக்கிக் கழுத்தை நெறித்து மூச்சுவிடத் திணறும்படி செய்துவிடும் என்று அஞ்சுகிறேன். அவ்வளவு வலிமை என் உடலில் இல்லை. அவ்வளவு தைரியம் என் மனத்திலும் இல்லை. சுவாமி! நவரத்தினங்கள் இழைத்த மணி மகுடத்தைச் சுமக்க வலிமையும் தைரியமும் உள்ளவர்கள் அதைச் சுமக்கட்டும். தாங்கள் கடல் கடந்த நாடுகளுக்குப் பிரயாணம் புறப்படுவதற்கு முன்னால், எனக்கு வேறொரு பரிசு கொடுத்து விட்டுப் போங்கள். அரண்மனை நந்தவனத்திலிருந்து அழகான மலர்களைப் பறித்துத் தொடுத்து மாலை கட்டித் தருகிறேன். என்னால் எளிதில் சுமக்கக்கூடிய அந்த மாலையை என் கழுத்தில் சூட்டி என்னைத் தங்கள் அடிமையாக்கிக் கொண்டுவிட்டுப் புறப்படுங்கள்!..."

"சீன வர்த்தகர்களிடமிருந்து நவரத்தின மாலையை உனக்கு பட்டாபிஷேகப் பரிசாகக் கொண்டு வந்தேன்."

"தங்கள் பட்டாபிஷேகத்துக்கு எனக்குப் பரிசு எதற்கு?"

"சரி, வேண்டாம்! இதை வேறு யாருக்காவது கொடுத்து விடுகிறேன், வானதி! நீயும், நானும் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். நான் புறப்படுவதற்கு முன்னர் உன் விருப்பத்தின்படி உனக்கு ஒரு மாலை சூட்டிவிட்டுப் போகிறேன். நான் சூட்டும் அந்த மணமாலைக்குப் பதிலாக நான் ஒவ்வொரு தடவை அயல் நாடுகளிலிருந்து திரும்பி வரும்போதும் நீ ஒவ்வொரு பூமாலையுடன் காத்திருக்க வேண்டும். கடல் கடந்த தூர தூர தேசங்களுக்கெல்லாம் சென்று புலிக்கொடியை நாட்டிவிட்டு வெற்றி முழக்கத்துடன் நான் திரும்பி வரும்போதெல்லாம் நீ ஒரு வெற்றி மாலையுடன் எனக்காகக் காத்திருக்க வேண்டும்" என்றார் இளவரசர்.

"ஒரு மாலை என்ன? நூறு நூறு மாலைகள் தொடுத்து வைத்துக்கொண்டு காத்திருப்பேன். இந்தச் தேச மக்கள் எல்லாரும் காத்திருப்பார்கள்!" என்றாள் இளவரசி வானதி.











Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 86. "கனவா? நனவா?"
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 55. "பைத்தியக்காரன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 40. மந்திராலோசனை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 19. சமயசஞ்சீவி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: