என் இனிய BTC இதயங்களே.. இனிய வணக்கங்கள். இக் கட்டுரை, சுய முன்னேற்ற நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக 60 ஆண்டுகளில் 50 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்ட திரு. நெப்போலியன் ஹில் அவர்களுடைய சிறந்த படைப்பிலிருந்து பெறப்பட்டது.
வாழ்க்கை என்பது ஒரு சதுரங்கப் பலகை… உங்களை எதிர்த்து ஆடுவது ’காலம்’. காய் நகர்த்துவதில் தயக்கம் காட்டினாலோ அல்லது உடனுக்குடன் நகர்த்தா விட்டாலோ உங்கள் காய்களைக் காலம் வெட்டி வீழ்த்திவிடும். உங்கள் இலட்சியங்களைத் திட்டவட்டமாகத் தீர்மானிக்காமல் இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாத ஒரு பார்ட்னரை எதிர்த்து நீங்கள் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள்..! இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முதாலாவது வழி இதோ :
நம்புங்கள் , தன்னம்பிக்கையை வளருங்கள்.
நீங்கள் கேட்பது உங்களுக்குக் கிடைக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை உங்கள் ஆழ்மனதை ஒப்புக்கொள்ளச் செய்யுங்கள். நீங்கள் விரும்பியபடி ஆழ்மனம் செயல்பட்டு உங்கள் விருப்பத்தை நம்பிக்கையாக மாற்றி உங்களிடம் திருப்பி அனுப்பும். அத்தோடு உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதர்காகத் தீர்க்கமான திட்டங்களையும் உங்களுக்குக் கொடுக்கும்.
நாமாக விரும்பித் தேர்ந்தெடுத்த விடயங்களைத் திரும்பத் திரும்ப ஆழ்மனதுக்குக் கட்டளையிட்டுப் பதிய வைக்க வேண்டும். நம்பிக்கை உணர்வைச் சுயமாக வளர்த்துக் கொள்ளக் கூடிய சிறந்த வழி இது. உங்கள் எண்ணக் கீற்றை ஏற்றுக் கொண்டு நிஜமாக்கிக் காட்டும் சக்தி உங்கள் ஆழ்மனதிடம் உண்டு.
உங்கள் மனவலிமையையும், பலவீனத்தையும் அலசிப் பார்த்தால் உங்கள் பெரிய பலவீனம் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது தான் எனத் தெரியவரும். தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான, நல்லவிதமான எண்ணக் கீற்றை எழுதிக் கொள்ளுங்கள். நினைவில் பதிய வைக்கத் திரும்ப, திரும்ப அவற்றை சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள் அடிமனதில் இந்த எண்ணக் கீற்று உந்துவிசையாக மாறும் வரையில் இதைக் கடைப்பிடியுங்கள்.
கட்டளைகள்:
ஒன்று : என் வாழ்க்கையின் திட்டவட்டமான குறிக்கோளை அடைவதற்கான திறமை என்னிடம் உண்டு என்பதை நானறிவேன். அதைச் சாதிப்பதற்காகத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செயல்பட வேண்டுமென்று என்னை நானே வலியுறுத்திக் கொள்கிறேன். அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று இப்போதே இங்கேயே உறுதியேற்கிறேன்.
இரண்டு : என் மனதில் வியாபித்திருக்கும் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்து படிப்படியாக அதை மனம் நிஜமாக்கிக் காட்டும் என்பது எனக்குத் தெரியும். நான் எப்படிப்பட்ட மனிதனாக உயர வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதைச் சுற்றியே தினமும் அரை மணி நேரம் என் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, குறிக்கோள் பற்றிய தெளிவான சித்திரத்தைத் தீட்டிக் கொள்வேன்.
மூன்று : திட்டவட்டமான எனது வாழ்க்கை லட்சியத்தைத் தெளிவாக விளக்கி எழுதியிருக்கிறேன். அதை அடைவதற்குத் தேவையான தன்னம்பிக்கையை நான் வளர்த்துக் கொள்ளும்வரை எனது முயற்சியைத் தொடருவேன்.
நான்கு : உண்மையின் அடிப்படையிலும் நீதியின் அடிப்படையிலும் வராத எந்த அந்தஸ்தும், செல்வமும் நிலையானது அல்ல என்பதை நானறிவேன். பிறரை பற்றிய எதிர்மறையான கண்ணோட்டத்தால் வெற்றி கிடைக்காது எனக்குத் தெரியும். எனவே வெறுப்பு, குரோதம், பொறாமை, சுயநலம், பிறரின் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்துவது என்னும் இழிய குணங்களைக் களைந்துவிட்டு எல்லோருடனும் நேசமாக இருப்பேன்.
இக்கட்டளைகளை மனதில் பதிய வைத்து, முழுமனதுடனும் நம்பிக்கையுடனும் தினமும் ஒருதடவை இவற்றை சொல்லிக் கொள்ளுங்கள். இதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால், மனித சமுதாயத்தின் புகழுக்கும் வெற்றிக்கும் அபரிமிதமான பலன் கிடைக்கும் என்பது நிச்சயம். அவநம்பிக்கையுடன், சந்தேகத்துடன் கைக்கொள்ளும் போது, உங்கள் உணர்ச்சியைப் புரிந்து கொள்ளும் ஆழ்மனம் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
உங்களின் குறிக்கோளை அடைய, உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையைத் தவிர வேறு எந்த சக்தியாலும் சாதிக்க முடியாது என்பதை இன்றே உணருங்கள்.
- ப்ரியமுடன்