BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  85. சிற்பத்தின் உட்பொருள் Button10

 

 ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 85. சிற்பத்தின் உட்பொருள்

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  85. சிற்பத்தின் உட்பொருள் Empty
PostSubject: ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 85. சிற்பத்தின் உட்பொருள்   ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~  85. சிற்பத்தின் உட்பொருள் Icon_minitimeSat Jun 18, 2011 4:01 am

கல்கியின் பொன்னியின் செல்வன்

ஐந்தாம் பாகம்: தியாக சிகரம்

85. சிற்பத்தின் உட்பொருள்



சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத்தேவர், தம்மைத் திருவயிறு சுமந்து பெற்ற அன்னை செம்பியன் மாதேவியைப் பார்த்து, "அம்மா! இந்த உலகில் யுத்தப் பைத்தியம் பிடித்து அலைகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். போர் செய்யாத நாள் எல்லாம் வீண் போன வெறும் நாளாகவே அவர்களுக்குத் தோன்றுகிறது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்தாம் என் நண்பர் வந்தியத்தேவரும், பொன்னியின் செல்வரும். தாங்களோ, இறைவனைப் பற்றிப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாள் என்று கருதுகிறவர் ஆயிற்றே? தாங்களும் போர்த் தொழிலை ஆதரித்துப் பேசுவது மிக மிக ஆச்சரியமாயிருக்கிறது!" என்றார்.

அப்போது செம்பியன் மாதேவி, "என் அருமை மகனே! வேறு யார் போர்த் தொழிலை இகழ்ந்து பேசினாலும் நீ பேசக் கூடாது. பூங்குழலியும் பேசலாகாது. வல்லத்து அரசர் போர்த் தொழிலிலும் வல்லவராயிருப்பதினாலேயல்லவா நீ இன்று உயிரோடிருந்து இறைவனைத் துதிக்கும் பாடல்களை என் உள்ளமும், உடலும் உருகப் பாடுகிறாய்?" என்றார்.

"தாயே! நான் தங்கள் அருமைப் புதல்வரின் உயிரைக் காப்பாற்றியது இருக்கட்டும். அவரும், அவரைக் கரம் பிடித்த தங்கள் மருமகளும் என் உயிரைக் காப்பாற்றியதை நான் மறக்க முடியாது. பூங்குழலி அம்மையாரின் போர்க் குணம் அல்லவோ நான் இன்று உயிரோடிருப்பதற்குக் காரணமாயிருக்கிறது?" என்றான் வந்தியத்தேவன்.

"பரமேசுவரனும், துர்க்கா பரமேசுவரியும் நம் எல்லாரையும் காப்பாற்றுகிறார்கள்! அவர்களுடைய கருணை இல்லாவிட்டால், நாம் ஒருவரையொருவர் காப்பாற்றுவது ஏது?" என்றார் மதுராந்தகத்தேவர்.

"குழந்தாய்! கருணையே வடிவமான சிவபெருமானும் பலமுறை போர் செய்ய நேர்ந்தது. அன்பும் அருளும் சாந்தமும் உருக் கொண்ட ஜகன் மாதாவான துர்க்கா பரமேசுவரியும் யுத்தம் செய்வது அவசியமாயிற்று. இந்தப் புண்ணிய ஸ்தலத்திலுள்ள ஆலயத்தில் அம்பிகை அறம் வளர்த்த நாயகியாக வீற்றிருக்கிறாள். ஆயினும் ஆலயத்தின் திருச்சுற்று வீதியில் மகிஷாசுரமர்த்தினியாகவும், தரிசனம் தருகிறாள் நீ கவனித்தாயல்லவா?" என்றார்.

"ஆம், அன்னையே! கவனித்து வியந்தேன். அண்ட சராசரங்களை ஈன்றெடுத்துக் காக்கும் அன்னை ஓர் எருமை மாட்டின் தலை மீது எதற்காக நின்று காட்சி அளிக்கிறார் என்று எண்ணி அதிசயித்தேன்!" என்றார் மதுராந்தகர்.

"ஆம், ஆம்! இந்த ஆலயத்தில் உள்ள தேவி, மகிஷாசுரனை வதம் செய்து முடித்துவிட்டாள். அதனால் எருமையின் தலையில் நிற்கும் தேவியின் திருமுகத்தில் அன்பும் அருளும் குடிகொண்டிருக்கக் காண்கிறோம். மாமல்லபுரத்துக் குகைச் சிற்பங்களிலே தேவி மகிஷாசுரனுடன் போரிடுவது போல் அமைந்த சிற்பம் ஒன்று இருக்கிறது. அங்கே துர்க்கா பரமேசுவரி வீர பயங்கர ரணபத்திர காளியாகத் தரிசனம் தருகிறாள். சகலலோக மாதாவாகிய துர்க்கா பரமேசுவரி, கேவலம் ஓர் எருமை மாட்டுடன் ஏன் சண்டை போட வேண்டும். அதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் வேண்டுமா என்று வெளிப்படையாகப் பார்ப்பவர்களுக்குத் தோன்றக் கூடும். என் அருமைக் குமாரா! நம் பெரியோர்களின் உள்ளத்தில் உதயமான இத்தகைய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் உட்பொருள்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்து கொள்வதற்கு தக்க பரிபக்குவம் வேண்டும். அறிந்து கொள்ள வேண்டுமென்னும் சிரத்தையும் வேண்டும்!"

"தேவி! எங்களுக்கெல்லாம் பரிபக்குவம் இருக்கிறதோ என்னமோ, தெரியாது! ஆனால் சிரத்தை இருக்கிறது. தாங்கள் திருவாய் மலர்ந்தருளும் வார்த்தை ஒவ்வொன்றையும் சிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருக்கிறோம்! ஏன்? நமது வல்லத்து அரசருடைய ஓயாமற் சலிக்கும் கண்கள் கூடவல்லவா தங்களையே பார்த்துக் கொண்டிருக்கின்றன?" என்றார் அருள்மொழி.

இந்த வார்த்தைகள் அங்கே சிறிது கலகலப்பை உண்டாக்கின. வந்தியத்தேவன் அடிக்கடி இளைய பிராட்டியின் திருமுகத்தை நோக்குவதை அருள்மொழிவர்மர் குறிப்பிடுகிறார் என்று அறிந்து கொண்ட பெண்மணிகள் இலேசாக நகைத்தார்கள்.

செம்பியன் மாதேவி கூறினார்: "சிரத்தையுடன் கேட்பதானால் சொல்கிறேன், கேளுங்கள். நமது புராண இதிகாசங்களில் தேவாசுர யுத்தங்களைப் பற்றி நிரம்பக் கூறியிருக்கிறார்கள். இவ்வுலகில் திருமால் அவதாரம் எடுத்து ராட்சதர்களோடு சண்டையிட்டது பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். இறைவன் உலகத்தைப் படைத்த காலத்திலிருந்து தேவ சக்திகளும் அசுர சக்திகளும் போரிட்டு வருகின்றன. அசுர சக்திகளை இறைவன் ஏன் படைத்தார் என்று கேட்டால், அதற்குச் சிற்றறிவு படைத்த நம்மால் விடை சொல்ல முடியாது. இறைவனுடைய திருவிளையாடல் அது என்றுதான் கூற முடியும். தெய்வ சக்திகளும், அசுர சக்திகளும் ஓயாமல் போராடி வருகின்றன என்பது மட்டும் நிச்சயம். சில சமயம் அசுர சக்திகளின் கை மேலோங்குவது போல் காணப்படுகிறது. அவையே உலகை என்றென்றைக்கும் ஆளும் என்று தோன்றுகின்றது. சூரபத்மனும், இரணியனும் இராவணனும் எத்தனை பல்லாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்! ஆனாலும் அவர்களுக்கெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் முடிவு வந்து விட்டது."

"ஆம்; ஆம்! தேவர்களையெல்லாம் அடிபணிந்து குற்றேவல் புரிய வைத்த தசகண்ட இராவணனுக்கு முடிவு வந்தபோது, இரண்டு மனிதர்களும் ஒரு சில வானரர்களும் சேர்ந்து அவனைக் குலத்தோடு நாசமாக்கி விடவில்லையா?" என்றார் மதுராந்தகத்தேவர்.

"ஆகையால் அசுர சக்திகள் மேலோங்குவதைக் கண்டு மாந்தர்கள் மனச்சோர்வு அடைந்து விடக்கூடாது. தெய்வ சக்திகள் முடிவில் வெற்றிகொள்ளும் என்று நம்பித் தர்மத்திலும், சத்தியத்திலும் நின்று போராட வேண்டும். அப்படிப் போராடுகிறவர்களுக்குத் தெய்வமும் நிச்சயம் துணை செய்யும்?"

"அன்னையே! மகிஷாசுரனைப் பற்றிச் சொல்ல வந்தீர்கள்!" என்று பூங்குழலி ஞாபகப்படுத்தினாள்.

"ஆம்; நல்ல வேளையாக ஞாபகப்படுத்தினாய், மகளே! அசுர சக்திகள் இரண்டு வகையானவை. ஒன்று மௌடீக அசுர சக்திகள்; இன்னொன்று மதி நுட்பம் வாய்ந்த அசுர சக்திகள். மௌடீக அசுர சக்தியையே மகிஷாசுரனாக நமது முன்னோர்கள் உருவகப்படுத்தினார்கள். காட்டெருமைக்கு வெறி வந்து தறி கெட்டு ஓடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்போது அந்த எருமை யானையைவிட அதிக பலம் பெற்று விடுகிறது. எதிர்ப்பட்ட பிராணிகள் எல்லாவற்றையும் சின்னாபின்னப்படுத்தி விடுகிறது. மௌடீகமும் வெறி கொண்ட காட்டு எருமையைப் போல் வலிமை கொண்டது. மௌடீகம் சில சமயம் சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி நடத்தத் தொடங்கி விடுகிறது. இதைத்தான மகிஷாசுரனுடைய ஆட்சி என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். மகிஷாசுரன் தேவலோகச் சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தத் தொடங்கியபோது, மூன்று உலகங்களிலும் அல்லோல கல்லோலமுண்டாயிற்று. அறிவு வேண்டாம், அறிவு நூல்கள் வேண்டாம், அறிவுக் கலைகள் வேண்டாம், இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம், ஒன்றும் வேண்டாம். எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மகிஷாசுரன் கட்டளையிட்டான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாரும் நடுநடுங்கினார்கள். அவர்களில் பலர் மகிஷாசுரனுக்கு அடிபணிந்து அவனுடைய ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள். இதனால் மகிஷாசுரனுடைய அகந்தையும், மூர்க்கத்தனமும் அதிகமாயின. மௌடீகத்தோடு அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? மகிஷாசுரனுடைய கொடுமையைப் பொறுக்க முடியாமல் மூன்று உலகங்களிலும் மக்கள் ஓலமிட்டார்கள். அசுரர்களும் கூடச் சேர்ந்து அலறினார்கள். துர்க்கா பரமேசுவரி அப்போது கண் திறந்தாள். மாகாளி வடிவம் கொண்டு வந்து மகிஷாசுரனை வதம் செய்தாள். மௌடீக சக்தியைத் தெய்வீக சக்தி வென்றது. மூன்று உலகங்களும் மௌடீக அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றன. தேவர்களும் முனிவர்களும் அசுரர்களும் கூடப் பெருமூச்சு விட்டுத் துர்க்கா பரமேசுவரியை வாழ்த்தி வணங்கினார்கள்.

குழந்தைகளே! இப்போதுங்கூட இவ்வுலகில் மௌடீக அசுர சக்திகள் இல்லாமற் போகவில்லை. இந்தப் புண்ணிய பரத கண்டத்தின் வடமேற்குத் திசைக்கு அப்பால் மௌடீக அசுர சக்திகள் சில தோன்றியிருப்பதாக அறிகிறேன். அவர்கள் மூர்க்காவேசத்துடன் போர் புரிந்து நகரங்களைச் சூறையாடிக் குற்றமற்ற மக்களைக் கொன்று கோயில்களையும் விக்கிரகங்களையும் உடைத்துத் தகர்த்து நாசமாக்குகிறார்களாம். அவர்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய பெரிய சக்கரவர்த்திகள் இப்போது வடநாட்டில் யாரும் இல்லையாம். இந்தத் தெய்வத் தமிழ்நாட்டுக்கு அத்தகைய கதி நேராதிருக்கட்டும். அப்படி நேர்வதாயிருந்தால், வீரமறக் குலத்தில் பிறந்த நீங்கள் அந்த அசுர சக்திகளுடன் போராடச் சித்தமாயிருக்க வேண்டுமல்லவா?"

"கட்டாயம் சித்தமாயிருப்போம், தாயே! மற்றொரு வகை அசுர சக்திகளைப்பற்றியும் சொல்லுங்கள்!" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"மற்றொரு வகை அசுரர்கள் அறிவுக் கூர்மையுள்ளவர்கள். அந்த அறிவைக் கெட்ட காரியங்களில் பயன்படுத்துகிறவர்கள். அவர்கள் தவம் செய்து வரம் பெறுவார்கள். அதையும் துஷ்ட காரியங்களுக்கே பயன்படுத்துவார்கள். திரிபுரரர்கள் என்ன செய்தார்கள்? ஒவ்வொருவரும் ஓர் உலகத்தையே உண்டாக்கிக் கொண்டார்கள். வானத்தில் பறந்து சென்று நாடு நகரங்களின் மீது இறங்கி நிர்மூலமாக்கினார்கள். சூரபத்மன் எத்தனை தடவை அவனுடைய தலையைக் கொய்தாலும் புதிய தலை அடையும் ஆற்றலைப் பெற்றிருந்தான். இராவணன், இந்திரஜித்து முதலிய ராட்சதர்கள் வானத்தில் மேகங்களில் மறைந்து கொண்டு கீழே உள்ளவர்கள் மீது அஸ்திரங்களைப் பொழியும் சக்தி பெற்றிருந்தார்கள். இத்தகைய சூழ்ச்சித் திறமை வாய்ந்த அசுர சக்திகளையே 'முயலகன்' என்னும் அசுரனாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தியிருக்கிறார்கள். இறைவன் ஆனந்த நடனம் புரியும் போதெல்லாம் தம்முடைய காலடியில் அடக்கி வைத்திருக்கும் முயலகன் மீதும் சிறிது ஞாபகம் வைத்துக் கொள்ளுகிறார். கொஞ்சம் கவனக்குறைவாயிருந்தால் முயலகன் கிளம்பி விடுவான். சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் இருந்து அசுர சக்திகளுடன் தெய்வீக சக்திகள் போராடி வருகின்றன என்பதையே முயலகன் நமக்குத் தெரியப்படுத்துகிறான். ஆகையால், என் அருமை மக்களே! யுத்தமே கூடாது என்று நாம் எப்படிச் சொல்லி விட முடியும்?"

"தேவி! இதுவரையில் எங்களுக்கு விளங்காமலிருந்த பல விஷயங்களை இன்று தெரிந்துகொண்டோ ம். எங்களுக்கு என்ன கட்டளை இடுகிறீர்கள்?" என்று பொன்னியின் செல்வர் கேட்டார்.

"குழந்தைகளே! நீங்கள் எப்போதும் தெய்வீக சக்திகளின் பக்கம் நின்று போராடுங்கள் என்று மட்டுமே நான் சொல்ல முடியும். உங்களுக்குக் கட்டளையிட முடியாது. உங்களுடைய அந்தராத்மாதான் உங்களுக்குக் கட்டளையிட முடியும். அந்தக் கட்டளையைக் கேட்டு நடவுங்கள். சற்று முன்னால், இந்தச் செந்தமிழ் நாட்டைச் சுற்றியுள்ள கடல்களில் கப்பல் கொள்ளைக்காரர்கள் மிகுந்துவிட்டதாகச் சொன்னீர்கள். அதனால் தமிழ்நாட்டு வர்த்தகர்கள் பெரிதும் கஷ்ட நஷ்டங்களை அடைவதாகவும் கூறினீர்கள். அந்தக் கொள்ளைக்காரர்களை ஒழித்து நம் நாட்டு வர்த்தகர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது இராஜ குலத்தில் பிறந்த உங்கள் தர்மம். இன்று கடல் கொள்ளைக்காரர்களுக்கு இடங்கொடுத்து விட்டால் நாளைக்கு அவர்கள் இந்த தெய்வத் தமிழ்நாட்டிற்குள்ளேயும் பிரவேசித்து விடமாட்டார்களா? இன்று கைலாச வாசியாகிச் சிவபெருமானுடைய சந்நிதியில் சிவகணங்களுடன் வீற்றிருக்கும் என் கணவர் ஜீவிய வந்தராயிருந்தால், அவரும் உங்களுக்கு இதைத்தான் சொல்லியிருப்பார்!"

"தேவி! தங்கள் திருஉள்ளத்தை அறிந்து கொண்டோ ம் அதன்படியே நடந்து கொள்வோம்!" என்றார் இளவரசர் அருள்மொழிவர்மர்.

"பொன்னியின் செல்வ! நீ என்னுடைய விருப்பத்தை மதித்து நடப்பதாயிருந்தால், இன்னும் ஒன்று இப்பொழுது சொல்ல விரும்புகிறேன்!" என்றார் அந்தப் பெரு மூதாட்டியார்.

"தேவி! தங்கள் விருப்பத்துக்கு மாறாக இதுவரை நான் நடந்ததாக நினைவில்லையே? அப்படி ஏதேனும் செய்திருந்தால் மன்னியுங்கள்!"

"குழந்தாய்! இதற்கு முன்னால் நீ நடந்து கொண்டதெல்லாம் வேறு. இனிமேல் நடக்கப் போவது வேறு. இது வரையில் நீ அரண்மனையின் செல்லக் குழந்தையாக இருந்தாய். உன் விருப்பம் போல் நாங்கள் நடந்தோம். எங்கள் விருப்பத்தை நீயும் நிறைவேற்றி வைத்தாய். இனி, நீ இந்த மாநிலத்தை ஆளும் மன்னர் மன்னன் ஆகப்போகிறாய். முடிசூட்டு விழா நடந்த பிறகு, உன் விருப்பத்தின்படிதான் நாங்கள் எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும்."

"தாயே! அப்படிச் சொல்ல வேண்டாம். இனியும் நான் உங்கள் செல்லக் குழந்தையாகவே இருந்து வருவேன் உங்கள் விருப்பப்படியே நடப்பேன்."

"அப்படியானால், இதைக் கேள்! இந்தப் புராதனமான சோழர் குலம் வாழையடி வாழையாகத் தளிர்த்து வளர வேண்டும். இராஜகுலத்தில் பிறந்தவர்கள் எப்போதும் வீர சொர்க்கம் அடையத் தயாராயிருக்க வேண்டியது தான். ஆனால் குலம் வளர்வதற்கும், முன்ஜாக்கிரதையாக ஏற்பாடு செய்ய வேண்டும். உன் தமையன் ஆதித்த கரிகாலன் கலியாணம் செய்து கொள்ளாமலே காலமாகி விட்டான். சோழ குலம் தழைப்பதற்கு நீ ஒருவன்தான் இருக்கிறாய்! ஆகையால் நீ மறுபடியும் கப்பலேறிக் கடல் கடந்து வெற்றித் திருமகளைத் தேடிப் போவதற்கு முன்னால் குலந்தழைப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்யவேண்டும். உன் மகுடாபிஷேகத்தோடு சேர்த்துத் திருமணத்தையும் வைத்துக் கொள். வானதியைப் போன்ற பெண்ணை மனைவியாகப் பெற நீ எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும். இந்தப் பெண்ணரசியின் மாங்கலியபலம் நீ போகுமிடமெல்லாம் மந்திரக் கவசம் போலிருந்து உன்னைப் பாதுகாக்கும்!"

"தேவி! அந்தக் கவசத்தை அணிய நான் சித்தமாகத்தானிருக்கிறேன். வானதிதான் மறுதலிக்கிறாள். 'சிங்காதனம் ஏறமாட்டேன்; சபதம் செய்திருக்கிறேன்' என்று பிடிவாதம் பிடிக்கிறாள்!" என்றார் இளவரசர்.

யாரும் எதிர்பாராத விதமாகப் பூங்குழலி அப்போது தலையிட்டு, "கொடும்பாளூர் இளவரசியின் பேச்சை அப்படியே நம்பிவிடவேண்டாம். நாமெல்லாரும் சேர்ந்து மேலும் உபசாரம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். பொன்னியின் செல்வர் இன்னும் கொஞ்சம் கெஞ்சிக் கேட்க வேண்டும்!" என்று சொல்லி நகைத்தாள்.

இது வேடிக்கைப் பேச்சு என்று எண்ணி மற்றவர்களும் சிரித்தார்கள். ஆனால் வானதி மட்டும் விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.

"அசட்டுப் பெண்ணே! இது என்ன? எதற்காக நீ இப்படி விம்மி அழுகிறாய்?" என்று குந்தவை கேட்டுவிட்டு, வானதியின் கரத்தைப் பிடித்து அழைத்துக் கொண்டு கீழே போனாள்







Back to top Go down
 
~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 85. சிற்பத்தின் உட்பொருள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 8. "ஐயோ! பிசாசு!"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 13. "பொன்னியின் செல்வன்"
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 2. மோக வலை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 22. வேளக்காரப் படை
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 29. யானைப்பாகன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Ponniyin Selvan-
Jump to: